Archives: பிப்ரவரி 2023

ஜீவத்தண்ணீர்

கீதாவின் குடும்ப வாழ்க்கை நிலையற்றது, பதினான்கு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வேலை தேடி நண்பர்களுடன் வாழ்ந்தாள். அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஏங்கியவள், பின்னர் அவளுக்குப்  போதைப்பொருளை அறிமுகப்படுத்தியவனுடன் சென்றாள். அவளுடைய வழக்கமான குடிப்பழக்கத்துடன் இதுவும் சேர்ந்தது. ஆனால் உறவும் போதைப் பொருட்களும் அவளது ஏக்கங்களை பூர்த்தி செய்யவில்லை. அவள் தேடிக்கொண்டே இருந்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடன் ஜெபிக்க முன்வந்த இயேசுவின் விசுவாசிகளை அவள் சந்தித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, அன்பின் தாகத்தைத் தணிக்கும் இயேசுவை அவள் இறுதியாகக் கண்டாள்.

கிணற்றடியில் இயேசு தண்ணீருக்காக அணுகிய சமாரியப் பெண்ணின்  தாகமும் தணிந்தது. பகல் வெப்பத்தில் அவள் அங்கே இருந்தாள் (யோவான் 4:5-7) அவளுடைய பல கணவர்களின் கதை மற்றும் தற்போதைய தவறான உறவு (வவ. 17-18) குறித்து மற்ற பெண்களின் பார்வை மற்றும் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். இயேசு அவளை அணுகி அவளிடம் தண்ணீர் கேட்டபோது, ​​அவர் அன்றைய சமூக மரபுகளை உடைத்தார். காரணம் அவர் ஒரு யூத போதகர், பொதுவாக ஒரு சமாரியப்  பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவளை நித்திய ஜீவனுக்கு இட்டுச் செல்லும் ஜீவத்தண்ணீரை பரிசாகக் கொடுக்க விரும்பினார் (வ. 10). அவள் தாகத்தைத் தீர்க்க விரும்பினார்.

இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்கையில், ​​நாமும் இந்த ஜீவத் தண்ணீரைக் குடிக்கிறோம். அவரைப் பின்தொடரும்படி மற்றவர்களை அழைத்து ஜீவத்தண்ணீரை பகிர்ந்து கொள்ளலாம்.

தாழ்மை தினம்

மேலைநாடுகளின் விசித்திரமான விடுமுறை தினங்கள் சற்று வேடிக்கையாக இருக்கும். பிப்ரவரியில் மட்டும் ஸ்டிக்கி ரொட்டி தினம், வாள் விழுங்குவோர் தினம், நாய் பிஸ்கட் பாராட்டு தினம் கூட! இன்றைக்கு, தாழ்மையாய் இருத்தல் தினம் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் நல்லொழுக்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பணிவு, நிச்சயமாகக் கொண்டாடத் தகுந்தது. ஆனால் சுவாரஸ்யமாக, அவ்வாறு எப்போதும் இருந்ததில்லை.

பண்டைய உலகில் தாழ்மை ஒரு பலவீனமாகக் கருதப்பட்டது, அது நற்பண்பு அல்ல, அதற்கு மாறாகக் கௌரவமே மதிப்பிற்குரியதாய் இருந்தது. ஒருவரின் சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவது வழக்கமாய் இருக்க, நீங்கள் உங்கள் நிலையை உயர்த்த வேண்டுமேயன்றி அதை ஒருபோதும் குறைக்கக் கூடாது. தாழ்மை என்பது எசமானுக்கு வேலைக்காரன் போன்ற பணிவு என்று பொருள். ஆனால், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இவை அனைத்தும் மாறிவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அங்கு, "தேவனுடைய ரூபமாயிருந்தவர்" , "அடிமையின் ரூபமெடுத்து" தனது தெய்வீக அந்தஸ்தை விட்டுக்கொடுத்து, மற்றவர்களுக்காக இறப்பதற்குத் தன்னைத் தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:6-8). அத்தகைய விந்தையான செயல், தாழ்மை என்பதற்கு புதியதோர் அர்த்தம் கொடுத்தது . முதல் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்து செய்தவற்றின் விளைவாக உலகப்பிரகாரமான எழுத்தாளர்கள் கூட மனத்தாழ்மையை ஒரு நற்பண்பு என்று அழைத்தனர்.

ஒவ்வொரு முறையும், ஒருவர் இன்று தாழ்மையுடன் இருப்பதற்காகப் பாராட்டப்படும்போது, ​​நற்செய்தி மறைமுகமாகப் பிரசங்கிக்கப்படுகிறது. இயேசு இல்லாமல், தாழ்மை நன்மையான ஒன்றாக இருந்திருக்காது.  அல்லது "தாழ்மையுடன் இருத்தல்" என்ற நாளும்  இருந்திருக்காது. கிறிஸ்து நமக்காகத் தம்முடைய அந்தஸ்தைத் துறந்து, வரலாற்றின் மூலம் தேவனின் தாழ்மையான தன்மையை வெளிப்படுத்தினார்.

