எனது ஆருயிர் நண்பன் மரித்து சில வாரங்கள் கழித்து அவனுடைய தாயாரிடத்தில் நான் பேசினேன். அவர்கள் துக்கமாயிருக்கும் அந்த தருவாயிலும் எப்படியிருக்கிறீர்கள் என்னும் கேள்வி பொருந்தாத கேள்வி என்று தெரிந்தும் அவர்களிடத்தில் நான் அதைக் கேட்டேன். ஆனால் “நான் மகிழ்ச்சியாய் இருப்பதை தெரிந்துகொண்டேன்” என்ற அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. 

என் சொந்த வாழ்க்கையில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்ல நான் போராடியபோது அவர்களுடைய வார்த்தைகள் எனக்கு உதவியது. உபாகமத்தின் முடிவில் இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் கட்டளையையும் அவர்களுடைய வார்த்தைகள் எனக்கு நினைவூட்டின. மோசேயின் மரணத்துக்கும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்கள் நுழைவதற்கும் சற்று முன்பு, அவர்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். மோசே, “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்… நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்” (உபாகமம் 30:19) என்று கட்டளையிடுகிறார். அவ்வாறு ஜீவனை தெரிந்துகொண்டால், அவர்கள் தேவனுடைய கட்டளைகளை பின்பற்றி நலமாக வாழமுடியும். இல்லையென்றால், தேவனை விட்டு விலகி, “மரணத்தையும் தீமையையும்” (வச. 15) தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புவதின் மூலம் நாம் மகிழ்ச்சியை தேர்வுசெய்யலாம். அல்லது நம்முடைய வாழ்க்கைப் பாதையின் எதிர்மறையான காரியங்களை தேர்வுசெய்து நம்முடைய மகிழ்ச்சி பறிபோகும்படிக்கும் அனுமதிக்கலாம். அது பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொண்டு செய்யப்படவேண்டியது. “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக” (ரோமர் 8:28) நடத்துகிற தேவனாலே நாம் மகிழ்ச்சியை தேர்ந்தெடுக்கலாம்.