நாங்கள் புதிதாய் ஆரம்பித்த வேதாகம வகுப்பிற்கு வந்த ஒரு சகோதரி தொடர்ச்சியான துயரங்களைச் சந்திக்கையில், நாங்கள் எங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எங்களை அறியாமலேயே பகிர்ந்துகொள்ளத் துவங்கினோம். தந்தையின் மரணம், விவாகரத்திற்குப் பின் வந்த திருமண நாள் நினைவுகள், செவிடாய்ப் பிறந்த குழந்தை, அவசர சிகிச்சைப் பிரிவில் பிள்ளையின் போராட்டம் என தனியாக சுமக்கக் கூடாததாகிய பாரங்களை, ஒவ்வொருவரும் எவ்வளவாய் பாதிக்கப்பட்டோமோ, அவ்வளவாய் வெளிப்படையாய்ப் பேசினோம். ஒன்றாய் நாங்கள் அழுதோம், ஜெபித்தோம். அந்நியர்களாய் அறிமுகமான அந்தக் குழு,  சிலவாரங்களிலேயே நெருங்கிய நண்பர்களின் குழுவாய் மாறியது.

இன்றும் சபையென்னும் சரீரத்தின் அங்கமான விசுவாசிகள், மற்றவர்களின் துயரங்களினூடே அவர்களுக்கு ஆழமாகவும், நெருக்கமாகவும் உதவ முடியும். கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகள் எனும் உறவில் இணைய நீண்டகால பழக்கமோ, கருத்து ஒற்றுமையோ தேவையில்லை.

மாறாக, பவுலின் அழைப்பின்படி நாம் , “ஒருவர் பாரத்தை ஒருவர் (சுமக்கிறோம்)” (கலாத்தியர் 6:2). தேவனின் பெலனைச் சார்ந்துகொண்டு நாம் கவனித்துக் கேட்கிறோம், பரிதவிக்கிறோம், இயன்ற உதவியைச் செய்கிறோம், ஜெபிக்கிறோம். மேலும் நாம் “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை(செய்ய)” (வ.10) வாய்ப்புகளை நாடலாம். நாம் அவ்வாறு செய்கையில் “தேவனிடத்திலும் பிறரிடத்திலும் அன்புகூருதல்” என்னும் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதாக (வ.2) பவுல் கூறுகிறார். வாழ்வின் சுமைகள் பாரமானவை தான், ஆனால் அந்தச் சுமையைக் குறைக்கவே தேவன் நமக்குச் சபையென்னும் குடும்பத்தை அளித்துள்ளார்.