“மற்றவர்களால் பார்க்கமுடியாத வகையில் பெரும்பாலானோர் தழும்புகளை உடையவர்களாயிருப்பர்.” இந்த ஆழமான வார்த்தைகள் மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ஆண்ட்ரெல்டன் சிம்மன்ஸிடமிருந்து வந்தது. அவர் மனநலப் போராட்டங்கள் காரணமாக 2020 சீசன் விளையாட்டின் இறுதியாட்டத்திலிருந்து விலகினார். சிம்மன்ஸ் தனது முடிவைப் பிரதிபலிக்கும் வகையில், இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்றவர்களை ஊக்குவிக்கவும், இரக்கம் காட்ட மற்றவர்களுக்கு நினைவூட்டவும் தனது கதையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

கண்ணிற்கு புலப்படாத தழும்புகள் என்பது வெளிப்படையாய் தெரியாவிட்டாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சங்கீதம் 6 இல், தாவீது தனது சொந்த ஆழமான போராட்டத்தைப் பற்றி வேதனையான மற்றும் நேர்மையான வார்த்தைகளை எழுதுகிறார். அவர் பெலனற்றுப்போய் (வச. 2) மிகுந்த வியாகுலத்தில் (வச. 3) இருந்தார். அவர் பெருமூச்சினால் இளைத்து, கண்ணீரினால் படுக்கையை நனைத்தார் (வச. 6). தாவீது தனது வியாகுலத்திற்கான காரணத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், நம்மில் பலர் அவருடைய வேதனையை உணரக்கூடும். 

தாவீது தன்னுடைய வேதனையை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை நாம் அறிந்து ஊக்கம்பெறக்கூடும். அவருடைய அதிகமான வியாகுலத்தில் அவர் தேவனை நோக்கிக் கதறுகிறார். அவருடைய இருதயத்தை நேர்மையாக ஊற்றி, சுகத்திற்காகவும் (வச. 2), மீட்பிற்காகவும் (வச. 4), இரக்கத்திற்காகவும் (வச. 9) விண்ணப்பிக்கிறார். “எதுவரைக்கும்?” (வச. 3) என்னும் கேள்வியை கேட்டு தன்னுடைய பாடுகளின் வீரியத்தை தாவீது வெளிப்படுத்தினாலும், “கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்” (வச. 8) என்றும் நிச்சயமாய் தன்னுடைய “பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்” (வச. 10) என்றும் உறுதியுடன் இருக்கிறார்.

நம்முடைய தேவன் யார் என்று அறிவதில் நம்முடைய நம்பிக்கை உதயமாகிறது.