பாவிகளுக்கான மருத்துவமனை
காத்மாண்டுவில் உள்ள எனது நண்பனின் சபைக்குச் சென்றிருந்தேன், ஆலயவாசலில் அவன் வைத்திருந்த குறிப்பைக் கண்டேன். அதிலே, "சபையென்பது பாவிகளுக்கு மருத்துவமனையேயன்றி, பரிசுத்தவான்களின் அருங்காட்சியகமல்ல" என்றிருந்தது. அருங்காட்சியகம் என்ற சொல்லாடல் எனக்கு விகற்பமாயிருப்பினும், மருத்துவமனை என்ற மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவே சரி என்பது என் தனிப்பட்ட கருத்து.
மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக ஊழியர்கள். நோயாளிகள் எனப் பலரைக் கொண்டதுதான் மருத்துவமனை. ஒரு மருத்துவமனையில், நாம் அறிந்த அனைத்து வகையான உணர்ச்சிகளையும் காணலாம். மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளின் பேரில் நாட்டமுடையவர்களாக, அவர்களுடைய மனப்பான்மைக்கேற்றவாறு மாறுகிறார்கள். அநேகர் இப்படி சேவை செய்கிறார்கள்.
சி.எஸ்.லூயிஸ், "நீங்களிருக்கும் அதே மருத்துவமனையில் நான் உங்கள் சகநோயாளி என்றெண்ணிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு சற்றுமுன்னரே அனுமதிக்கப்பட்டேன். ஆகையால் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன்" என்றார். "எனக்கு நோயில்லை, இனிமேலும் நோய்வாய்ப்படமாட்டேன்" என்பதுபோல அந்த பரிசேயன் சுயநீதியின் ஆணவத்தால் மேட்டிமையின் பீடத்தில் பேசினது போலல்லாமல், தன்னை சகநோயாளியாக பாவித்து, எந்த வகையிலும் தான் சிறந்தவனல்ல என்பதுபோல சொன்னார்.
எந்தவொரு பாவமும் அறியாத இயேசு பாவிகளுக்கும் ஆயக்காரர்களுக்கும்
சிநேகிதரானார். அவருடைய இரக்கமும் கிருபையும் தேவைப்படும் பாவிகளுக்கு நாம் சிநேகிதரா? என்பதே கேள்வி.
வாழ்வின் அர்த்தம்
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்க்கே லூயிஸ் போர்க்கஸ் என்பவர் எழுதிய ஒரு சிறுகதையில் ரோம போர் சேவகனாக இருக்கும் மார்க்கஸ் ரூபஸ் எனும் கதாபாத்திரம், "மனிதர்களுக்கு சாவாமை தரும் ரகசிய நதியின்" தண்ணீரைக் குடிக்கிறான். சாவாமைக்குள் கடந்துபோகும் அவன் காலப்போக்கில், தான் சாவாமை குறித்து எண்ணியவையெல்லாம் தவறு என்பதையும், குறிக்கோளற்ற இந்த எல்லையில்லா வாழ்வு அர்த்தமற்றது என்றும் புரிந்துகொள்கிறான். அதற்கு மாற்றுமருந்தாக ஒரு தெளிவான நீரூற்றைக் கண்டுபிடிக்கும் மார்க்கஸ், அதிலே பருகியவுடன் மீண்டும் சாதாரண மனிதனாகிறான். அதை உறுதிப்படுத்த முள்ளில் தன் கையை தேய்க்க, அவனுக்கு ரத்தமும் வருகிறது.
மார்கஸை போலவே நாமும் சிலநேரம் வாழ்வின் முடிவையும் மரணத்தின் எதிர்பார்ப்பையும் எண்ணி விரக்தியடைகிறோம் (சங்கீதம் 88:3). மரணம் வாழ்விற்கு அர்த்தம் தருவதாக நாம் எண்ணுகிறோம், ஆனால் இதில் தான் நாம் தவறுகிறோம். மார்கஸை போலல்லாமல், கிறிஸ்துவின் மரணத்தில் நமது வாழ்வின் உண்மையான அர்த்தத்தை நாம் கண்டடைவோம். அவர் தம்முடைய ரத்தத்தைச் சிலுவையில் சிந்தி (கிறிஸ்து) மரணத்தை வென்று, அதை ஜெயமாக விழுங்கினார் (1 கொரிந்தியர் 15:54). நமக்கான மாற்றுமருந்து ஜீவ நீரூற்றாகிய (யோவான் 4:10) இயேசுவிடம் உள்ளது. நாம் அதைப் பருகுவதால், மரணம் வாழ்வு மற்றும் சாவாமை ஆகியவற்றின் விதிகள் மாறுகின்றன (1 கொரிந்தியர் 15:52).
