“மோசேயைப் போன்று நீங்கள் எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தீர்” ஜமீலா ஆச்சரியப்பட்டார். பாகிஸ்தானில் செங்கல்சூளை முதலாளிக்கு அவர்கள் செலுத்தவேண்டிய அதிகப்படியான பணத்தை திரும்பச்செலுத்த வசதியில்லாத காரணத்தினால், அதே சூளையில் கொத்தடிமையாக அவளும் அவரது குடும்பமும் பணியாற்றினர். அவர்களின் சம்பாத்தியத்தின் பெரும்பகுதி வட்டியை செலுத்துவதற்கே செலவாகியது. அவர்களின் கடன் தொகையை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பரிசாக பெற்றபோது, அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிக்கு நன்றி செலுத்துகையில், கிறிஸ்துவின் விசுவாசியான ஜமீலா, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் மோசேயை பயன்படுத்திய உதாரணத்தை சுட்டிக்காண்பித்தார்.
இஸ்ரவேலர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எகிப்தியர்களால் ஒடுக்கப்பட்டனர். கடுமையான சூழ்நிலையில் உழைத்தனர். தேவனிடம் உதவி கேட்டு மன்றாடினர் (யாத்திராகமம் 2:23). ஆனால் அவர்களது பணிச்சுமை அதிகரித்தது. ஏனெனில் புதிய பார்வோன், செங்கற்கள் செய்வது மட்டுமல்லாது அவற்றை சுடுவதற்கு தேவையான வைக்கோலை சேகரிக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தினான் (5:6-8). இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி கூக்குரலிட்டபோது, தேவன் அவர்களுடைய தேவனாய் இருக்கும் உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (6:7). இனி அவர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களை ஓங்கிய கையினால் மீட்பதாக வாக்குப்பண்ணுகிறார் (வச. 6).
தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் (அதி. 14). இன்றும் சிலுவையில் தன்னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விரிந்த கரத்தினால் தேவன் நம்மை மீட்கிறார். நம்மை ஒருகாலத்தில் அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவத்திலிருந்து நாம் இன்று விடுதலையாக்கப்பட்டுள்ளோம். நாம் இனி அடிமைகள் இல்லை, சுதந்தரவாளிகள்!
தேவன் உங்களுக்கு எவ்வாறு மீட்பை அருளினார்? பல விதங்களில் அடிமைப்பட்டுள்ளவர்களை நீங்கள் எவ்விதம் ஊக்கப்படுத்துவீர்கள்?
அன்பான தேவனே, என்னுடைய பாவத்திலிருந்து என்னை விடுதலையாக்க உம்முடைய குமாரனை அனுப்பியதற்காய் உமக்கு நன்றி.