2001 ஆம் ஆண்டில், கிறிஸ்டோபர் டஃப்லி என்ற குறைமாத குழந்தை உயிர்பிழைத்து மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தியது. அவனுடைய அத்தை அவனை தத்தெடுக்கும் வரை ஐந்து மாதங்களாக அவன் மருத்துவ கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. நான்கு வயது கிறிஸ்டோபர் பார்வையற்றவனாகவும் மனவளர்ச்சி குன்றியவனாகவும் இருந்தாலும், சரியான இசை சுருதியுடன் இருப்பதை ஒரு ஆசிரியர் உணர்ந்தார். சரியாய் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தேவாலயத்தின் பலிபீடத்தில் கிறிஸ்டோபர் நின்று, “என் இதயத்தின் கண்களைத் திறந்தருளும்” என்ற ஆங்கில பாடலை பாடினான். இந்த வீடியோ ஆன்லைனில் மில்லியன் கணக்கானவர்களை எட்டியது. 2020 இல், கிறிஸ்டோபர் ஊனமுற்ற வழக்கறிஞராக பணியாற்றுவதற்கான தனது இலக்குகளைப் பகிர்ந்துகொண்டார். தேவன் இதயத்தின் கண்களை திறந்தருளினால் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்பதை அவன் நிருபித்துக் காண்பித்தான்.
பவுல் அப்போஸ்தலர் எபேசு திருச்சபையை அதனுடைய துணிகரமான விசுவாசத்திற்காய் பாராட்டுகிறார் (1:15-16). தேவன் அவர்களுக்கு “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” (வச. 17) கொடுத்து அவர்களை விளங்கிக்கொள்ளச் செய்யும்படிக்கு அவர் வேண்டுகிறார். தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கும் காரியங்களை பார்ப்பதற்கு அவர்களுடைய பிரகாசமான மனக்கண்களை திறக்கும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பிக்கிறார் (வச. 18).
தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்தும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்டுக்கொண்டால், அவரைக் குறித்து நாம் அதிகம் அறிந்துகொள்ளவும் அவருடைய நாமம், வல்லமை மற்றும் அதிகாரத்தை உறுதியுடன் அறிக்கையிடலாம் (வச. 19-23). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினாலும், தேவ ஜனத்தின் மீதான அன்பினிமித்தமும், நம்முடைய இருதயத்தின் பிரகாசமான மனக்கண்களை திறந்தருளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்து, அவருடைய வரம்பற்ற வாய்ப்புகளை நிருபிக்கும் ஜீவியத்தை ஜீவிக்கலாம்.
தடைகளையும் வரம்புகளையும் மேற்கொள்வதற்கு தேவன் உங்களுக்கு எந்த விதத்தில் உதவியுள்ளார்? அவருடைய சத்தியத்தையும் சுபாவத்தையும் அன்பையும் அறிதல், எந்த விதத்தில் சவால்களை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும்?
பராக்கிரமமும் இரக்கமுமுள்ள தேவனே, உம்மையும் உம்முடைய அன்பையும் அறியவும், உமக்காக துணிகரமான விசுவாசத்துடன் வாழவும், மற்றவர்களை உம்முடைய ஆராதனைக்கு நேராக வழிநடத்தவும் என்னுடைய பிரகாசமான மனக்கண்களை திறந்தருளும்.