“என் மகனுக்கு உன்னைத் தெரியுமா?” என்ற பிரபல கட்டுரையில் விளையாட்டு எழுத்தாளர் ஜொனாதன் ஜார்க்ஸ் டெர்மினல், புற்றுநோயுடன் அவர் போரிடுவதையும், மற்றவர்கள் தனது மனைவியையும் இளம் மகனையும் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற தனது ஏக்கத்தையும் எழுதியிருந்தார். முப்பத்தி நான்கு வயதான அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அக்கட்டுரையை எழுதினார். விசுவாசியான ஜார்க்ஸ், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆனால் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பு, விதவைகளையும் திக்கற்றவர்களையும் ஆதரிக்கும் வேதப்பகுதியை அவருக்கு வாசித்துக் காண்பித்திருக்கிறார் (யாத்திராகமம் 22:22; ஏசாயா 1:17; யாக்கோபு 1:27). மேலும் அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளில், “நான் உங்களை பரலோகில் பார்க்கும்போது, நான் கேட்கப்போவது ஒன்றே ஒன்றுதான் – என் மகனுக்கும் என் மனைவிக்கும் நீங்கள் நல்லவராக இருந்தீர்களா? . . . என் மகனுக்கு உங்களைத் தெரியுமா?” என்று எழுதுகிறார்.
“யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா” என்று தாவீது ஆச்சரியமாய் கேட்கிறானாம் (2 சாமுவேல் 9:1). அப்போது இரண்டு கால்களும் முடமான மேவிபோசேத் (வச. 3) என்று யோனத்தானின் குமாரன் ஒருவன் இருக்கிறான் என்று அவனை ராஜாவுக்கு முன்பு கொண்டுவந்தார்கள். தாவீது அவனைப் பார்த்து, “உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்” (9:7). தாவீது மேவிபோசேத்து என்று ஒருவன் இருக்கிறான் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவனுக்கு பரிவு காண்பிக்க தீர்மானிக்கிறான் (பார்க்க: 19:24-30).
இயேசு நம்மை அவர் நேசிப்பதுபோல் மற்றவர்களை நாம் நேசிக்கும்பொருட்டு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (யோவான் 13:34). அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்யும்போது, நாமும் மற்றவர்களை அறியவும் நேசிக்கவும் பிரயாசப்படுவோம்.
மற்றவர்களை நீங்கள் எந்த அளவிற்கு ஆழமாய் அறிந்துகொள்ளமுடியும்? தேவன் உங்களை நேசிக்கிற விதமாய் அவர்களை நீங்கள் நேசிப்பது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?
பரலோகப் பிதாவே, மற்றவர்களை அறிந்து அவர்களை நேசிப்பதின் மூலம் உம்மை கனப்படுத்த எனக்கு உதவிசெய்யும்.