இதயங்கள் ஒன்றாய் துடித்தல்
ஆதிகாலம் தொடங்கியே, கதைசொல்லும் பழக்கம் மனிதர்களிடம் இருக்கிறது. எழுத்துக்கள் புழக்கத்தில் இல்லாத காலம் தொட்டே அறிவை புகட்ட, கதைகள் வழிவகுத்தது. "'ஒருகாலத்தில்" என்று ஆரம்பிக்கும் கதையின் வரிகளைப் படிக்கும்போதும் அல்லது கேட்கும்போதும் நமக்கு உண்டாகும் மகிழ்ச்சியையும், ஈடுபாட்டையும் அனைவரும் அறிவோம். கதையின் வலிமையானது, மகிழ்ச்சி என்ற எல்லையையும் கடந்து நீள்கிறது. நாம் ஒன்றாய் கதைகேட்கும்போது, நமது இதயங்கள் ஒன்றுபடுவதை உணரலாம். ஒரு நாளைக்கே அடிக்கடி மாறும் சராசரி மனிதனின் இதயத்துடிப்பு, எப்போதாகிலும் தான் மற்றொருவருடன் ஒரேமாதிரி ஒன்றாய் துடிக்கும். ஆனால் நாம் ஒரேசமயம் ஒன்றாய் கதைகேட்கும்போது, நமது இதயத்துடிப்புகளும் கூட ஒன்றுபடுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர்.
தேவனும் தனது கதையை, "ஆதியிலே" (ஆதியாகமம் 1:1) என்று ஆரம்பிக்கிறார். ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் சுவாசத்தைப் பெற்றுக்கொண்ட நொடியிலிருந்து (வ. 27), நமது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி அவரது பிள்ளைகளென்ற முறையில் நமதனைவரின் வாழ்வையும் வடிவமைக்க, தேவன் இந்த கதையை விவரிக்கத் துவங்குகிறார். இதுவரை எழுதப்பட்டவைகளிலே மிகவும் உன்னதமானதும் சற்றும் கற்பனையில்லாததுமான படைப்பாகிய வேதத்தின்மூலம், தேவன் தமக்குச் சொந்த ஜனங்களாக இயேசுவின் விசுவாசிகளாகிய நம்மை தமது நோக்கங்களுக்காகப் பிரித்தெடுத்து நமது இதயங்களை ஒன்றிணைத்துள்ளார் (1 பேதுரு 2:9).
அதின் விளைவாக நமது படைப்பாளியின் ஆக்கப்பூர்வமான கிரியைகளில் மகிழ்ந்து நமது இதயங்கள் ஒரேசீராகத் துடிப்பதாக. மேலும், "ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்து (சொல்லி)" (சங்கீதம் 96:3), அவர்களையும் அதிலே பங்கடைய செய்வோமாக.
நீங்கள் பயப்படுகையில்
எனது வழக்கமான உடற்பரிசோதனை நாள் வந்தது, சமீபத்தில் எனக்கு எந்த நலக்குறைவு இல்லாதபோதிலும் எனக்கு பயமாகவே இருந்தது. பலநாட்களுக்கு முன் எதிர்பாராத நோயால் நான் பாதிக்கப்பட்ட நினைவுகள் என்னை திகிலூட்டின. என்னோடு தேவன் இருப்பதையும், நான் அவரை நம்பினால் போதுமென்றும் நான் அறிந்திருந்தேன். ஆயினும் பயந்தேன்.
என்னுடைய பயத்தாலும், விசுவாச குறைவாலும் எனக்கு ஏமாற்றமாயிருந்தது. தேவன் என்னோடு எப்போதும் இருப்பாரென்றால், எனக்கு ஏன் இவ்வளவு மனக்கவலை? பின்னொரு நாளின் காலையில் தேவன் என்னை கிதியோனின் கதைக்குநேரே நடத்துவதை உணர்ந்தேன்.
"பராக்கிரமசாலியே" (நியாயாதிபதிகள் 6:12) என்றழைக்கப்பட்ட கிதியோன், மீதியானர்களை எதிர்க்க வேண்டிய தனது பணியை குறித்து மிகவும் பயந்தார். தேவன் வெற்றியையும் தமது பிரசன்னத்தையும் அவனுக்கு வாக்களித்தபோதிலும், அதை கிதியோன் மீண்டும் மீண்டுமாக உறுதிப்படுத்துகிறான் (வ. 16−23, 36−40).
ஆயினும், கிதியோனின் பயத்திற்காக அவனை தேவன் கண்டிக்கவில்லை. அவனை புரிந்து கொண்டார். யுத்தத்தின் இரவில், கிதியோனுக்கு வெற்றியை மீண்டும் வாக்களிக்கிறார், மட்டுமன்றி அவனது பயங்களை அமைதிப்படுத்தும் வழியையும் உண்டாக்குகிறார் (7:10−11).
