அவர் பல விஷயங்களை நன்றாக செய்தார். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. அனைவரும் அதை பார்த்துவிட்டனர். ஆயினும்கூட, அவர் தனது பெரும்பாலான பங்கை நிறைவேற்றுவதில் மிகவும் திறம்பட இருந்ததால், அவருடைய கோபப்படும் பிரச்சனை அதிக அளவில் கவனிக்கப்படவில்லை. அவர் அந்த குறையை சரிசெய்ய முயற்சிக்கவில்லை. அதின் விளைவாக, பலர் காயப்படவேண்டியிருந்தது. அதினிமித்தம், அந்த கிறிஸ்தவ சகோதரன் துவங்கிய அந்த வியாபாரம் வெகுவிரைவில் முடிவுக்கு வரவேண்டியிருந்தது. 

ஆதியாகமம் 4இல், அன்பில் ஒருவரின் பாவத்தை எதிர்கொள்வது என்பதன் சரியான காட்சியை தேவன் கொடுக்கிறார். காயீன் எரிச்சலடைந்தான். அவன் நிலத்தைப் பயிரிடுகிறவனாயிருந்தபடியால், அவன் “நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்” (வச. 3). ஆனால் அவனுடைய காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல என்பதை கர்த்தர் தெளிவுபடுத்தினார். காயீனுடைய காணிக்கை நிராகரிக்கப்பட்டது. அவனுக்கு “மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது” (வச. 5). கர்த்தர் காயீனை நோக்கி, “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?” (வச. 6) என்று கேட்கிறார். அவனுடைய பாவ வழிகளை விட்டு விலகி, சரியானதை செய்யும்படிக்கு கர்த்தர் அவனுக்கு வலியுறுத்துகிறார். துரதிர்ஷ்டவசமாக, காயீன் கர்த்தருடைய வார்த்தைகளைப் புறக்கணித்து ஒரு பயங்கரமான பாவச் செயலை செய்தான் (வச. 8).

பாவமான நடத்தைகளிலிருந்து பிறரை மனந்திரும்பும்படி நாம் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், நாம் அவர்களை இரக்கத்துடன் எதிர்கொள்ள முடியும். நாம் “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” நடந்தால், நாம் கிறிஸ்துவைப் போல மாற முடியும் (எபேசியர் 4:15). நாம் கேட்பதற்கு தேவன் காதுகளைக் கொடுத்துள்ளபடியால், மற்றவர்களிடமிருந்து கடினமான வார்த்தைகளையும் கேட்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளலாம்.