கிறிஸ்துமஸின் அற்புதம்
விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பைக் கண்டேன். அதிலிருந்த குழந்தை இயேசுவின் சிற்பத்தில், குழந்தையின் வடிவம் அச்சசலாக செதுக்கப்பட்டிருந்தது. இந்த புதிதாய் பிறந்த குழந்தை, துணியால் சுற்றப்பட்டு, கண்கள் மூடியது போலில்லாமல், அதின் கண்கள் திறந்தும், கைகளை விரித்து சற்றே துணிகளை அகற்றியும், கரங்கள் அகற்றி, விரல்கள் நீட்டப்பட்டிருந்தது. "இதோ இங்கே இருக்கிறேன்" என்று சொல்வது போலிருந்தது.
இந்தச் சிறிய சிலை கிறிஸ்துமஸின் அற்புதத்தைப் பறைசாற்றியது. தேவன் தமது குமாரனை மனு உருவில் உலகத்திற்கு அனுப்பினார். குழந்தையான இயேசு வளருகையில் அவருடைய சிறு கைகள் பொம்மைகளோடு விளையாடினது, பின்பு வேதத்தை ஏந்தினது, பின்னர் ஊழியம் செய்யும் வரைக்கும் மரச்சாமான்களை உருவாக்கியது. அவர் பிறந்தபோது மிருதுவான பூரணமான அவருடைய கால்கள், ஓரிடம் விட்டு வேறிடம் சென்று போதிக்கவும், சுகமாக்கவும் அவரை சுமந்தது. அவருடைய வாழ்வின் முடிவிலே, இந்த கைகளும் கால்களும் ஆணிகளால் கடாவப்பட்டு, அவருடைய உடலைச் சிலுவையில் சுமந்தது.
தமது குமாரனை நமது பாவங்கள் போக்கும் பலியாகத் தேவன் அருளி, நம்மீதிருந்த பாவத்தின் ஆளுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று ரோமர் 8:3 சொல்கிறது. நாம் இயேசுவின் பலியை நமது பாவங்களுக்கான பிராயச்சித்தமாக ஏற்றுக்கொண்டு, நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கையில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைவோம். தேவ குமாரன் நமக்காகக் குழந்தையாகப் பிறந்ததால், நாம் தேவனோடு ஒப்புரவாக வழியுண்டு, அவரோடு நித்தியகாலம் வாழும் நிச்சயமும் உண்டு.
இது போதும்
ஒரு திரைப்படத்தில், ஏழை விவசாயி ஒருவர் தன்னுடைய மூன்று மகள்களுக்குத் திருமணம் முடிக்கச் சிரமப்படுகிறார். தேவனிடம், தனது பொருளாதாரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்: "தேவனே நீர் அநேக ஏழைகளைப் படைத்துள்ளீர். ஏழையாய் இருப்பது அவமானமல்ல என்று புரிகிறது, ஆனால் அதில் பெருமையும் இல்லையே. எனவே எனக்குச் சிறிது ஆஸ்தி இருப்பதில் தவறென்ன, நான் ஐசுவரியவானாய் இருந்தால் உமது பிரம்மாண்டமான நித்திய திட்டம் நிறைவேறாதோ?"
