என் அம்மா டோரதி நல்ல ஆரோக்கியத்துடன் எப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை என்னால் யோசிக்கமுடியவில்லை. பல ஆண்டுகளாக உடையக்கூடிய நீரிழிவு நோயாளியாக, அவரது இரத்த சர்க்கரை பெருமளவில் ஒழுங்கற்றதாக இருந்தது. சிக்கல்கள் உருவாகி, அவரது சேதமடைந்த சிறுநீரகங்களுக்கு நிரந்தர டயாலிசிஸ் தேவைப்பட்டது. நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு காரணமாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. அவர் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
ஆனால் அவரது சரீரம் சிகிச்சையை அனுமதிக்காததால், அவருடைய ஜெப வாழ்க்கை இன்னும் அதிகரிக்கத்துவங்கியது. தேவனின் அன்பை மற்றவர்கள் அறியவும் அனுபவிக்கவும் மணிக்கணக்காக ஜெபித்தார். வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் அவருக்கு இனிமையாக தெரிந்தது. அவரின் கண்பார்வை மங்குவதற்கு முன்பு, அவர் தன் சகோதரி மார்ஜோரிக்கு 2 கொரிந்தியர் 4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒரு கடிதம் எழுதினாள்: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16).
மனம் தளருவது எவ்வளவு இயல்பானது என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 கொரிந்தியர் 11இல், அவர் தன்னுடைய ஜீவியத்தை அபாயங்கள், வலிகள் மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகவே வெளிப்படுத்துகிறார் (வச. 23-29). ஆனாலும் அவர் அந்த “தொல்லைகளை” தற்காலிகமானதாகவே கருதினார். நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நம்மால் பார்க்க முடியாத நித்தியமானவைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி அவர் நம்மை ஊக்குவித்தார் (4:17-18).
நமக்கு என்ன நடந்தாலும், நம் அன்பான பரமபிதா ஒவ்வொரு நாளும் நம் உள்ளான சுத்திகரிப்பை தொடர்ச்சியாய் செய்கிறார். அவர் நிச்சயமாய் நம்மோடிருக்கிறார். அவர் கொடுத்த ஜெபம் என்னும் வரத்தின் மூலம் அவர் நமக்கு மிக அருகாமையில் வந்திருக்கிறார். மேலும், அவர் நம்மைப் பலப்படுத்தி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் அளித்த வாக்குறுதிகள் மெய்யானவைகள்.
நீங்கள் சோர்வடைய அல்லது “மனம் தளர” என்ன காரணம்? எந்த வேதவசனங்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கின்றன?
விலையேறப்பெற்ற பிதாவே, என் மீதான உங்களின் மெய்யான அன்புக்கும், உமது பிரசன்னத்தின் நிச்சயத்திற்கும் உமக்கு நன்றி.