தன் கணவனை இழந்த மேரி, திருச்சபைக்கு செல்வதையும் வேதபாட வகுப்பிலும் தவறாமல் கலந்துகொள்வாள். ஒவ்வொரு மாதமும் தனது ஐந்து பிள்ளைகளையும் பேருந்தில் தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம். திருச்சபையை சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளையும் செய்து வந்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, அத்தேவாலயத்தின் போதகர், ஒரு சிலர் அவளுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு திருச்சபை விசுவாச தம்பதியினர் குறைவான வாடகையில் ஒரு வீட்டை அவளுக்கு தங்கிக்கொள்ள கொடுத்துதவினர். ஒரு தம்பதியினர் ஒரு காப்பிக் கடையில் அவளுக்கு வேலை தந்தனர். ஒரு இளைஞன் தன்னுடைய பழைய காரை பழுது பார்த்து கொடுத்துதவினான். மேலும் அந்த காருக்கு தானே மெக்கானிக்காய் இருப்பதாகவும் வாக்களித்தான்.
ஒருவேளை மேரியின் திருச்சபையாரைப் போல் நம்மால் உதவ முடியாமல் இருக்கலாம். தேவ ஜனங்கள் உதவி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்கள். சுவிசேஷகர் லூக்கா இயேசுவின் விசுவாசிகளை, “அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்… உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 2:42) என்று குறிப்பிடுகிறார். நாம் நமது வளங்களை ஒருங்கிணைக்கும் போது, ஆதித்திருச்சபை விசுவாசிகளைப் போல தேவை உள்ளவர்களுக்கு உதவ நாம் இணைந்து செயல்படலாம் (வச. 44-45). நாம் தேவனுடனும் சக விசுவாசிகளுடனும் ஐக்கியம் கொள்ளும்போது, ஒருவரையொருவர் பராமரித்துக்கொள்ள முடியும். நம்முடைய கிரியைகளின் மூலம் நாம் பிரதிபலிக்கும் தெய்வீக அன்பானது, மற்றவர்களை தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும் (வச. 46-47).
நம்முடைய புன்னகையினாலும், அன்பான செய்கையினாலும், பண உதவியினாலும், ஜெபத்தினாலும் மற்றவர்களுக்கு உதவும் போது, நாம் சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துகிறோம்.
சமூகமாய் சேர்ந்து தேவனுக்கு ஊழியம் செய்வது ஏன் அவசியமாய் கருதப்படுகிறது? இந்த வாரத்தில் யாருக்கு உதாரத்துவமாய் தாராளமாய் உதவி செய்யப்போகிறீர்கள்?
அன்பான தகப்பனே, தேவையோடு இருப்பவர்களை நான் கண்டறியவும் அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் உம் நாமத்தை மகிமைப்படுத்தவும் எனக்கு உதவிசெய்யும்.