ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்… அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சினைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பு வித்தியாசமான குறுஞ்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஓர் ஐக்கியம்… ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஓர் வல்லமையான இரவாய் அமைந்தது.” 

தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகு தூரத்திற்கோ அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.