ஷோலேம் அலெய்க்கேம் என்ற இத்திரைப்பட வசனகர்த்தா இந்த விவசாயி மூலம் இவ்வார்த்தைகளைப் பேசுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆகூர் இதேபோல யதார்த்தமான ,சற்று வித்தியாசமான ஜெபத்தைத் தேவனிடம் ஏறெடுப்பதை நீதிமொழிகள் புஸ்தகத்தில் பார்க்கலாம். ஆகூர் தேவனிடம் தனக்குச் செல்வத்தையும் வறுமையையும் தரவேண்டாமென்றும், மாறாகத் தனது படியை அளந்து போஷிக்குமாறும் கேட்கிறார் (நீதிமொழிகள் 30:8-9). அதிகமாக இருந்தால் பெருமையடைந்து தேவனை மறுதலிப்பவனாக மாறிவிடக்கூடும், தரித்திரனாக விட்டால் தான் பிறரிடம் திருடி தேவனின் நாமத்திற்கு அவமரியாதை உண்டாக்கக்கூடும் என்றும் அறிந்திருந்தார் (வ.9). தன்னை போஷிப்பவர் தேவனே என்பதை ஆகூர் புரிந்துகொண்டார். எனவே, தனது அனுதின தேவைகளுக்கு "படியை அளந்து" போடுமாறு கேட்கிறார். தேவனைப் பின்தொடர்வதையும், அவரால் மட்டுமே உண்டாகும் நிறைவையும் ஆகூரின் ஜெபம் வெளிக்காட்டுகிறது.
ஆகூரின் இந்த மனநிலை நமக்கும் இருப்பதாக, தேவன் ஒருவரே நம்மை போஷிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வோமாக. அவருடைய நாமம் மகிமைப்படும் விதத்தில் பொருளாதார உயர்வுகளை நாடுகிற நாம், அவருக்குமுன் மனநிறைவோடு வாழவும் பழகலாம். ஏனெனில் அவர் "அளந்து போடுகிறவர்" மட்டுமல்ல, அதற்கும் மேலாகவே அளிப்பவர்.
விசுவாச மரபு
2019இல், அமெரிக்காவிலுள்ள இயேசுவின் விசுவாசிகளின் மத்தியில் காணப்பட்ட ஆவிக்குரிய பாரம்பரியத்தை குறித்த ஆய்வின்படி ஆவிக்குரிய முன்னேற்றத்தில் தாய்மார்களும், பாட்டிகளும் பெரும்பங்காற்றுவதாக அறிக்கை கூறுகிறது. ஆவிக்குரிய பின்னணியை சேர்ந்தவர்களில் மூன்றில் இருவர் தங்கள் விசுவாசத்திற்கு தங்கள் தாயை காரணமாகவும், மூன்றில் ஒருவர் தங்கள் தாத்தா பாட்டிகளை (பெரும்பாலும் பாட்டிகள்) காரணமாக கூறுகின்றனர்.
"மீண்டுமீண்டுமாக ஆவிக்குரிய வளர்ச்சியில் தாயின் நிலையான பங்களிப்பை இந்த ஆய்வு காட்டுகிறது" என அந்த ஆய்வின் ஆசிரியர் வியக்கிறார். வேதத்திலும் இதுபோன்ற தாக்கத்தை பார்க்கிறோம்.
தனது சீடனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், தீமோத்தேயுவின் விசுவாசமானது அவனுடைய பாட்டியாகிய லோவிசாலினாலும் தாயாகிய ஐனிக்கேயாவாலும் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:5). ஆதித்திருச்சபை தலைவர் ஒருவரின் வாழ்விலிருந்த இரு பெண்களின் தாக்கத்தை குறித்த தனிப்பட்ட குறிப்பு எவ்வளவு இனிமையானது. "'நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு..பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்."' (3:14–15) என்று தீமோத்தேயுவை ஊக்குவிக்க பவுல் கூறுவதிலும் அவர்களின் தாக்கத்தை காணமுடியும்.
வலிமையான ஆவிக்குரிய மரபு ஒரு வரமாகும். ஆயினும் தீமோத்தேயுவின் விசுவாசத்தை வடிவமைத்த நல்ல தாக்கங்கள் நமது வளர்ப்பில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை வடிவமைக்கும் உன்னதமான தாக்கங்களை உண்டாக்கும் அநேகர் நமக்குண்டு. அனைத்திற்கும் மேலாக, நம்மை சுற்றிலுமிருப்பர்களுக்கு உண்மையான விசுவாசத்திற்கு ஒரு மாதிரியையும், நிலைத்திருக்கும் மரபையும் விட்டுச்செல்லும் வாய்ப்பும் நமக்குண்டு.