மாறா தேவன்
புகழ்பெற்ற உருவப்புகைப்படம் ஒன்று ஒரு நபரின் காலணிச்சுவடுகளை சாம்பல் பின்னணியில் காட்டியது. இது விண்வெளி வீரர் “பஸ் ஆல்ட்ரின்” 1969 இல் சந்திரனில் விட்டுச் சென்ற கால்தடமாகும். கால்தடங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனில் காற்று மற்றும் நீர் இல்லாததால், எதுவும் அரிக்கப்படுவதில்லை. எனவே சந்திர நிலப்பரப்பில் என்ன நடந்தாலும் அது அப்படியே இருக்கும்.
தேவனின் நிலையான பிரசன்னத்தை பற்றி நினைக்கும் போது அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. யாக்கோபு எழுதுகிறார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17). அப்போஸ்தலன் இதை நம்முடைய சொந்த போராட்டங்களின் அடிப்படையில் எழுதுகிறார்: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (வ. 2,3) ஏனென்றால் நாம் ஒரு உன்னதமான மற்றும் மாறாத தேவனால் நேசிக்கப்படுகிறோம்!
கஷ்டநேரங்களில், தேவனின் மாறா உதவியை நினைவில் கொள்ளலாம். ஒரு மகத்தான பாமாலையை நினைவுபடுத்தலாம்: "நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர், நீர் ஐஸ்வர்யமுள்ளவர், சதா காலமும் நீர் மாறாதவர்". ஆம், நம் தேவன் தம்முடைய நிரந்தர காலடியை இவ்வுலகில் விட்டுவிட்டார். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார். அவருடைய உண்மை பெரிது.
அயலாரை நேசியுங்கள்
வாலிபர் முகாமில் நடந்த ஒரு வேடிக்கையான விளையாட்டு அது. ஆனால் அவ்விளையாட்டு எங்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்தது: அயலாரை மாற்றுவதை விட, அவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்வது. வட்டத்தின் நடுவில் நிற்கும் ஒருவரைத் தவிர, அனைவரும் ஒரு பெரிய வட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தவர் அமர்ந்திருந்த ஒருவரிடம், “உன் அயலாரை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அமர்ந்திருந்தவர் கேள்விக்கு இரண்டு வழிகளில் பதிலளிக்கலாம்: ஆம் அல்லது இல்லை. அல்லது அவர் விருப்பம்போல் தன் அயலாரை மாற்றியும் கொள்ளலாம்.
நிஜ வாழ்க்கையிலும் நமது "அயலாரை" தேர்வு செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? குறிப்பாக நம்மால் பழக முடியாத உடன் பணியாளர் அல்லது ,உங்களை தொந்தரவு செய்யும் வகையில் முரண்பாடான நேரங்களில் முரணான வேலைசெய்யும் பக்கத்து வீட்டுக்காரர் ஆயினும், நாம் அவர்களுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றபோது, தமக்குச் சொந்தமான மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முக்கியமான அறிவுரைகளை அவர்களுக்கு தேவன் தந்தார். "உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக" (லேவியராகமம் 19:18), இதில் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பது, அவர்களைப் பற்றி தவறான செய்தியை பரப்பாமல் இருப்பது, அவர்களை நமக்கு சாதகமாக பயன்படுத்தாமல் இருப்பது, அவர்களிடம் ஏதேனும் தவறு இருக்குமாயின் அவர்களிடம் பகை கொள்ளாமல் அதை நேரே அவர்களிடம் சொல்லுவது - இவையாவும் அந்த அறிவுரையில் அடங்கும் (வவ. 9-18).
எல்லோரையும் நேசிப்பது கடினம் என்றாலும், இயேசு நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படும்போது, மற்றவர்களை அன்பாய் நடத்துவது சாத்தியமாகும். நாம் அவருடைய ஜனமென்னும் அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ முற்படுகையில், அவ்வாறு செய்வதற்கான ஞானத்தையும் திறனையும் தேவன் அருளுவார்.
