அந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தினத்தை அற்புதமாகப் படமாக்கியிருந்தனர். குடும்பத்திலுள்ள மூன்று சிறுவர்கள், மேய்ப்பர்களை போல வேடமணிந்து, புல்வெளியில் நெருப்பைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். திடீரென தூதன் வானிலிருந்து இறங்குவதைப்போல, அவர்களுடைய பெரிய அக்காள் குன்றிலிருந்து இறங்கி வந்தாள். ஆனால் அவள் அணிந்திருந்த நவநாகரீக காலணி மட்டும் பொருந்தவில்லை. பின்னிசைகள் இசைக்க, மேய்ப்பர்கள் வானை ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள். புல்வெளியில் சற்றுதூரம் நடந்தவர்கள்,  குழந்தை இயேசுவாக இருந்த தங்கள் கடைசி தம்பியைக் கண்டடைகிறார்கள். தூதனாக இருந்த பெரிய அக்காள் இப்போது மரியாளாக இருந்தாள்.

காணொளி முடிந்ததும் சிறப்புக் காட்சிகளாக, காணொளியை இயக்குகையில் நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து காட்சிகளாக வழங்கினர். அதில், “எனக்குக் குளிருகிறது” என்று குழந்தைகள் சிணுங்குகிறார்கள். “நான் இப்பொழுதே கழிவறைக்குச் செல்லவேண்டும்”, “போதும், வீட்டுக்குப் போகலாம்” என்று குழந்தைகள் அலுத்துக்கொள்ள, அவர்களின் தாயாரோ “குழந்தைகளே கவனியுங்கள்” என்று பலமுறை சொல்கிறார். அந்த நேர்த்தியான கிறிஸ்துமஸ் காணொளியை விட, அதின் பின் இருந்த எதார்த்தம் முரணாகவே இருந்தது.

இதைப்போல கிறிஸ்துமஸ் சம்பவத்தை அற்புதமான முடிவுள்ள ஒரு கதையாகப் பார்ப்பது எளிது. ஆனால், இயேசுவின் வாழ்க்கை நாம் நினைப்பதுபோல அவ்வளவு சுலபமானதல்ல. பொறாமைகொண்ட ஏரோது, இயேசு குழந்தையாய் இருக்கையிலேயே அவரை கொல்ல பார்த்தான் (மத்தேயு 2:13). மரியாளும், யோசேப்பும் அவரை தவறாகப் புரிந்துகொண்டனர் (லூக்கா 2:41–50). உலகம் அவரை பகைத்தது (யோவான் 7:7). சிலகாலத்திற்கு அவருடைய சகோதரரும் அவரை விசுவாசிக்கவில்லை (7:5). அவர் மேற்கொண்ட பணி அவரை கொடூரமான மரணத்திற்கு நடத்தியது. இவையெல்லாவற்றையும் தமது பிதாவை மகிமைப்படுத்தவும், நம்மை மீட்கவுமே செய்தார்.

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு அந்த குடும்பத்தினரின் ஒளிப்பதிவு முடிகிறது. நாம் என்றென்றைக்கும் வாழக்கூடிய எதார்த்தம் அதுவே.