“கிறிஸ்தவம் எனக்கானது அல்ல. அது சலிப்பு தட்டுகிறது. நான் சாகசம் செய்ய விரும்புகிறேன். அதுதான் எனக்கு வாழ்க்கை” என்று ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார். இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் வரும் நம்பமுடியாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த ஆச்சரியமான சாகசம் வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. இயேசுவைப் பற்றியும் அவரில் உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அவளிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டேன்.

தேவகுமாரனாகிய இயேசுவை அறிந்து, அவருடன் நடந்த ஆச்சரியமான சாகசத்தை விவரிக்க வெறும் வார்த்தைகள் போதாது. ஆனால் எபேசியர் 1ல், அப்போஸ்தலனாகிய பவுல், அவருடனான வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த காட்சியை நமக்குத் தருகிறார். தேவன் நமக்கு நேரடியாக பரலோகத்திலிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார் (வச. 3), தேவனுடைய பார்வையில் பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற தன்மை (வச. 4), மற்றும் அவருடைய சொந்த குடும்பத்தின் அங்கத்தினராய் நம்மை தெரிந்துகொள்ளுதல் (வச. 5). அவருடைய மன்னிப்பு மற்றும் கிருபை (வச. 7-8), அவருடைய சித்தத்தின் மர்மத்தைப் புரிந்துகொள்வது (வச. 9) மற்றும் “அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு” (வச. 12) ஒரு புதிய நோக்கத்துடன் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் நமக்குள் கிரியை நடப்பிக்கிறார் (வச. 13). மேலும் அவர் தேவனுடைய பிரசன்னத்தில் நித்தியவாழ்விற்கு நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார் (வச. 14).

இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் பிரவேசிக்கும்போது, அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதும், அவரைப் பின்தொடர்வதும் மிகப்பெரிய சாகசமாகும். மெய்யான வாழ்க்கை வாழுவதற்கு நாம் ஒவ்வொருநாளும் அவரை தேடுவோம்.