ராபர்ட் டோட் லிங்கன் தனது தந்தையும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஆபிரகாம் லிங்கனின் நிழலிலேயே வளர்ந்தார். ஆனால் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ராபர்ட் அவருடைய தந்தையை வைத்தே அடையாளப்படுத்தப்பட்டார். லிங்கனின் நெருங்கிய நண்பரான நிக்கோலஸ் முர்ரே பட்லர், ராபர்ட் சொல்லும்போது, “மக்கள் என்னை ஒரு போர் செயலாளராக பார்க்கவில்லை, ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகிறார்கள். யாரும் என்னை இங்கிலாந்துக்கு அமைச்சராக பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்கிறார்கள். புல்மேன் நிறுவனத்தின் தலைவராக யாரும் என்னை பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகின்றனர்” என்று சொன்னதாக அறிவித்தார்.
பிரபலமானவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்த ஏமாற்றத்தை வாழ்க்கையில் அனுபவிப்பதில்லை. நம்மை யாரும் சரியாய் எடைபோடுவதில்லை என்கிற உணர்வு நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆயினும், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதைக் காட்டிலும் மேலான மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய பாவங்களில் நாம் யார் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் யாராக மாறுகிறோம் என்பதையும் அறிந்திருந்தார். “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6) என்று பவுல் எழுதுகிறார். நாம் பெலவீனர்களாய் இருந்தபோதிலும் தேவன் நம்மை நேசிக்கிறார். பவுல், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச.8) என்று எழுதுகிறார். தேவன் தன்னுடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்ததின் மூலம் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.
நாம் யார்? நாம் தேவனுக்கு பிரியமான பிள்ளைகள். அதைக்காட்டிலும் ஒருவன் என்னத்தை எதிர்பார்க்கக்கூடும்?
மற்றவர்களுடைய நிழலில் நீங்கள் தொலைந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? தேவன் உங்கள் மீது தனிப்பட்ட விதத்தில் கரிசணையாய் இருக்கிறார் என்பதை கற்றுக்கொள்ள அதை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும்?
தகப்பனே, நான் யார் என்பதை அறிந்து நீர் என்னை நேசிக்கிறீர். உம்முடைய மன்னிப்பையும் அன்பையும் எனக்கு சொந்தமாக்கினீர்.