நான் யார்?
உள்ளுர் ஊழியத்திற்கான தலைமைக் குழுவின் உறுப்பினராக, குழு விவாதத் தலைவர்களாக எங்களுடன் சேர மற்றவர்களை அழைப்பது எனது வேலையின் ஒரு பகுதியாகும். என்னுடைய அழைப்பிதழ்கள், தேவைப்படும் நேர அவகாசத்தை விவரித்து கூட்டங்கள் மற்றும் வழக்கமான தொலைபேசி அழைப்புகளின் போது தலைவர்கள் தங்கள் சிறிய குழு பங்கேற்பாளர்களுடன் ஈடுபட வேண்டிய வழிகளை கோடிட்டுக் காட்டியது. ஒரு தலைவராக ஆவதற்கு அவர்கள் செய்யும் தியாகத்தை உணர்ந்து, அவர்களை அதிகமாய் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. சில வேளைகளில், “இதை நான் கனமாக எண்ணுகிறேன்” என்னும் அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தும். நிராகரிப்பதற்கான நியாயமான காரணங்களை மேற்கோள் காட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த அனைத்திற்கும் நன்றி செலுத்துவதைத் திருப்பிக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக விவரித்தனர்.
கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவையான உபகரணங்களைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, தாவீது இதேபோன்ற பிரதிபலிப்பைக் கொண்டிருந்தார்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்?” (1 நாளாகமம் 29:14). தாவீதின் இந்த தயாள குணம், தன்னுடைய வாழ்க்கையிலும் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையிலும் தேவனுடைய கிரியைகளின் அடிப்படையில் உந்தப்பட்டது. அவருடைய பணிவினிமித்தம், நாங்கள் “அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்” (வச. 15) என்று அவர் தன்னை தாழ்த்துகிறார்.
நாம் நம்முடைய நேரம், திறமை அல்லது பொருளாதாரம் என்று எதை ஆண்டவருக்காய் கொடுத்தாலும், அதை நம்முடைய வாழ்க்கையில் கொடுத்த தேவனுக்கு நாம் நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. நம்மிடம் உள்ள அனைத்தும் அவருடைய கையிலிருந்து வருகிறது (வச. 14). பதிலுக்கு, நாம் அவருக்கு நன்றியுடன் கொடுக்க முடியும்.
விசுவாசத்தில் பார்த்தல்
எனது காலை நடைப்பயணத்தின் போது, ஏரியின் நீரோடை மீது தன் கதிர்களை பாய்ச்சிய சூரியன் ஒரு அழகான காட்சியை ஏற்படுத்தியிருந்தது. நான் புகைப்படம் எடுப்பதற்காக என் கேமராவை நிலைநிறுத்தியபோது என் நண்பரை சற்று எனக்காக காத்திருக்கச் சொன்னேன். சூரியன் ஒளி மின்னியதால் நான் ஷாட்டை எடுப்பதற்கு முன்பு எனது தொலைபேசியின் திரையில் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை முன்பே செய்ததால், இது ஒரு சிறந்த படமாக அது இருக்கும் என்று உணர்ந்தேன். நான் என் நண்பரிடம், “இப்போது இதை நம்மால் பார்க்க முடியாது, ஆனால் இதுபோன்ற படங்கள் எப்போதும் நன்றாக வரும்” என்று சொன்னேன்.
நம்முடைய இந்த வாழ்க்கையில் விசுவாசத்தில் நடப்பது பெரும்பாலும் அந்த படத்தை எடுப்பது போன்றதாகும். நீங்கள் எப்போதும் திரையில் விவரங்களைப் பார்க்க முடியாது, ஆனால் அதற்காக அது நல்ல காட்சி இல்லை என்று அர்த்தமில்லை. தேவன் கிரியைசெய்வதை நீங்கள் எப்போதும் பார்க்க முடியாது, ஆனால் அவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்பலாம். எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் எழுதியது போல், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1). தேவன் நம்முடைய வாழ்க்கையில் என்ன கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறியமுடியாதபட்சத்தில், நாம் விசுவாசத்தினால் தேவன் மீது நம்பிக்கை வைக்கிறோம்.
