தேவனிடம் வீட்டிற்கு திரும்புதல்
ஒரு மாலை வேளையில், ஒரு கட்டுமான பகுதியருகில் நான் ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது, ஒல்லியான, அழுக்கான பூனைக்குட்டி ஒன்று என்னையே ஏக்கத்தோடு பார்த்து, பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்தது. இன்று, மிக்கி ஒர் ஆரோக்கியமான, அழகான வளர்ந்த பூனை. எங்கள் வீட்டில் வசதியான வாழ்க்கையை அனுபவித்து, என் குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்படுகிறது. நான் அதைக் கண்ட சாலையில் ஜாகிங் செய்யும்போதெல்லாம், "நன்றி தேவனே" என்று அடிக்கடி நினைப்பேன். மிக்கி தெருவிலிருந்து மீட்கப்பட்டது. அதற்கு இப்போது வீடு உள்ளது.
சங்கீதம் 91, தேவனை தங்கள் அடைக்கலமாக்கி "உன்னதமானவரின் மறைவில்" இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறது (வ.1) . இதிலுள்ள "தங்குவான்" என்பதின் எபிரேய பதத்திற்கு "நிலைத்திருத்தல், நிரந்தரமாகத் தங்குதல்" என்று அர்த்தம். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, அவருடைய ஞானத்தின்படி வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நேசிக்கவும் நமக்கு உதவுகிறார் (வ.14; யோவான் 15:10). நித்தியத்திற்கும் அவருடன் இருக்கப்போகும் ஆறுதலையும், பூமிக்குரிய கடினங்களிலும் நம்முடன் இருக்கும் அவரது பாதுகாப்பையும் தேவன் நமக்கு வாக்களிக்கிறார். பிரச்சினைகள் வந்தாலும் அவருடைய சர்வ ஆளுகை, ஞானம், அன்பு நம்மைப் பாதுகாத்து விடுவிக்குமென்ற அவருடைய வாக்குத்தத்தங்களில் நாம் இளைப்பாறலாம்.
நாம் தேவனை அடைக்கலமாகக் கொள்கையில், நாம் "சர்வ வல்லவரின் நிழலில்" வாழ்கிறோம் (சங்கீதம் 91:1). அவருடைய எல்லையற்ற ஞானமும் அன்பும் அனுமதிப்பதைத் தவிர எந்த பிரச்சினையும் நம்மைத் தொட முடியாது. இதுவே நமது கூடாரமாகிய தேவனின் பாதுகாப்பு.
இயேசுவை காணுதல்
நான்கு மாத வயதில், லியோ தனது பெற்றோரைப் பார்த்ததில்லை. அவன் குறைபாட்டுடன் பிறந்ததால், பார்வை மங்கலாக இருந்த்து. அவனுக்கு அடர்ந்த மூடுபனியில் வாழ்வது போல் இருந்தது. ஆனால் கண் மருத்துவர்கள் அவனுக்கு சிறப்புக் கண்ணாடிகளைப் பொருத்தினர்.
லியோவின் கண்களுக்கு மேல் புதிய கண்ணாடியை அவன் அம்மா வைத்ததை அவன் அப்பா காணொளியாக வெளியிட்டார். லியோவின் கண்கள் மெதுவாகக் கவனம் செலுத்துவதை நாங்கள் பார்த்தோம். அவன் அம்மாவை முதன்முறையாகப் பார்க்கும்போது அவன் முகத்தில் ஒரு புன்னகை பரவியது. விலைமதிப்பற்ற அந்த நேரத்தில், சிறுவன் லியோ தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இயேசு தம் சீடர்களுடன் நடத்திய உரையாடலை யோவான் தெரிவிக்கிறார். பிலிப்பு அவரிடம், "பிதாவை எங்களுக்குக் காண்பியும்"(யோவான் 14:8) எனக் கேட்டார். அவருடன் இருந்த இத்தனை நாட்களுக்கு பிறகும் கூட இயேசுவின் சீடர்களால் தங்கள் முன்னிருந்தவரை அறிந்துகொள்ள இயலவில்லை. "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?" (வ.10) என்று இயேசு பதிலளித்தார். முன்னதாக இயேசு, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (வ.6) என்று கூறியிருந்தார். "நானே" என்று இயேசு கூறிய ஏழு கூற்றுகளில் இது ஆறாவதாகும். இந்த "நானே" என்கிற கூற்றுகள் வழியாக அவர் உண்மையிலே யாரென்று பார்க்கும்படி நம்மிடம் சொல்கிறார். அவர் தேவன்.
