எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது. 

ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.