உன் இதயத்தை காத்துக்கொள்

ஹங்கேரியைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆபிரகாம் வால்ட், 1938 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த பிறகு இரண்டாம் உலகப் போரின் முயற்சிகளுக்குத் தமது திறன்களை வழங்கினார். இராணுவம் தனது விமானத்தை எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தது, எனவே வால்ட் மற்றும் புள்ளியியல் ஆராய்ச்சி குழுவில் உள்ள அவரது சகாக்களிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து இராணுவ விமானங்களை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாப்பது என்பதைக் கண்டுபிடிக்க,  திரும்பி வரும் விமானங்களை ஆய்வு செய்து அவை எங்கு அதிகம் சேதமடைந்துள்ளன என்பதைப் பார்க்கத் தொடங்கினர். அவ்வாறு திரும்பிய விமானத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கப்பட்டும் இன்னும் இயங்கக்கூடியதாக இருந்ததைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவை வால்ட் பெற்றிருந்தார். விபத்துக்குள்ளான விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளை அவர் கண்டறிந்தார். ஆனால் என்ஜின் பகுதியில் தாக்கப்பட்ட விமானங்கள் செயலிழந்துவிட்டன, அவற்றை ஆய்வு செய்ய முடியவில்லை.

நம்முடைய மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியான நமது இதயத்தைப் பாதுகாப்பது பற்றி சாலொமோன் கற்றுக்கொடுக்கிறார். அவர் தமது மகனுக்கு "[அவரது] இதயத்தைக் காத்துக்கொள்" என்று அறிவுறுத்துகிறார், ஏனென்றால் அதிலிருந்து மற்ற அனைத்தும் பாய்கின்றன. (நீதிமொழிகள் 4:23) தேவனுடைய அறிவுரைகள் வாழ்க்கை பாதையில் நம்மை நடத்துகின்றன, தவறான முடிவுகளிலிருந்து நம்மைத் திசைதிருப்புகின்றன, மேலும் நம் கவனத்தை எங்குச் செலுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கின்றன.

அவருடைய அறிவுரைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலம் நாம் நம் இதயத்திற்குக் கவசம் அணிவித்தால், நாம் நம் "காலைத் தீமைக்கு விலக்கி" மேலும் தேவனுடனான நமது பயணத்தில் உறுதியாக இருப்போம் (வச. 27). நாம் ஒவ்வொரு நாளும் எதிரியின் எல்லைக்குள் நுழைகிறோம், ஆனால் தேவனின் ஞானம் நம் இதயங்களைக் காத்துக்கொண்டால், தேவனின் மகிமைக்காகச் சிறப்பாக வாழ்வதற்கான நமது பணியில் கவனம் செலுத்த முடியும்.

உண்மையான தேவை என்ன

சமைக்கும்போது ​​ஒரு இளம் தாய் இறைச்சியை ஒரு பெரிய பாத்திரத்தில் வைப்பதற்கு முன் பாதியாக வெட்டினார். ஏன் இறைச்சியைப் பாதியாக வெட்டினாள் என்று கணவர் கேட்க, "ஏனென்றால் என் அம்மா அதை அப்படி தான் சமைப்பார்" என்று பதிலளித்தாள்.

எனினும் கணவனின் கேள்வி அந்தப் பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே அவள் தன் தாயிடம் அந்த பாரம்பரியம் பற்றிக் கேட்டாள். அந்த தாயார் பயன்படுத்திய சிறிய பானையில் அது பொருந்தும் வகையில் அவர் இறைச்சியை வெட்டியதை அறிந்து அவள் அதிர்ச்சியடைந்தாள். மேலும் அந்த மகளிடம் பல பெரிய பானைகள் இருந்ததால், இறைச்சியை வெட்டுவது தேவையற்றது.

பல மரபுகள் ஒரு தேவையிலிருந்து தான் தொடங்குகின்றன, ஆனால் அவை கேள்வியின்றி தொடரப்படுகின்றன. இறுதியில் அது நடைமுறையாக மாறுகிறது. மனித மரபுகளைக் கடைப்பிடிக்க விரும்புவது இயல்புதான் அதைத்தான் பரிசேயர்கள் தங்கள் காலத்தில் செய்து கொண்டிருந்தனர் (மாற்கு 7:1-2). அவர்கள் தங்கள் மத விதிகளில் ஒன்றை மீறுவது போல் தோன்றினாலும் தடுமாறினர்.

இயேசு பரிசேயர்களிடம் ,"நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய்" (வ. 8) என்று கூறுகையில், மரபுகள் ஒருபோதும் வேதத்தால் உண்டாகும் அறிவை மாற்றக்கூடாது என்பதை அவர் வெளிப்படுத்தினார். தேவனைப் பின்பற்றுவதற்கான மெய்யான வாஞ்சை (வ. 6-7) வெளிப்புறச் செயல்களை விட நம் இதயத்தின் மனோபாவத்தில் கவனம் செலுத்தச்செய்யும்.

நாம் நம் மனதிற்கு விருப்பமான அல்லது மத ரீதியாகப் பின்பற்றும் எந்த பாரம்பரியங்களையும் தொடர்ந்து பகுத்தறிவதே நல்லது. 'உண்மையிலேயே தேவை' என்று தேவன் வெளிப்படுத்திய விஷயங்கள் தான் எப்போதும் மரபுகளுக்கு மேலாக வைக்கப்படவேண்டும்.