1863 ஆம் ஆண்டு, ஹென்றி வாட்ஸ்வர்த் லாங்பெல்லோ எழுதிய  “கிறிஸ்துமஸ் தினத்தன்று மணியோசைக் கேட்டேன்”  என்ற பாடல், பொதுவான கிறிஸ்துமஸ் பாடலை  போன்றதல்ல. கிறிஸ்துமஸின் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டிய வரிகளில், புலம்பலும், அழுகையும் இருந்தது. “விரக்தியில் நான் தலைகவிழ்ந்தேன், பூமியில் சமாதானம் இல்லையென்றேன், வெறுப்பு வலிதாய் உள்ளதால், அது பூமியிலே சமாதானம் என்ற பாடலை பரிகசிக்கிறது”. எனினும் இந்த புலம்பல், நம்பிக்கைக்கு நேரே பயணித்து “தேவன் மரித்துவிடவில்லை, அவர் தூங்கவும் இல்லை, தீமை தோற்று சத்தியம் மேற்கொண்டு, மனுஷர்மேல் பிரியமும் பூமியிலே சமாதானமும் உண்டாகும்” என வாக்குறுதி அளிக்கிறது.

புலம்பலிலிருந்து நம்பிக்கை தோன்றும் இந்த வகையான வேதத்தின் புலம்பல், சங்கீதங்களிலும் காணப்படுகின்றது. சங்கீதம் 43 இல், சங்கீதக்காரன் தனக்கு எதிராய் வரும் சத்துருக்களைக் குறித்துப் புலம்புவதில் துவங்குகிறது (வ.1) மேலும், அவனுடைய தேவன் அவனை மறந்துவிட்டது  போல அவனுக்குத் தோன்றியது (வ.2). ஆனால் சங்கீதக்காரன் புலம்பிக்கொண்டே இருக்கவில்லை; தன்னால் முழுவதுமாய் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் தான் நம்புகிற தேவனை நோக்கி, “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.” (வ.5) என்று பாடுகிறான்.

நமது வாழ்விலும் புலம்புவதற்கு அநேக காரணங்கள் உண்டு, அவைகளை அவ்வப்போது நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அந்தப் புலம்பல் நம்மை நம்பிக்கையின் தேவனுக்கு நேரே நடத்த நாம் அனுமதித்தால், நமது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகும்.