நாமும் சீடர்களைப் போலத்தான். கடினமான காலங்களில், தெளிவாக நம்மால் பார்க்க இயலாது. தேவன் என்ன செய்தார், என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறோம். சிறுவன் லியோ சிறப்புக் கண்ணாடிகளை அணிந்தபோது, அவரது பெற்றோரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நாமும் "தேவ கண்ணாடியை" அணிய வேண்டும், அதனால் இயேசு உண்மையில் யார் என்பதை நாம் தெளிவாகக் காணலாம்.
தேவனின் கரங்கள் விரிந்துள்ளன
என் கைப்பேசியை முகத்தைச் சுருக்கி பெருமூச்சோடு பார்த்தேன். கவலை என் புருவத்தைச் சுருக்கியது. தோழிக்கும் எனக்கும் எங்கள் குழந்தைகள் குறித்து கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது, மேலும் நான் அவளை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் எங்கள் கருத்துக்கள் இன்னும் முரண்படுகின்றன, ஆனால் நாங்கள் கடைசியாக இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தபோது நான் தயவாக அல்லது பணிவாக இருக்கவில்லை என்பதை நான் அறிவேன்.
தொலைப்பேசியில் அழைக்கும் முன் நான் யோசித்தேன், அவள் என்னை மன்னிக்கவில்லை என்றால்? அவள் நட்பைத் தொடர விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அப்போதுதான், ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்து, நான் தேவனிடம் என் பாவத்தை ஒப்புக்கொண்ட தருணத்திற்கு என்னை அழைத்துச் சென்றது. தேவன் என்னை மன்னித்து, குற்ற உணர்ச்சியிலிருந்து என்னை விடுவித்ததை அறிந்ததால் நான் நிம்மதியடைந்தேன்.
உறவு ரீதியான பிரச்சினைகளை நாம் தீர்க்க முயலும்போது பிறர் நமக்கு எவ்வாறு ஒத்துழைப்பார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நமது பங்கிற்குச் செய்யக்கூடியவையெல்லாம், தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்வதே. முடிவைத் தேவன் கையாளட்டும். மனிதர்களால் ஏற்படும் தீராத பிரச்சினைகளின் வலியை நாம் தாங்க வேண்டியிருந்தாலும், தேவனோடு நமக்குச் சமாதானம் எப்போதும் உண்டு. தேவனின் கரங்கள் திறந்திருக்கின்றன, நமக்குத் தேவையான கிருபையையும் கருணையையும் காட்ட அவர் காத்திருக்கிறார். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9).
நல்ல மேய்ப்பன்
பாஸ்டர் வாரன், தமது தேவாலயத்தில் ஒரு நபர் தம் மனைவி மற்றும் குடும்பத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, அவரோடு பேசும்படி தற்செயலாக அந்த மனிதரைச் சந்திக்க உதவுமாறு தேவனிடம் கேட்டார். தேவன் செய்தார்! வாரன் ஒர் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அருகிலுள்ள சாவடியில் அந்த மனிதரைக் கண்டார். "பசியோடிருக்கும் எனக்கும் இடம் உண்டா?" என்று அவரிடம் கேட்டார், சீக்கீரமாக அவர்கள் ஆழமாகப் பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஜெபித்தனர்.
எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் தமது மந்தையை மேய்ப்பேன் என்று கூறியது போல; ஒரு போதகராக, வாரன் தமது தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மேய்ப்பனாகச் செயல்பட்டார். தேவன் தம்முடைய சிதறிய ஆடுகளைத் தேடி, அவற்றை மீட்டு, ஒன்று சேர்ப்பதாக வாக்களித்தார் (எசேக்கியேல் 34:12-13). "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்" என்றும், "காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டு (வருவேன்)" என்றும், "எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்" என்றும் சொன்னார் (வ. 14–16). தம் ஜனங்களின் மீதான தேவனின் அன்பு இந்த ஒவ்வொரு உருவகத்திலும் எதிரொலிக்கிறது. எசேக்கியேலின் வார்த்தைகள் தேவனின் எதிர்கால செயல்களை எதிர்நோக்கியிருந்தாலும், அவை தேவனின் நித்திய இதயத்தையும் மேய்ப்பனாக வெளிப்படப்போகும் இயேசுவையும் பிரதிபலிக்கின்றன.
நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டு, நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார். ஆடுகளுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பரை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் ஏங்குகிறார் (பார்க்க யோவான் 10:14-15).