உடல்ரீதியாக நாம் மரிப்பது மெய்தான். ஆனால் அது முடிவில்லை. மரணம், வாழ்க்கை இவைகளைக்குறித்த நமது விரக்தியை இயேசு தலைகீழாக்கி விட்டார் (எபிரெயர் 2:11–15). கிறிஸ்துவுக்குள் நமக்குப் பரலோக நம்பிக்கையும், அவருடனே கூட அர்த்தமுள்ள நித்தியஜீவ சந்தோஷமும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நான் மணி சத்தம் கேட்டேன்
1863 ஆம் ஆண்டு, ஹென்றி வாட்ஸ்வர்த் லாங்பெல்லோ எழுதிய "கிறிஸ்துமஸ் தினத்தன்று மணியோசைக் கேட்டேன்" என்ற பாடல், பொதுவான கிறிஸ்துமஸ் பாடலை போன்றதல்ல. கிறிஸ்துமஸின் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டிய வரிகளில், புலம்பலும், அழுகையும் இருந்தது. "விரக்தியில் நான் தலைகவிழ்ந்தேன், பூமியில் சமாதானம் இல்லையென்றேன், வெறுப்பு வலிதாய் உள்ளதால், அது பூமியிலே சமாதானம் என்ற பாடலை பரிகசிக்கிறது". எனினும் இந்த புலம்பல், நம்பிக்கைக்கு நேரே பயணித்து "தேவன் மரித்துவிடவில்லை, அவர் தூங்கவும் இல்லை, தீமை தோற்று சத்தியம் மேற்கொண்டு, மனுஷர்மேல் பிரியமும் பூமியிலே சமாதானமும் உண்டாகும்" என வாக்குறுதி அளிக்கிறது.
புலம்பலிலிருந்து நம்பிக்கை தோன்றும் இந்த வகையான வேதத்தின் புலம்பல், சங்கீதங்களிலும் காணப்படுகின்றது. சங்கீதம் 43 இல், சங்கீதக்காரன் தனக்கு எதிராய் வரும் சத்துருக்களைக் குறித்துப் புலம்புவதில் துவங்குகிறது (வ.1) மேலும், அவனுடைய தேவன் அவனை மறந்துவிட்டது போல அவனுக்குத் தோன்றியது (வ.2). ஆனால் சங்கீதக்காரன் புலம்பிக்கொண்டே இருக்கவில்லை; தன்னால் முழுவதுமாய் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் தான் நம்புகிற தேவனை நோக்கி, "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." (வ.5) என்று பாடுகிறான்.
நமது வாழ்விலும் புலம்புவதற்கு அநேக காரணங்கள் உண்டு, அவைகளை அவ்வப்போது நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அந்தப் புலம்பல் நம்மை நம்பிக்கையின் தேவனுக்கு நேரே நடத்த நாம் அனுமதித்தால், நமது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகும்.
நலமானதைப் பற்றிக்கொள்ளுதல்
எங்கள் காரை அந்த திறந்தவெளியில் நிறுத்திவிட்டு, அதைக் கடந்து எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் ஒட்டுத் துத்திகள் (பர் மலர்கள்) எங்கள் ஆடையில் ஒட்டிக்கொள்ளும். குளிர்காலத்தில் இது வாடிக்கையானதுதான். இந்தச் சிறியத் தாவரங்கள் தங்களைக் கடப்பவர்களின் ஆடைகள், காலணிகள் மற்றும் எங்குவேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு, உதிரும்வரை அங்கேயே நிலைத்திருக்கும். அருகாமையிலும், உலகெங்கிலும்கூட விதையைப் பரப்பும் ஒட்டுத் துத்திகளின் இயற்கை வழிமுறை இது.
என்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தாவரங்களை அகற்றும்போதெல்லாம், "நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்" (ரோமர் 12:9) என்று விசுவாசிகளை அறிவுறுத்தும் இயேசுவின் செய்தியை நினைத்துக்கொள்வேன். மற்றவர்களிடம் அன்பு கூறுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பிறரிடம் காணப்படும் தீமையானவற்றைப் புறந்தள்ளி, நன்மையான காரியங்களைப் பற்றிக்கொண்டால், ஆவியானவரின் வழிநடத்துதலால் நமது அன்பில் "மாயமற்றவர்களாய்" இருக்க முடியும் (வ.9).
இந்த ஒட்டுத் துத்திகளை லேசாக அகற்ற முடியாது, அவ்வளவு வலுவாக ஒட்டியிருக்கும். நாமும்கூட நன்மையானவற்றையே நோக்கிப் பார்க்க வேண்டும். நமது சிந்தையை தேவனின் இரக்கம், தயவு மற்றும் கற்பனைகள் ஆகியவற்றில் பதிய வைக்கும்போது, அவருடைய பெலத்தால் நாமும் மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பில் கட்டப்பட முடியும். நமது தேவைகளைக் காட்டிலும் பிறர் தேவைகளை முன்னிலைப்படுத்தி, நாம் "ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்க" (வ.10) தேவனே நமக்கு உதவி செய்வார்.
அந்த ஒட்டுத் துத்திகள் எரிச்சலூட்டுபவைதான், எனினும் அவைகள் எனக்கு அன்பிலே பிறரைப் பற்றிக்கொண்டிருக்கவும்; தேவனின் வல்லமையால் "நன்மையானவைகளை" (வ.9, பிலிப்பியர் 4:8–9) இறுகப் பிடித்துக்கொள்ளவும் நினைவூட்டின.