1906ஆம் ஆண்டு நடைபெற்ற பேஸ்பால் உலகத் தொடருக்கு முன், விளையாட்டு எழுத்தாளர் ஹக் புல்லர்டன் ஒரு புத்திசாலித்தனமான கணிப்பை முன்வைத்தார். வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சிகாகோ கப்ஸ் அணி முதல் மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் தோல்வியடைந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று சொன்னார். மேலும் நான்காம் ஆட்டத்தில் மழைபெய்யும் என்றார். அவர் சொன்னதுபோலவே நடந்தது. பின்னர், 1919 இல், அவரது பகுப்பாய்வுத் திறன் மூலம் சில வீரர்கள் ஆட்டமிழப்பார்கள் என்று சொல்லியதும் நிறைவேறியது. அவர்கள் சூதாட்டக்காரர்களால் லஞ்சம் பெற்றதாக புல்லர்டன் சந்தேகித்தார். அதிலும் அவர் சொன்னபடியே நடந்தது. 

புல்லர்டன் ஒரு தீர்க்கதரிசி கிடையாது. ஆனால் ஆதாரங்களை நன்றாக ஆராய்ந்தவர். எரேமியா தீர்க்கதரிசி நிஜத்தில் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிற்று. எருதின் நுகத்தை கழுத்தில் பூண்ட எரேமியா, யூதா பாபிலோனியர்களுக்கு அடிபணிந்து வாழும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் (எரேமியா 27:2,12). ஆனால் அனனியா என்னும் கள்ளத் தீர்க்கதரிசி அவனுக்கு விரோதமாய் பேசி, நுகத்தை உடைத்துப்போட்டான் (28:2-4,10). அனனியாவைப் பார்த்து எரேமியா, “அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை… இந்த வருஷத்திலே நீ சாவாய்” (வச. 15-16) என்று சொன்னான். இரண்டு மாதங்கள் கழித்து அனனியா செத்துப்போகிறான் (வச. 17). 

புதிய ஏற்பாடு, “பூர்வகாலங்களில்… தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபிரெயர் 1:1-2) என்று சொல்லுகிறது. இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் வேதவாக்கியங்கள், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய சத்தியங்கள் நமக்கு இன்னும் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது.