1917 ஆம் ஆண்டில், கலிபோர்னியா தொழிலதிபரான ஃபிரடெரிக் லெஹ்மன், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டார். அப்போது, “தேவனின்; அன்பு” என்ற பாடலுக்கான வரிகளை எழுதினார். அவரது உத்வேகம் அவரை முதல் இரண்டு சரணங்களை விரைவாக எழுத வழிவகுத்தது, ஆனால் அவர் மூன்றாவது சரணத்தில் சிக்கிக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறைச்சாலையின் சுவர்களில் ஒரு கைதியினால் எழுதப்பட்ட ஒரு கவிதை வரிகளை அவர் நினைவு கூர்ந்தார். தேவனுடைய அன்பின் ஆழமான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், அந்த கைதி அதை அங்கே கல்லினால் கீறியிருந்தார். லெஹ்மனின் பாடலுடைய அதே ஸ்ருதிக்கு அந்த வரிகள் பொருந்தியது. அவர் அதை தனது பாடலின் மூன்றாவது சரணமாக மாற்றினார்.
சிறைச்சாலையில் இருந்த அந்த கைதியைப் போலவும், லெஹ்மன் என்னும் கவிஞரைப் போலவும் நாமும் கடினமான பின்னடைவை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். இதுபோன்ற கடினமான தருணங்களின்போது, “உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (சங்கீதம் 57:1) என்னும் சங்கீதக்காரனுடைய வார்த்தைகளை நாம் எதிரொலிக்கலாம். நம்முடைய பிரச்சினைகளின்போது தேவனை நோக்கிக் கூப்பிடுவதும் (வச. 2), சிங்கங்களின் நடுவில் இருக்கும்போது (வச. 4), அவரிடம் முறையிடுவதும் நல்லது. கடந்த நாட்களில் தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, “நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்… அதிகாலையில் விழித்துக்கொள்வேன்” (வச. 7–8) என்ற தாவீதின் வரிகளை எதிரொலிப்போம்.
“உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச. 10) என்று இந்த பாடல் சித்தரிக்கிறது. நம்முடைய தேவைகளின் போது தேவனை சார்ந்துகொள்வோமாகில், அவருடைய அன்பு வானபரியந்தம் உயர்ந்தது என்பதை நினைவில் கொள்வோம்.
இன்று நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் யாவை? கடந்த காலங்களில் தேவன் உங்கள் தேவைகளை எவ்விதம் சந்தித்தார்?
அன்பான தேவனே, நான் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தாலும், உம்முடைய அன்பையும் உதவியையும் நினைவு கூருகிறேன். நன்றி!