கீத் பணிபுரிந்த புத்தகக் கடையின் உரிமையாளர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தார். ஆனால் அவரது உதவியாளரான கீத் ஏற்கனவே பீதியில் இருந்தார். புத்தகக் கடை சீராக இயங்கினாலும், அதை தன்னால் நேர்த்தியாய் மேற்பார்வையிட முடியாது என்று கீத் சற்று பதற்றத்திலிருந்தார். ஆகையால் வெறித்தனமாய் தன்னால் முடிந்த அனைத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட துவங்கினார். 

“போதும் நிறுத்து” என்று அவரது முதலாளி ஒரு வீடியோ அழைப்பின் மூலம் அவரிடம் கூறினார். “நான் தினமும் உனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வேலைகளை மட்டும் நீ செய்தால் போதும். கவலைப்படாதே கீத். சுமை உன் மீது இல்லை; அது என் மீது உள்ளது” என்று தெரியப்படுத்தினார். 

மற்ற நாடுகளோடு இஸ்ரவேலுக்கு கலகம் ஏற்படும்போது, தேவன் அவர்களை அமர்ந்திருக்கும்படி சொல்லுகிறார் (சங்கீதம் 46:10). அதாவது, “சுயமாய் முயற்சிசெய்வதை நிறுத்துங்கள், நான் சொல்வதைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்காக யுத்தஞ்செய்வேன்” என்று சொல்லுகிறார். எதுவும் செய்யாமல் இஸ்ரவேல் அமைதிகாக்கவில்லை; மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் தேவனை சார்ந்துகொண்டனர். 

நாமும் அதையே செய்வதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம்பும் தேவன் சர்வத்தையும் ஆளுகிறவர் என்பதினால் அதை நம்மால் நேர்த்தியாய் செய்யமுடியும். “அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று,” “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்” (வச. 6,9). ஆகையால் அவருடைய அடைக்கலத்தையும் பெலத்தையும் நாம் நம்பலாம் (வச. 1). நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை, அது தேவனிடத்தில் இருக்கிறது.