உளவியல் நிபுணர் ராபர்ட் எம்மன்ஸ், வார நிகழ்வுகளை குறிப்பெடுக்கும்படி மூன்று குழுவினர்களை பிரித்தார். அதில் ஒரு குழுவினர், அவர்கள் நன்றி செலுத்தக்கூடிய ஐந்து காரியங்களை எழுதினர். ஒரு குழுவினர் அவர்கள் சந்தித்த ஐந்து பிரச்சினைகளை எழுதினர். ஒரு குழுவினர், தங்களுடைய வாழ்க்கையில் எளிமையான விதத்தில் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்து காரியங்களை எழுதியிருந்தனர். அந்த ஆய்வின் முடிவில், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்திய குழுவைச் சேர்ந்தவர்களே தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் என்றும், குறைவான சரீர வியாதிகள் உடையவர்கள் என்றும் கண்டறியப்பட்டனர்.
நன்றியுள்ளவர்களாயிருத்தல் என்பது வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. நன்றி சொல்லுதல் நம்மை மகிழ்ச்சியடையவும் செய்கிறது. தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதால் ஏற்படும் நன்மைகளை வேதம் நமக்கு அறிவிப்பதின் மூலம் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. சங்கீதங்கள், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்… உள்ளது (சங்கீதம் 100:5) என்றும் அவருடைய மாறாத கிருபைக்காகவும் ஆச்சரியமான கிரியைகளுக்காகவும் நன்றி செலுத்தும்படி தேவ ஜனத்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது (107:8,15,21,31).
பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை பவுல் நிறைவுசெய்யும்போது, அவருக்கு ஊழியத்தில் உறுதுணையாயிருந்தவர்களுக்கு தம் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதத்திலேயே அதை எழுதுகிறார். அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான” தேவசமாதானத்தோடு (4:7) தம் நன்றியை வெளிப்படுத்துகிறார். தேவனையும் அவர் செய்த நன்மைகளையும் நினைவுகூரும்போது, கவலைகள் இல்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் நம் நன்றியை வெளிப்படுத்தமுடியும். நன்றி செலுத்துதல் என்பது நமக்கு தேவசமாதானத்தை அருளி, நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் பாதுகாத்து, வாழ்க்கையின் பார்வையையே மாற்றிவிடும். நன்றியுள்ள இருதயம் மகிழ்ச்சியின் ஆவிக்கு ஊட்டமளிக்கும்.