ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த அந்த முதியவர் அதிக வேதனைப்பட்டார். உலகம் அழிந்துகொண்டிருப்பது மட்டுமின்றி, அது தம்மையும் அதற்கு நேராய் இழுத்துக்கொண்டுபோகிறது என்று வேதனைப்பட்டார். “தயவுசெய்து அதை நிறுத்துங்கள்,” என்று அவரது மூத்த மகள் அவரிடம் கெஞ்சினாள். “அதைக் கேட்பதை நிறுத்துங்கள்.” ஆனால் அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளை கேட்பதில் அதிக நேரத்தை செலவிட்டார்.
நமக்கு முக்கியமாய் தோன்றுகிற காரியங்களில் நாம் ஈடுபாடு செலுத்துகிறோம். இயேசு பொந்தியு பிலாத்துவை சந்திக்கும் சந்திப்பில் இதைக் காண்கிறோம். மார்க்கத் தலைவர்கள் இயேசுவின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் பிலாத்து அவரை அழைத்து, “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான் (யோவான் 18:33). அதற்கு இயேசு, “நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ?” (வச. 34) என்று அதிர்ச்சியூட்டும் கேள்வியை பதிலாக்குகிறார்.
அதே கேள்வி இன்றும் நம்மிடமும் எழுப்பப்படுகிறது. பரபரப்பான இந்த உலகத்தில் நாம் குழப்பத்திற்கு செவிகொடுக்கிறோமா அல்லது கிறிஸ்துவுக்கு செவிகொடுக்கிறோமா? “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” என்றும் “நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27) என்றும் இயேசு சொல்லுகிறார். அவரை சந்தேகிக்கும் மார்க்கத் தலைவர்களுக்கு தம்மை வெளிப்படுத்தும் விதமாய் இயேசு அந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார் (வச. 6). ஒரு நல்ல மேய்ப்பனாக இயேசு, “அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்” (வச. 4-5) என்றார்.
நம்முடைய நல்ல மேய்ப்பராக, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சத்தத்தைக் கேட்கும்படி இயேசு நமக்கு கட்டளையிடுகிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து இளைப்பாறுதலை சுதந்தரிப்போம்.
எந்த தொலைக்காட்சி செய்தி உங்களை கவலைக்குள்ளாக்குகிறது? தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கு நீங்கள் எவ்விதம் நேரம் செலவழிக்கலாம்?
அன்புத் தகப்பனே, இந்தக் குழப்பம் நிறைந்த உலக வாழ்க்கையில் உமக்கு செவிகொடுத்து சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள எனக்கு உதவி செய்யும்.