ஆராதனை பண்டிகை
பெரிய கூட்டங்களில் பங்கேற்பது என்பது உங்களை ஆச்சரியமான விதங்களில் மாற்றமடையச் செய்யும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற தேசங்களில் பல நாள் கூட்டங்களில் 1,200க்கும் மேற்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு, ஆராய்ச்சியாளர் டேனியல் யூட்கினும் அவரது சகாக்களும், இதுபோன்ற பெரிய கூட்டங்கள் நம்முடைய ஒழுக்கரீதியான வாழ்க்கையையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கைமுறையையும் பாதிக்கும் என்பதைக் கற்றுக்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்பவர்களில் 63 சதவீதம் பேர் மறுரூபமாக்கபட்ட அனுவத்தை பெற்றதாக அவர்களின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
ஆயினும் தேவனை ஆராதிக்க மற்றவர்களுடன் நாம் ஒன்றுகூடும்போது, ஒரு மதச்சார்பற்ற பண்டிகையின் சமூக மாற்றத்தை விட அதிகமாக நாம் அனுபவிக்க முடியும்;. நாம் தேவனோடு தொடர்புகொள்கிறோம். பண்டைய நாட்களில் ஆண்டு முழுவதும் பண்டிகைகளுக்காக எருசலேமில் மக்கள் கூடிவந்தபோது, தேவனுடைய பிள்ளைகள் தேவனுடனான தொடர்பை முழுமையாய் அனுபவித்தனர்;. “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகை” (உபாகமம் 16:16) ஆகிய நாட்களில் ஆலயத்தில் தங்கும் நவீன வசதிகள் இல்லாதபோதிலும், வருடத்திற்கு மூன்றுதரம் கூடிவந்தார்கள். இந்த கூடுகைகள், நினைவுகூருதல், ஆராதனை, குடும்பம், வேலைக்காரர்கள், அயல்நாட்டவர் மற்றும் பலருடன் தேவனுடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது (வச. 11).
அவரைத் தொடர்ந்து ஆராதிக்கவும், அவருடைய உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைக்கவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்ய மற்றவர்களுடன் நாமும் ஒன்றாகக் கூடுவோம்.
விளம்பர தூதுவர்களுக்கும் மேல்
இந்த இன்டர்நெட் உலகத்தில் போட்டி மனப்பான்மை என்பது மிகவும் கடுமையாகிவிட்டது. பெரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆக்கப்பூர்வமான வழிகளை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, சுபாரு வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம். சுபாரு உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை விளம்பரப்படுத்தும்பொருட்டு நம்பிக்கைக்குரிய அதின் ரசிகர்களை அழைப்பித்து அவர்களையே “பிராண்ட் தூதுவர்களாக” பயன்படுத்துகின்றனர்.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது: “சுபாரு தூதர்கள் சுபாருவைப் பற்றிய புகழைப் பரப்புவதற்கும், பிராண்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதற்கும் தங்கள் ஆர்வத்தையும் ஆற்றலையும் தன்னார்வத்துடன் வழங்கும் திறமைமிக்க பிரத்யேகமான குழுவாகும்.” சுபாரு வாகனங்களை பயன்படுத்துகிறவர்கள் மக்களின் மத்தியில் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதினால் அவர்களைக் கொண்டு அதின் புகழானது பரப்பப்படுகிறது.
2 கொரிந்தியர் 5 இல், இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு பவுல் ஒரு வித்தியாசமான துதுவர் திட்டத்தை விவரிக்கிறார். “ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்” (வச. 11). “தேவன்... ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (வச. 19-20).
இன்று பல தயாரிப்புகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், மகிழ்ச்சி, முழுமை மற்றும் நோக்கம் ஆகியவற்றின் உணர்வை வழங்குவதாகவும் உறுதியளிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் செய்தி, நற்செய்தி. அந்த நற்ச்செய்தியை ஒரு அவிசுவாசமான உலகிற்கு கொடுப்பதற்கான பாக்கியம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
விடாமுயற்சியின் வல்லமை
1917 ஆம் ஆண்டில், ஒரு இளம் பெண் தையல்காரர் நியூயார்க் நகரத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு பள்ளி ஒன்றில் சேர்க்கை கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஆன்கோன் என்னும் அவள், வகுப்புகளுக்கு பதிவுசெய்ய வந்தபோது, அந்த பள்ளியின் இயக்குனர் அவளை வரவேற்கவில்லை என்று கூறிவிட்டார். மேலும் “நேரடியாய் சொல்லவேண்டுமானால், நீங்கள் ஒரு கருப்பினத்தை சேர்ந்த பெண் என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறி வெளிப்படையாய் நிராகரித்தார். ஆனால் அவள் வெளியேற மறுத்து “தயவுசெய்து என்னை இங்கேயே இருக்க விடுங்கள்” என்று மனதிற்குள் ஜெபித்தாள். அவளது விடாமுயற்சியைக் கண்டு, பள்ளியின் இயக்குனர் அவள் சேர்ந்துகொள்வதற்கு அனுமதித்தார். ஆனால் வெள்ளையர்களுக்கு மட்டுமேயான வகுப்பறையிலிருந்து பின் கதவைத் திறந்து அவளைப் பிரித்து தனித்து உட்காரச்செய்து வகுப்பை கவனிக்கச் செய்தார்.