தேவன் எனது பயத்தையும் புரிந்துகொண்டார். அவரை நம்ப அவரின் உத்தரவாதம் என்னை ஊக்குவித்தது. என்ன நடந்தாலும், அவர் என்னோடிருப்பதை புரிந்துகொண்டதால் அவருடைய சமாதானத்தை அனுபவித்தேன். முடிவிலே, எனது மருத்துவ பரிசோதனையும் நன்றாகவே முடிந்தது.
நமது பயங்களைப் புரிந்துகொண்டு, தமது வார்த்தையினால் ஆவியினாலும் உத்தரவாதமளிக்கும் தேவன் நமக்குண்டு (சங்கீதம் 23:4; யோவான் 14:16−17). கிதியோனை போல நாமும் அவரை நன்றியோடு தொழுதுகொள்வோம் (நியாயாதிபதிகள் 7:15).
சரியான கிறிஸ்துமஸ் காட்சி
அந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தினத்தை அற்புதமாகப் படமாக்கியிருந்தனர். குடும்பத்திலுள்ள மூன்று சிறுவர்கள், மேய்ப்பர்களை போல வேடமணிந்து, புல்வெளியில் நெருப்பைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். திடீரென தூதன் வானிலிருந்து இறங்குவதைப்போல, அவர்களுடைய பெரிய அக்காள் குன்றிலிருந்து இறங்கி வந்தாள். ஆனால் அவள் அணிந்திருந்த நவநாகரீக காலணி மட்டும் பொருந்தவில்லை. பின்னிசைகள் இசைக்க, மேய்ப்பர்கள் வானை ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள். புல்வெளியில் சற்றுதூரம் நடந்தவர்கள், குழந்தை இயேசுவாக இருந்த தங்கள் கடைசி தம்பியைக் கண்டடைகிறார்கள். தூதனாக இருந்த பெரிய அக்காள் இப்போது மரியாளாக இருந்தாள்.
காணொளி முடிந்ததும் சிறப்புக் காட்சிகளாக, காணொளியை இயக்குகையில் நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து காட்சிகளாக வழங்கினர். அதில், "எனக்குக் குளிருகிறது" என்று குழந்தைகள் சிணுங்குகிறார்கள். "நான் இப்பொழுதே கழிவறைக்குச் செல்லவேண்டும்", "போதும், வீட்டுக்குப் போகலாம்" என்று குழந்தைகள் அலுத்துக்கொள்ள, அவர்களின் தாயாரோ "குழந்தைகளே கவனியுங்கள்" என்று பலமுறை சொல்கிறார். அந்த நேர்த்தியான கிறிஸ்துமஸ் காணொளியை விட, அதின் பின் இருந்த எதார்த்தம் முரணாகவே இருந்தது.
இதைப்போல கிறிஸ்துமஸ் சம்பவத்தை அற்புதமான முடிவுள்ள ஒரு கதையாகப் பார்ப்பது எளிது. ஆனால், இயேசுவின் வாழ்க்கை நாம் நினைப்பதுபோல அவ்வளவு சுலபமானதல்ல. பொறாமைகொண்ட ஏரோது, இயேசு குழந்தையாய் இருக்கையிலேயே அவரை கொல்ல பார்த்தான் (மத்தேயு 2:13). மரியாளும், யோசேப்பும் அவரை தவறாகப் புரிந்துகொண்டனர் (லூக்கா 2:41–50). உலகம் அவரை பகைத்தது (யோவான் 7:7). சிலகாலத்திற்கு அவருடைய சகோதரரும் அவரை விசுவாசிக்கவில்லை (7:5). அவர் மேற்கொண்ட பணி அவரை கொடூரமான மரணத்திற்கு நடத்தியது. இவையெல்லாவற்றையும் தமது பிதாவை மகிமைப்படுத்தவும், நம்மை மீட்கவுமே செய்தார்.
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு அந்த குடும்பத்தினரின் ஒளிப்பதிவு முடிகிறது. நாம் என்றென்றைக்கும் வாழக்கூடிய எதார்த்தம் அதுவே.
