டாக்டர் ரிச்சர்ட் ஸ்வென்சன் தனது “மார்ஜின்” என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “நாங்கள் சுவாசிக்க கொஞ்சம் இடம்வேண்டும். சிந்திக்க சுதந்திரமும், குணமடைய அனுமதியும் வேண்டும். எங்கள் உறவுகள் ஒவ்வொன்றும் பட்டினியால் மடிகின்றன…. நற்சிந்தனையோடு சீறிப்பாய்ந்த எங்கள் குழந்தைகள் காயப்பட்டு தரையில் வீழ்ந்தனர். கடவுள் இப்போது சோர்வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ? அமர்ந்த தண்ணீரண்டைக்கு அவர் மக்களை இப்போது வழிநடத்துவதில்லையோ? கடந்த காலத்தின் பரந்த திறந்தவெளிகளை யார் கொள்ளையடித்தார்கள்? அவற்றை நாங்கள் எவ்வாறு திரும்பப் பெறுவது?” நாம் தேவனோடு இளைப்பாறுவதற்கும் தேவனை சந்திப்பதற்கும் அமர்ந்த செழிப்பான நிலம் வேண்டும் என்று ஸ்வென்சன் கூறுகிறார்.
அது எதிரொலிக்கிறதா? திறந்த வெளிகளைத் தேடும் வாழ்க்கைமுறையை மோசே நன்றாக வாழ்ந்திருக்கிறார் எனலாம். முரட்டாட்டமும் கலகமும் செய்யும் ஜனக்கூட்டத்தை வழிநடத்தி சென்ற மோசேக்கு, அமைதியாய் இளைப்பாறி தேவனுடைய பிரசன்னத்தை உணரவேண்டியது அவசியமாய் தோன்றியது. மேலும் அவருடைய “ஆசரிப்புக் கூடாரத்தில்” (வ. 7), “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (வச. 11). இயேசுவும் அவ்வப்போது, “வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என்று வேதம் சொல்லுகிறது. அவரும் மோசேயும் பிதாவோடு தனிப்பட்ட விதத்தில் நேரம் செலவழிப்பதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர்.
நாமும், தேவனோடு இளைப்பாறுவதற்கும் அவருடைய பிரசன்னத்தை உணருவதற்கும் இப்படிப்பட்ட ஸ்தலத்தை தெரிந்துகொள்வது அவசியம். அவரோடு நேரம் செலவழிப்பது என்பது நல்ல தீர்மானங்களை எடுக்க உதவும் – நமது வாழ்க்கையில் ஆரோக்கியமான விளிம்புகளையும் எல்லைகளையும் உருவாக்கி, அவரையும் மற்றவர்களையும் நன்றாக நேசிக்கும் அலைவரிசையை நாம் பெறுவதற்கு உதவுகிறது.
திறந்தவெளியில் தேவனைத் தேட பிரயாசப்படுவோம்.
உங்களுடைய வாழ்க்கையில் இந்த தனிப்பட்ட தருணங்கள் ஏன் அவசியம்? தேவனோடு நேரம் செலவிடுவதற்கு எவ்வாறு நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?
இயேசுவே, உம்மோடு ஒவ்வொருநாளும் தனிப்பட்ட விதத்தில் நேரம் செலவிட எனக்கு உதவிசெய்யும்.