போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது.
தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).
நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.
தேவன் செய்த எந்த எதிர்பாராத காரியத்தை நீங்கள் சாட்சியிட்டிருக்கிறீர்கள்? அவருக்கு உங்களை எந்த விதத்தில் ஆயத்தமாய் அடையாளப்படுத்தப் போகிறீர்கள்?
அன்பான தகப்பனே, உம்முடைய ஆச்சரியமான வழிகளுக்காய் நன்றி. உமக்கு பிரியமான காரியங்களை நான் செய்யும்படிக்கு, உம்மை இன்று நெருக்கமாய் பின்பற்ற எனக்கு உதவிசெய்யும்.