ஆனின் திறமையினால், அந்த பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன்பே பட்டம் பெற்று வெளியேறினார். மேலும் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடி உட்பட உயர் சமூக வாடிக்கையாளர்களை தன் திறமையினால் வெகுவாய் கவர்ந்தார். அவர்களுடைய உலகப் புகழ்பெற்ற திருமண ஆடையையும் இவரே வடிவமைத்தார். அவருடைய தையல் ஸ்டுடியோவுக்கு மேலே ஒரு குழாய் வெடித்து, முதலில் வடிவமைக்கப்பட்ட ஆடையை சிதைத்தபின்பு தேவனுடைய உதவியை நாடிய அவள் மீண்டும் நேர்த்தியாய் இரண்டாம் ஆடையை வடிவமைத்தார்.
அந்த விடாமுயற்சி சக்தி வாய்ந்தது. குறிப்பாய் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். விடாமுயற்சியுடன் செயல்பட்ட விதவையைக் குறித்து இயேசுவின் உவமையில், அவள் அநீதியனான நீதிபதியிடம் நீதிகேட்டு போராடுகிறாள். முதலில், அவன் அவளை மறுத்தான். ஆனால் “இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால்... இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும்” (லூக்கா 18:5) என்று சொன்னான்.
அதேபோன்று, “தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (வச. 7). அவர் நிச்சயமாய் செய்வார் (வச. 8) என்று இயேசு சொல்லுகிறார். அவருடைய ஊக்கப்படுத்தலோடு, விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஜெபத்தில் மன்றாடுவோம். தேவன் தன்னுடைய குறித்த நேரத்தில், நேர்த்தியான வழியில் பதில் செய்வார்.
இயேசு நம் சகோதரர்
ப்ரிட்ஜர் வாக்கருக்கு ஆறு வயது இருக்கும்போது ஒரு வெறிநாய் அவரது தங்கையை கடிக்கும் நோக்கத்துடன் சீறிப்பாய்ந்தது. பிரிட்ஜர் அவளுக்கு முன்னால் குதித்து, நாயின் கொடூரமான தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்றினார். அதினிமித்தம் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிட்ஜரின் முகத்தில் தொண்ணூறு தையல்கள் போடப்பட்டது. ஆனால் பிரிட்ஜரிடம் அவருடைய துணிச்சலைக் குறித்து கேட்டபோது “யாராவது இறக்க நேரிட்டால், அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னாராம். அதிர்ஷ்டவசமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிரிட்ஜரின் முகம் குணமடைய உதவியுள்ளனர். அவர் தன்னுடைய தங்கையை கட்டிப்பிடித்தவாறு எடுத்த சமீபத்திய புகைப்படமானது அவருடைய உறுதியான சகோதர அன்பை இன்னும் வெளிப்படுத்துகிறது.
நம்முடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் நம்மை பராமரித்துக்கொள்வது இயல்பு. உண்மையான சகோதரர்கள் நாம் பிரச்சனையில் இருக்கும்போது நமக்கு தோள்கொடுப்பார்கள்; நாம் பயப்படும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணைநிற்பார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் பூரணமானவர்கள் அல்ல, சிலவேளைகளில் அவர்களும் நம்மை காயப்படுத்த நேரிடலாம். நமக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் நம்மோடு எப்போதும் இருக்கும் இயேசு. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் சொல்லுவதுபோல, கிறிஸ்து தன்னை தாழ்த்தி “மாம்சத்தையும் இரத்தத்தையும்” உடையவராகி (வச. 14) மாம்ச குடும்பத்தின் அங்கத்தினராய் மாறி, “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (வச. 17). அதினால் இயேசு நம்முடைய மெய்யான சகோதரராய் மாறினார். நம்மையும் சகோதரர் மற்றும் சகோதரி என்று அழைக்கிறார் (வச. 11).
இயேசுவை நாம் இரட்சகர், சிநேகிதர், ராஜா என்று அழைக்கிறோம். அவை அனைத்தும் உண்மையே. இயேசு நம்முடைய சகோதரனாய், மனுஷனுக்குரிய பயங்கள், சோதனைகள், சோர்வுகள், துக்கங்கள் என்று அனைத்தின் பாதை வழியாகவே கடந்துசென்றார். நம்முடைய சகோதரர் எப்போதும் நம் பட்சத்தில் நிற்கிறார்.