ஆலய ஆராதனையின் முடிவில் போதகரின் அழைப்பின் பேரில், லாட்ரீஸ் முன்னோக்கிச் சென்றாள். சபைக்கு வாழ்த்துச் சொல்ல அவள் அழைக்கப்பட்டபோது, அவள் பேசிய கனமான மற்றும் அற்புதமான வார்த்தைகளுக்கு யாரும் தயாராக இல்லை. டிசம்பர் 2021ல் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளியில் தன்னுடைய ஏழு குடும்ப உறுப்பினர்களை இழந்த பின்பு அங்கிருந்து இடம்பெயர்ந்தவள் இவள். “தேவன் என்னுடன் இருப்பதால் என்னால் இன்னும் சிரிக்க முடிகிறது,” என்று அவள் கூறினாள். போராட்டங்களால் நசுக்கப்பட்டாலும், அவளது சாட்சி, சவால்களோடு போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு வல்லமையுள்ள ஊக்கமாய் அமைந்தது.
சங்கீதம் 22ல் (இயேசுவின் பாடுகளைச் சுட்டிக்காட்டும்) தாவீதின் வார்த்தைகள், தேவனால்; கைவிடப்பட்டதாக உணர்ந்து (வச. 1), மற்றவர்களால் இகழ்ந்து கேலி செய்யப்பட்ட (வச. 6–8), மற்றும் வேட்டையாடுபவர்களால் சூழப்பட்ட (வச. 12–13), பாதிக்கப்பட்ட மனிதனின் வார்த்தைகள். அவர் பலவீனமாகவும் ஒன்றுமில்லாமலும் உணர்ந்தார் (வச. 14-18). ஆனால் அவர் தன் நம்பிக்கையை கைவிடவில்லை. “ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்” (வச. 19) என்று தன் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார். நீங்கள் தற்போது சந்திக்கும் சவாலானது தாவீது அல்லது லாட்ரீஸ் போன்றவர்களுடைய சவால்களைப் போன்றல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவைகள் மெய்யானவைகள். மேலும் 24-ஆம் வசனத்தின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.” தேவனுடைய உதவியை நாம் பெறும்போது, அவருடைய மகத்துவத்தை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு நாம் அறிவிக்க பிரயாசப்படுவோம் (வச. 22).
தேவனுடைய தயவை பிரதிபலிக்கும் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் என்ன ஆதாயம்? கிறிஸ்துவுக்குள் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தைப் பகிர்ந்துகொள்வது ஏன் அவசியம்?
பரலோகப் பிதாவே, உதவியற்ற என்னுடைய பிரச்சனைகளை உம்முடைய சமூகத்தில் கொண்டுவருகிறேன். நம்பிக்கையை என் இருதயத்தில் சுவாசித்து, உம்முடைய நாமத்தைத் துதிக்க எனக்கு உதவிசெய்யும்.