அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்க்கே லூயிஸ் போர்க்கஸ் என்பவர் எழுதிய ஒரு சிறுகதையில் ரோம போர் சேவகனாக இருக்கும் மார்க்கஸ் ரூபஸ் எனும் கதாபாத்திரம், “மனிதர்களுக்கு சாவாமை தரும் ரகசிய நதியின்” தண்ணீரைக் குடிக்கிறான். சாவாமைக்குள் கடந்துபோகும் அவன் காலப்போக்கில், தான் சாவாமை குறித்து எண்ணியவையெல்லாம் தவறு என்பதையும், குறிக்கோளற்ற இந்த எல்லையில்லா வாழ்வு அர்த்தமற்றது என்றும் புரிந்துகொள்கிறான். அதற்கு மாற்றுமருந்தாக ஒரு தெளிவான நீரூற்றைக் கண்டுபிடிக்கும் மார்க்கஸ், அதிலே பருகியவுடன் மீண்டும் சாதாரண மனிதனாகிறான். அதை உறுதிப்படுத்த முள்ளில் தன் கையை தேய்க்க, அவனுக்கு ரத்தமும் வருகிறது.
மார்கஸை போலவே நாமும் சிலநேரம் வாழ்வின் முடிவையும் மரணத்தின் எதிர்பார்ப்பையும் எண்ணி விரக்தியடைகிறோம் (சங்கீதம் 88:3). மரணம் வாழ்விற்கு அர்த்தம் தருவதாக நாம் எண்ணுகிறோம், ஆனால் இதில் தான் நாம் தவறுகிறோம். மார்கஸை போலல்லாமல், கிறிஸ்துவின் மரணத்தில் நமது வாழ்வின் உண்மையான அர்த்தத்தை நாம் கண்டடைவோம். அவர் தம்முடைய ரத்தத்தைச் சிலுவையில் சிந்தி (கிறிஸ்து) மரணத்தை வென்று, அதை ஜெயமாக விழுங்கினார் (1 கொரிந்தியர் 15:54). நமக்கான மாற்றுமருந்து ஜீவ நீரூற்றாகிய (யோவான் 4:10) இயேசுவிடம் உள்ளது. நாம் அதைப் பருகுவதால், மரணம் வாழ்வு மற்றும் சாவாமை ஆகியவற்றின் விதிகள் மாறுகின்றன (1 கொரிந்தியர் 15:52).
உடல்ரீதியாக நாம் மரிப்பது மெய்தான். ஆனால் அது முடிவில்லை. மரணம், வாழ்க்கை இவைகளைக்குறித்த நமது விரக்தியை இயேசு தலைகீழாக்கி விட்டார் (எபிரெயர் 2:11–15). கிறிஸ்துவுக்குள் நமக்குப் பரலோக நம்பிக்கையும், அவருடனே கூட அர்த்தமுள்ள நித்தியஜீவ சந்தோஷமும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்? மரணம் எவ்வாறிருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? 1 கொரிந்தியர் 15 உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
தேவனே, உம்மோடிருக்கும் நித்திய வாழ்வைக் குறித்த உமது வாக்குத்தத்தங்களை நான் பற்றிக்கொள்ள எனக்கு உதவும்.