நாம் காணமுடியாத காட்சிகள் நம்மை படம் எடுப்பதிலிருந்து தடுப்பதில்லை. அது நம்மை அதிகமாக ஜெபிக்கவும் தேவனின் வழிநடத்துதலையும் நாடவும் செய்யலாம். கடந்த காலத்தில் விசுவாசத்தில் நடந்த உதாரணங்களையும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் உதாரணங்களையும் அடிப்படையாய் வைத்து நம் விசுவாச பயணத்தை தொடர்ந்து நடத்தமுடியும் (வச. 4-12). கடந்த காலத்தில் கிரியை செய்த அதே ஆண்டவர், இப்போதும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
அனைத்து துதிகளுக்கும் பாத்திரர்
ஃபெரான்டே மற்றும் டீச்சர் குழுவினர், சிறந்த பியானோ டூயட் குழுவாக பலர் கருதுகின்றனர். அவர்களின் கூட்டு முயற்சி அழகான இசையை வருவித்தது. எனவே அவர்களின் பாணி, நான்கு கைகள் ஆனால் ஒரே சிந்தை என்று புகழப்பட்டது. அவர்களின் இசையைக் கேட்கிறவர்கள், அவர்கள் எந்த அளவிற்கு கடினமாகப் பிரயாசப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறியக்கூடும்.
ஆனால் அதுமட்டுமில்லை. அவர்கள் அதை நேசித்து செய்கிறார்கள். அவர்கள் 1989இல் ஓய்வு பெற்ற பிறகும், ஃபெரான்டே மற்றும் டீச்சர் எப்போதாவது ஒரு உள்ளூர் பியானோ ஸ்டோரில் அவ்வப்போது எதிர்பாராத இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள். அவர்கள் இசையை முழுவதுமாய் விரும்பினார்கள்.
தாவீதும் இசையமைப்பதை விரும்பினார். ஆனால் அவர் தனது பாடலுக்கு ஒரு உயர்ந்த நோக்கத்தைக் கொடுக்க தேவனோடு இணைந்து செயல்பட்டார். அவரது சங்கீதங்கள் அவரது போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையும், கர்த்தரைச் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும்கூட, அவரது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் குறைபாடுகளுக்கு மத்தியில், அவர் ஏறெடுத்த துதிகள் இருள் சூழ்ந்த நேரத்திலும் அவருடைய மகத்துவத்தைப் பிரதிபலித்து ஆவிக்குரிய சுருதியை நேர்த்தியாக்கியது. தாவீதின் துதிகளுக்கு பின்பாக இருக்கும் அவருடைய மனதை சங்கீதம் 18:1 பிரதிபிலிக்கிறது: என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
மேலும் தாவீது, “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்” (வச. 3) என்றும் “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்(டேன்)” (வச. 4) என்று தேவனிடத்தில் திரும்புகிறார். நம்முடைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாமும் அவ்வாறே நம் தேவனைத் துதிக்கவும் மகிமைப்படுத்தவும் நம் இருதயங்களை உயர்த்துவோம். அவரே சகல துதிகளுக்கும் பாத்திரர்!
நன்றிசெலுத்தும் ஆசீர்வாதம்
2016 ஆம் ஆண்டில், வாண்டா டென்ச் தனது பேரனை நன்றி தெரிவிக்கும் விருந்துக்கு அழைப்பதாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால் அவருடைய பேரன் தன்னுடைய தொலைபேசி என்னை சமீபத்தில் மாற்றியதை அவர் அறியவில்லை. அதற்குப் பதிலாக ஜமால் என்ற வேறொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி போய்விட்டது. ஜமால் தான் யார் என்பதை தெளிவுபடுத்திய பிறகும், நான் இரவு உணவிற்கு உங்களோடு சேர்ந்துகொள்ளலாமா என்று கேட்டார். “நிச்சயமாக” என்று வாண்டா அவரை வரவேற்றார். ஜமால் குடும்ப விருந்தில் சேர்ந்தார். அது அவருக்கு வருட பாரம்பரியமாகிவிட்டது. ஒரு தவறான அழைப்பு, வருடாந்திர ஆசீர்வாதமாக மாறியது.
