எனது குழந்தைப் பருவத்தில் இருந்த உணவகத்தின் நெறிமுறைகள் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் சமூக மற்றும் இன இயக்கவியலுக்கு இசைவாக இருந்தன. சமையலறை உதவியாளர் மேரி, சமையல்காரர் மற்றும் என்னைப் போன்று பாத்திரங்களைக் கழுவுபவர்கள் எல்லாம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் உணவுபரிமாறும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெள்ளையர்கள். கறுப்பின வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். ஆனால் அவர்கள் அதை பின் வாசலில் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும். இத்தகைய கொள்கைகள் அந்த சகாப்தத்தில் கறுப்பர்களின் சமத்துவமற்ற சிகிச்சையை வலுப்படுத்தியது. அந்த காலத்தைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், தேவனின் சாயலில் உருவாக்கப்பட்ட மக்களாக நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதில் இன்னும் வளர்ச்சிக்கு இடம் உள்ளது.

ரோமர் 10:8-13 போன்ற வேதப்பகுதிகள், தேவனுடைய குடும்பத்திற்கு அனைவருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது. அங்கே பின் கதவு இல்லை. சுத்திகரிப்பு மற்றும் மன்னிப்புக்காக இயேசுவின் மரணத்தை நம்புவதன் மூலம் அந்த வாசலின் வழியாய் எவரும் பிரவேசிக்கலாம். இந்த மறுரூப அனுபவத்திற்கு வேதம் கொடுக்கும் பெயர் “இரட்சிப்பு” (வச. 9,13). உங்கள் சமூகசூழ்நிலை அல்லது இனநிலை அல்லது மற்றவர்களின் நிலை ஆகியவை சமன்பாட்டிற்கு காரணியாக இல்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (வச. 11-12). இயேசுவைக் குறித்த வேதத்தின் சாட்சியை நீங்கள் உங்கள் இருதயத்தில் நம்புகிறீர்களா? இந்த குடும்பத்திற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்!