நமது புகலிடம்
வட அமெரிக்காவில் எருமைகள் நடமாடிய இடம் அது. உண்மையில் அப்படியாகத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. அப்பகுதியில் மக்கள் மந்தைகளுடனும், பயிர்களுடனும் குடியேறும் வரை, சமவெளி இந்தியர்கள் காட்டெருமைகளை அங்கே பின்பற்றி கொண்டிருந்தனர். பியர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரசாயன உற்பத்தித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னர் பனிப்போர் ஆயுதங்களை, இராணுவ துருப்புக்களை திரும்பப் பெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு நாள் வழுக்கை கழுகுகளின் கூட்டம் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தது. விரைவில் அவ்விடத்தில் “ராக்கி மவுண்டன் ஆர்சனல் தேசிய வனவிலங்கு புகலிடம்” உருவானது. கொலராடோவின் டென்வர் பெருநகரத்தின் விளிம்புகளில் புல்வெளி, ஈரநிலம் மற்றும் வனப்பகுதி வாழ்விடமாகிய பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியானது இப்போது நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற சரணாலயங்களில் ஒன்றாகும். கருங்கால் ஃபெரெட்டுகள் முதல் வழுக்கை கழுகுகள், துளையிடும் ஆந்தைகள் வரை முந்நூறுக்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு பாதுகாப்பான இல்லமாக இன்று உள்ளது. உங்களால் இதை யூகித்துப் பார்க்க முடிந்ததா? எருமைகள் நடமாடிய இடம்.
"தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" (62:8) என சங்கீதக்காரன் கூறுகிறார். உலகில் உள்ள எந்தவொரு நம்பிக்கையான புகலிடத்தையும் விட, தேவனுடைய பிரசன்னம் நமக்கு உண்மையான அடைக்கலமாய், பாதுகாப்பாய் இருக்கிறது "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப்போஸ்தலர் 17:28). எனவே "எல்லா நேரங்களிலும்" நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய நமது அடைக்கலம் தேவனே (சங்கீதம்62:8). அவர் நம்முடைய சரணாலயமாக இருக்கிறார். அவரிடம் நாம் தைரியமாக நம் எல்லா ஜெபங்களாலும் நம் இருதயத்தில் உள்ளவைகளை ஊற்றலாம்.
தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்: அவர் நேற்றும், இன்றும், எப்போதும் அடைக்கலமானவராகவே இருக்கிறார்.
ஆவியின் வல்லமை
பலத்த புயலினால் எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதை அறிந்திருந்தும் (நம்மைச் சுற்றிப் பொதுவாக நடைபெறுகின்ற அசோகரியங்கள்) எப்பொழுதும் போல நான் அறைக்குள் நுழைந்ததும் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்தேன். மின்விளக்கு வெளிச்சம் தரவில்லை. மின்விளக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நான் இருட்டுக்குள்தான் இருந்தேன்.
மின்சாரம் இல்லாமல் இருந்தும் வெளிச்சத்தை எதிர்பார்த்த அந்த அனுபவம் எனக்கு ஒரு ஆவிக்குரிய உண்மையை தெளிவாக நினைவூட்டியது. நாம் ஆவியானவரைச் சார்ந்திருக்கத் தவறினாலும், பல நேரங்களில் நாம் வல்லமையை எதிர்பார்க்கிறோம்.
1தெசலோனிக்கேயரில் பவுல் எப்படியாக சுவிசேஷ செய்தியை தேவன் வரப்பண்ணினார் என்பதை எழுதுகிறார் “வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது”(1:5). நாம் தேவ மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்பொழுது, விசுவாசிகளாகிய நம் வாழ்வில் அவருடைய ஆவியின் வல்லமையை உடனடியாக அனுபவிக்க முடியும். அவ்வல்லமையானது அன்பு, சந்தோஷம், சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை நம்மில் வளர்க்கிறது (கலாத்தியர் 5:22-23). மேலும் வரங்களினால் நம்மைத் தகுதிப்படுத்தி சபைக்கு ஊழியம் செய்யவும், போதிக்கவும், உதவவும், வழி நடத்தவும் செய்கிறது (1 கொரிந்தியர் 12:28).
பவுல் தனது வாசகர்களுக்கு “ஆவியை அவித்து போடுதல்” என்பது சாத்தியமே என எச்சரித்தார் (1தெசலோனிக்கேயர் 5:19). நாம் தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய எச்சரிப்பையும் புறக்கணித்து, அவருடைய ஆவியின் வல்லமையை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன (யோவான் 16:8). ஆனால் தேவனுக்குள்ளான நம் தொடர்பிலிருந்து பிரிந்து நாம் இருக்கத் தேவையில்லை. தேவனின் வல்லமை அவருடைய பிள்ளைகளுக்கென்று எப்போதும் இருக்கிறது.