என் மாமியாரின் பிறந்தநாளுக்கு சரியான பரிசைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்: கை வளையலில் அவளுக்கு பிடித்தமான கல் பதிக்கப்பட்டிருந்தது! ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிப்பது எப்போதுமே ஒரு முழுமையான மகிழ்ச்சி. ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவையான பரிசு நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்ன செய்வது? நம்மில் பலர் ஒருவருக்கு மன அமைதி, ஓய்வு அல்லது பொறுமையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றை விலை கொடுத்து வாங்கி பரிசுக்காகிதத்தில் சுற்றிக்கொடுப்பது சாத்தியமா?
இதுபோன்ற பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு வாங்கிக்கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால் மாம்ச ரூபத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு பரிசைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுவே சமாதானம் என்னும் பரிசாகும். இயேசு பரமேறி செல்லுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணுகிறார்: இவர் “உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்றும் சொல்லுகிறார். அவர்களுடைய இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதற்காக, இயேசு அவர்களுக்கு தன்னுடைய சமாதானத்தை விட்டுச் சென்றார். அவரே தேவனோடும், மற்றவர்களோடும், நமக்குள்ளும் கிரியை செய்யும் சமாதானம்.
நாம் விரும்புகிறவர்களுக்கு பொறுமையையோ அல்லது சரீர ஆரோக்கியத்தையோ நாம் பரிசாகக் கொடுக்க முடியாது. வாழ்க்கையின் போராட்டங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அவசியப்படும் சமாதானத்தையும் அவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நிலையான சமாதானத்தை அருளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்களிடத்தில் நாம் பகிர்ந்துகொள்ள முடியும்.
இயேசு உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு சமாதானத்தைக் கொண்டுவந்தார்? அவரை யாருக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்?
இயேசுவே, என்னுடைய வாழ்க்கையில் என்னை தேற்றக்கூடிய நிரந்தரமான சமாதானத்தை எனக்கு அருளியமைக்காய் உமக்கு நன்றி.