ப்ரிட்ஜர் வாக்கருக்கு ஆறு வயது இருக்கும்போது ஒரு வெறிநாய் அவரது தங்கையை கடிக்கும் நோக்கத்துடன் சீறிப்பாய்ந்தது. பிரிட்ஜர் அவளுக்கு முன்னால் குதித்து, நாயின் கொடூரமான தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்றினார். அதினிமித்தம் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிட்ஜரின் முகத்தில் தொண்ணூறு தையல்கள் போடப்பட்டது. ஆனால் பிரிட்ஜரிடம் அவருடைய துணிச்சலைக் குறித்து கேட்டபோது “யாராவது இறக்க நேரிட்டால், அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னாராம். அதிர்ஷ்டவசமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிரிட்ஜரின் முகம் குணமடைய உதவியுள்ளனர். அவர் தன்னுடைய தங்கையை கட்டிப்பிடித்தவாறு எடுத்த சமீபத்திய புகைப்படமானது அவருடைய உறுதியான சகோதர அன்பை இன்னும் வெளிப்படுத்துகிறது.
நம்முடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் நம்மை பராமரித்துக்கொள்வது இயல்பு. உண்மையான சகோதரர்கள் நாம் பிரச்சனையில் இருக்கும்போது நமக்கு தோள்கொடுப்பார்கள்; நாம் பயப்படும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணைநிற்பார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் பூரணமானவர்கள் அல்ல, சிலவேளைகளில் அவர்களும் நம்மை காயப்படுத்த நேரிடலாம். நமக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் நம்மோடு எப்போதும் இருக்கும் இயேசு. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் சொல்லுவதுபோல, கிறிஸ்து தன்னை தாழ்த்தி “மாம்சத்தையும் இரத்தத்தையும்” உடையவராகி (வச. 14) மாம்ச குடும்பத்தின் அங்கத்தினராய் மாறி, “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (வச. 17). அதினால் இயேசு நம்முடைய மெய்யான சகோதரராய் மாறினார். நம்மையும் சகோதரர் மற்றும் சகோதரி என்று அழைக்கிறார் (வச. 11).
இயேசுவை நாம் இரட்சகர், சிநேகிதர், ராஜா என்று அழைக்கிறோம். அவை அனைத்தும் உண்மையே. இயேசு நம்முடைய சகோதரனாய், மனுஷனுக்குரிய பயங்கள், சோதனைகள், சோர்வுகள், துக்கங்கள் என்று அனைத்தின் பாதை வழியாகவே கடந்துசென்றார். நம்முடைய சகோதரர் எப்போதும் நம் பட்சத்தில் நிற்கிறார்.
மாம்சீக சகோதரர்களுடான உங்களுடைய அனுபவம் எப்படி இருக்கிறது? இயேசுவை உங்களுடைய மெய்யான சகோதரனாய் எப்படி பார்க்கிறீர்கள்?
அன்பான இயேசுவே, உம்மை என்னுடைய சிநேகிதனாய் பார்ப்பதற்கு நான் ஆச்சரியப்படுகிறேன். என்னோடு நடந்துவாரும். என்னை நேசியும். உம்முடைய பாதையை எனக்குக் காண்பியும்.