சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அணிகளிலிருந்த சிறுவர்களின் இளைய தம்பி, தங்கையினர் எல்லாரும் அந்தப் பள்ளியின் தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அபாய சங்கு ஒலிக்க, உடற்பயிற்சி கூடத்தில் விளக்குகள் ஒளிர்ந்தன. தாழ்வாரத்திலிருந்த சிறுபிள்ளைகள் பயத்துடன் உடனே உடற்பயிற்சி அறைக்கு விரைந்து, தங்கள் பெற்றோரைத் தேடினர்.

தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் எச்சரிக்கை மணி எதேச்சையாக இயக்கப்பட்டிருந்தது. ஒரு ஆபத்து என்றவுடன் அந்தப் பிள்ளைகள் சற்றும் தயக்கமின்றி, தங்கள் பெற்றோரின் அரவணைப்பிற்கு ஓடியது என்னைச் சிந்திக்க வைத்தது. பயப்படும் நேரத்தில் பாதுகாப்புணர்வையும், உத்தரவாதத்தையும் அருளுபவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒருக் காட்சியாகவே கண்டேன்.

தாவீது மிகவும் பயந்த நேரத்தை வேதாகமம் பதிவிடுகிறது. சவுலும், திரளான சத்துருக்களும் அவரை விரட்டி வந்தபோது (2 சாமுவேல் 22:1), தேவன் அவரைப் பாதுகாத்தார், தேவனின் உதவிக்காக தாவீது நெகிழ்ச்சியாகத் துதிப்பாடல் பாடினார். அவர் தேவனை, ” என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.” (வ.2). என்றழைக்கிறார். “பாதாளக் கட்டுகள்” மற்றும் “மரணக்கண்ணிகள்” (வ.6 ) அவரை வேட்டையாட, தாவீதோ தேவனை நோக்கி அபயமிட்டார், அவருடைய கூப்பிடுதல் தேவனின் செவிகளில் ஏறிற்று (வ.7). இறுதியில் தாவீது, அவர் என்னை  விடுவித்தார் (வ.18, 20, 49) என அறிவிக்கிறார்.

பயமும், குழப்பமும் சூழும் நேரத்தில் நாமும் நம் கன்மலையிடம் விரையலாம் (வ.32). நாம் தேவனுடைய நாமத்தில் அபயமிடுகையில், அவர் மட்டுமே நமக்குத் தேவையான புகலிடத்தையும் அடைக்கலத்தையும் (வ.2–3) அருளுகிறார்.