முகமறியாத புதிய நபரை இரவு உணவிற்கு அழைத்த வாண்டாவின் கருணை, லூக்காவின் நற்செய்தியில் இயேசுவின் ஊக்கத்தை எனக்கு நினைவூட்டுகிறது. ஒரு பிரபலமான பரிசேயரின் வீட்டில் இரவு விருந்தின் போது (லூக்கா 14:1), அழைக்கப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்கள் தங்களுக்கான இருக்கைக்காய் எவ்விதம் போராடினார்கள் என்பதையும் இயேசு பார்த்தார் (வச. 7). விருந்துபண்ணுகிறவனிடம், மற்றவர்கள் பதிலுக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்த்து அவர்களை விருந்துக்கு அழைத்தால் ஆசீர்வாதம் குறைவாய் இருக்கும் என்கிறார் (வச. 12). ஆனால் ஏழைகளையும் இயலாதவர்களையும் அழைப்பித்து அவர்களுக்கு விருந்துபண்ணினால், மேன்மையான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கக்கூடும் (வச. 14) என்று சொல்லுகிறார்.
வாண்டாவைப் பொறுத்தவரை, நன்றி தெரிவிக்கும் இரவு உணவிற்கு ஜமாலை தனது குடும்பத்துடன் சேர அழைத்ததன் விளைவாக நீடித்த நட்பின் எதிர்பாராத ஆசீர்வாதம் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. நாம் மற்றவர்களை அணுகும்போது, நாம் எதைப் பெறலாம் என்னும் நோக்கத்தோடு அல்லாமல், கிறிஸ்துவின் அன்பு நம்மூலமாய் வழிந்தோடுவதால், நாம் அதிக ஆசீர்வாதத்தையும் ஊக்கத்தையும் பெறுகிறோம்.
பிரகாசிக்கும் சுடர்கள்
அந்த நகரத்தைப் பற்றி நான் முதலில் கவனித்தது அதன் ஏழ்மை. அடுத்து, அதன் மதுபானக் கடைகள், "சேரிகள்," மற்றும் மக்களிடமிருந்து பணத்தை சம்பாதிக்க என்னும் நுகர்வோர் உற்பத்தியாளர்களுக்கான மாபெரும் விளம்பர பலகைகள். நான் இதற்கு முன்பு இதுபோன்ற பல நகரங்களுக்குச் சென்றிருந்தபடியால், இந்த நகரம் ஒரு புதிய தாழ்வை எட்டியது போல் எனக்குத் தோன்றியது.
இருப்பினும், மறுநாள் காலை ஒரு டாக்ஸி டிரைவரிடம் பேசியபோது என் மனநிலை பிரகாசமாக இருந்தது. “எனக்கு உதவ விரும்பும் நபர்களை எனக்கு அனுப்புமாறு நான் ஒவ்வொரு நாளும் தேவனிடம் கேட்கிறேன்,” என்று அவர் கூறினார். “அடிமைகள், விபச்சாரிகள், உடைந்த வீடுகளில் இருப்பவர்கள் கண்ணீருடன் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூறுவார்கள். நான் காரை நிறுத்தி, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்காக நான் ஜெபம் செய்வேன். இது என்னுடைய ஊழியம்” என்று அவர் சொன்னார்.
நம்முடைய விழுந்துபோன உலகத்திற்கு இயேசுவின் சந்ததிகளைக் குறித்து விவரித்த பிறகு (பிலிப்பியர் 2:5-8), அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்ந்து (வச. 13), “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு” (வச. 16), “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு” (வச. 15), “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற” (வச. 14) அனுபவத்திற்குள் நாம் கொண்டுவரப்படுகிறோம். அந்த டாக்ஸி டிரைவரைப் போல, இயேசுவின் ஒளியை இருளுக்குள் கொண்டு வருவோம்.
கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவர் உலகை மாற்றுவதற்கு உண்மையாக வாழ வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் டாசன் கூறுகிறார். ஏனெனில் அந்த வாழ்க்கையில், “தெய்வீக வாழ்வின் அனைத்து மர்மங்களும் அடங்கியுள்ளன” என்று கூறுகிறார். உலகின் இருண்ட இடங்களில் அவருடைய ஒளியைப் பிரகாசித்து, கிறிஸ்துவின் சந்ததியாய் உண்மையாக வாழ நமக்கு அதிகாரம் அளிக்க கர்த்தருடைய ஆவியானவரிடம் கேட்போம்.