தேவனின் வார்த்தையின் வல்லமை
1968 கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, அப்பல்லோ 8 என்கிற விண்கலத்தின் விண்வெளி வீரர்களான பிராங்க் போர்மன், ஜிம் லொவெல் மற்றும் பில் ஆண்டர்ஸ் ஆகியோர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் மனிதர்களானார்கள். சந்திரனை பத்துமுறை சுற்றிவந்த அவர்கள், சந்திரன் மற்றும் பூமியின் புகைப்படங்களை அனுப்பினர். ஒரு நேரடி ஒலிபரப்பின்போது, அவர்கள் மாறிமாறி ஆதியாகமம் 1 ஐ வாசித்தனர். இதின் நாற்பதாம் ஆண்டின் நினைவு விழாவில், போர்மன் "கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, ஒரு மனித சத்தத்தைக் கேட்க இதுவரையில்லாத பெருங்கூட்டம் கூடுமென்றும், அவர்களுக்குப் பொருத்தமான எதையாகிலும் பேச வேண்டும் என்பதே நாசா இட்ட ஒரே கட்டளை"' என்றார். இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஒலிப்பதிவைக் கேட்டவர்களுக்கு அப்பல்லோ 8ன் விண்வெளி வீரர்கள் பேசின வேதாகம வசனங்கள் இன்றும் ஜனங்களின் இதயத்தில் சத்திய விதைகளாய் விதைக்கப்படுகின்றன.
தேவன், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்" (ஏசாயா 55:3) என்றார். தனது இரட்சிப்பின் இலவச ஈவை வெளிப்படுத்தி, நாம் நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவரது இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற அழைக்கிறார் (வ.6–7). அவருடைய நினைவுகள் மற்றும் செயல்களின்மீது தனக்கு மாத்திரம் இருக்கும் தெய்வீக அதிகாரத்தை அறிவிக்கும் தேவன், அவை நமது புரிந்துகொள்ளுதலுக்கு மிகவும் அப்பாற்பட்டது என்கிறார் (வ.8–9). ஆயினும், வாழ்வை மாற்றும் அவரது வேதாகம வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கும் அளிக்கிறார். அவை இயேசுவையே நமக்குக் காண்பித்து, தமது ஜனங்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவரே ஆதாரம் என்பதை உறுதிப்படுத்துகின்றன (வ.10–13).
நற்செய்தியைப் பகிரப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ பிதா தமது பூரண சித்தத்தின்படி குறித்த காலத்தில் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார்.
பாட்டி திமிங்கலம்
ஒரு ஒர்க்கா திமிங்கலத்தை, ஆய்வாளர்கள் "பாட்டி" என்று பெயர்சூட்டியுள்ளனர். ஏனெனில் அது தனது "பேர திமிங்கலத்தின்" வாழ்வில் தனது முக்கியமான பங்கை நன்கறிந்திருந்தது. அந்த இளம் திமிங்கலத்தின் தாய் சமீபத்தில் இறந்துபோனது. அனாதையான திமிங்கலம் ஆதரவும் பாதுகாப்புமின்றி, உயிர்வாழும் அளவு முதிர்ச்சியடையவில்லை. சுமார் எண்பது வயதான இந்த "பாட்டி" திமிங்கலம் தான் இதற்கு ஆதரவாக வந்து, இது உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொடுத்தது. இந்த பாட்டி திமிங்கிலம், மீன்கள் அனைத்தையும் தானே உண்ணாமல், இந்த குட்டி திமிங்கலத்திற்கும் சேகரித்துத் தந்தது. இதனால் இந்த இளம் திமிங்கலத்திற்கு உணவு கிடைத்ததுமின்றி, என்ன உணவு சாப்பிடவேண்டும், அதை எங்கே கண்டுபிடிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டது.
நமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும் கற்றுத்தருகிற பாக்கியம் நமக்கும் உண்டு. நமக்குப்பின் வாழப்போகிறவர்களோடு, தேவனின் குணாதிசயங்களையும் அவருடைய மகத்துவமான செயல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். முதிர்ந்துகொண்டிருந்த சங்கீதக்காரன் தேவனிடம், "வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் (அறிவிக்க)" (சங்கீதம் 71:18) அனுமதி கேட்கிறான். அவருடைய நீதியான கிரியைகளையும், நாம் செழித்தோங்குவதற்கான அவருடைய இரட்சிப்பின் செயல்களையும் (வ.15) என்று, தான் தேவனைக் குறித்து அறிந்துள்ளதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வாஞ்சிக்கிறான்.
நமக்கு முதிர்வயதின் நரைமுடி இல்லாமலிருக்கலாம் (வ.18), ஆயினும் தேவனுடைய அன்பையும் நம்பகத்தன்மையையும் நாம் அனுபவித்த விதத்தை பகிர்வது அவரோடு பயணிக்கும் யாருக்காவது உபயோகமாயிருக்கும். எதிர்ப்புகளின் மத்தியிலும் கிறிஸ்துவோடு முன்சென்று வாழ்வதற்கு அந்த மனிதருக்குத் தேவையான ஞானம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் காரியத்தால் கிடைக்கக்கூடும் (வ.20).