“உங்கள் தேனீக்கள் மொய்க்கின்றன!” என் மனைவி கதவின் உள்ளே தலையை நுழைத்து எந்த தேனீ வளர்ப்பவரும் கேட்க விரும்பாத செய்தியை என்னிடத்தில் கூறினாள். ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டிலிருந்து உயரமான பைன் செடியின் உச்சிக்கு பறப்பதைப் பார்க்க நான் வெளியே ஓடினேன். அவைகள் ஒருபோதும் திரும்பிவரப்போவதில்லை.

தேன் கூடு மொய்க்கப்போகிறது என்பதைக் குறித்து தெரிந்துகொள்வதில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக வீசிய புயல்கள் எனது ஆய்வுகளுக்கு இடையூறாக இருந்தன. புயல் வீசிமுடிந்த அன்று காலையில், தேனீக்கள் வெளியேறின. அந்த கூடு புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால் தேனீக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றன. எனது ஏமாற்றத்தைக் கண்டு, “சோர்ந்துபோகாதே, இது யாருக்கும் நடக்கலாம்!” என்று அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினார்.

ஊக்கப்படுத்துதல் என்பது மிகப்பெரிய வரம். சவுல் தாவீதை கொல்ல வகைதேடினபோது, சவுலின் குமாரனாகிய யோனத்தான் தாவீதை உற்சாகப்படுத்தினான். “நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்” என்று யோனத்தான் அறிவுறுத்துகிறான் (1 சாமுவேல் 23:17).

அரியணைக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த ஒருவரிடமிருந்து வியக்கத்தக்க தன்னலமற்ற வார்த்தைகள் அவை. தேவன் தாவீதோடு இருக்கிறார் என்பதை யோனத்தான் அறிந்திருந்ததினால் தாழ்மையான இருதயத்தில் விசுவாசத்துடன் பதிலளித்தான்.

நம்மைச் சுற்றிலும் ஊக்கம் தேவைப்படுகிற மக்கள் நிறைய இருக்கின்றனர். நாம் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நம் மூலம் அவர்களை நேசிக்கும்படி அவரிடம் கேட்கும்போது அவர்களுக்கு நம் மூலம் நன்மைகள் உண்டாக அவர் நமக்கு உதவிசெய்வார்.