நான்கு மாத வயதில், லியோ தனது பெற்றோரைப் பார்த்ததில்லை. அவன் குறைபாட்டுடன் பிறந்ததால், பார்வை மங்கலாக இருந்த்து. அவனுக்கு அடர்ந்த மூடுபனியில் வாழ்வது போல் இருந்தது. ஆனால் கண் மருத்துவர்கள் அவனுக்கு சிறப்புக் கண்ணாடிகளைப் பொருத்தினர்.

லியோவின் கண்களுக்கு மேல் புதிய கண்ணாடியை அவன் அம்மா வைத்ததை அவன் அப்பா காணொளியாக வெளியிட்டார். லியோவின் கண்கள் மெதுவாகக் கவனம் செலுத்துவதை நாங்கள் பார்த்தோம். அவன் அம்மாவை முதன்முறையாகப் பார்க்கும்போது அவன் முகத்தில் ஒரு புன்னகை பரவியது. விலைமதிப்பற்ற அந்த நேரத்தில், சிறுவன் லியோ தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இயேசு தம் சீடர்களுடன் நடத்திய உரையாடலை யோவான் தெரிவிக்கிறார். பிலிப்பு அவரிடம், “பிதாவை எங்களுக்குக் காண்பியும்”(யோவான் 14:8) எனக் கேட்டார். அவருடன் இருந்த இத்தனை நாட்களுக்கு பிறகும் கூட இயேசுவின் சீடர்களால் தங்கள் முன்னிருந்தவரை அறிந்துகொள்ள இயலவில்லை. “நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?” (வ.10) என்று இயேசு பதிலளித்தார். முன்னதாக இயேசு, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (வ.6) என்று கூறியிருந்தார். “நானே” என்று இயேசு கூறிய ஏழு கூற்றுகளில் இது ஆறாவதாகும். இந்த “நானே” என்கிற கூற்றுகள் வழியாக அவர் உண்மையிலே யாரென்று பார்க்கும்படி நம்மிடம் சொல்கிறார். அவர் தேவன்.

நாமும் சீடர்களைப் போலத்தான். கடினமான காலங்களில், தெளிவாக நம்மால் பார்க்க இயலாது. தேவன் என்ன செய்தார், என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறோம். சிறுவன் லியோ சிறப்புக் கண்ணாடிகளை அணிந்தபோது, ​​​​அவரது பெற்றோரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நாமும் “தேவ கண்ணாடியை” அணிய வேண்டும், அதனால் இயேசு உண்மையில் யார் என்பதை நாம் தெளிவாகக் காணலாம்.