எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில்படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும்.
ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார்.
மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார்.
சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பைவிட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும்கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பதுபோல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம்.
உங்களுக்காக கடவுளின் பாதுகாப்பை நினைவில்கொள்ள இது உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது? அவருடைய கவனிப்பை நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்?
அன்புள்ள தேவனே, என் மீதான உம்முடைய ஆச்சரியமான பாதுகாப்பிற்காய் நன்றி. உமது மென்மையான பராமரிப்பில் பாதுகாப்பாக இளைப்பாற எனக்கு உதவிசெய்யும்.