ஸ்டீபன், வளரும் ஒரு நகைச்சுவை கலைஞன். ஆனால் ஊதாரி. கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், தன் தந்தையின் மீதும் விமான விபத்தில் உயிரிழந்த தன்னுடைய இரண்டு சகோதரர்கள் மீதும் சந்தேகப்பட்டே வளர்ந்தான். இருபதாவது வயதில் கிறிஸ்துவை விட்டு விலகினான். ஆனால் சிகாகோ நகர வீதியின் ஒரு இடத்தில் அந்த விசுவாசத்திடம் மீண்டும் திரும்பினான். யாரோ ஒருவர் அவனுக்கு ஒரு புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்தார். அதை அவன் திறந்தான். அதின் முகப்பு பக்கத்தில், கவலையோடிருக்கிறவர்கள் இயேசுவின் மலைப்பிரசங்க பகுதியான மத்தேயு 6:27-34 ஐ வாசியுங்கள் என்று எழுதியிருந்தது.
ஸ்டீபன் அதைத் திறந்து வாசித்தபோது, அவனுடைய இருதயம் பற்றியெரிந்தது. அவன் சொல்லும்போது, “என்னுடைய வாழ்க்கை உடனடியாக ஒளிபெற்றது. குளிர்ந்த அந்த இரவில், தெருமுனையில் நின்று இயேசுவின் பிரசங்கத்தை நான் வாசித்தேன். என்னுடைய வாழ்க்கை இதுபோல இனி இருக்கப்போவதில்லை” என்று சொன்னான்.
அதுவே வேதாகமத்தின் வல்லமை. வேதமானது மற்ற புத்தகங்களைப் போன்றதல்ல; ஜீவனுள்ளது. நாம் வேதத்தை வாசிப்பதில்லை; வேதம் நம்மை வாசிக்கிறது. வேதாகமம், “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”(எபிரெயர் 4:12).
நம்மை மறுரூபமாக்கி, ஆவியின் முதிர்ச்சிக்கு நேராய் வழிநடத்தும் பூமியின் மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆற்றலாக வேதம் செயல்படுகிறது. அதைத் திறந்து சத்தமாய் வாசித்து, நம்முடைய இருதயங்களை ஒளிரச் செய்யும்படிக்குத் தேவனிடத்தில் விண்ணப்பிப்போம். அவருடைய வாயிலிருந்து புறப்படும் வசனம், “வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்று அவர் வாக்குறுதியளிக்கிறார். நம்முடைய வாழ்க்கை இப்போது இருப்பதுபோலவே இருக்கப்போவதில்லை.
வேதாகமம் உங்களுடைய வாழ்க்கையை எவ்விதத்தில் மாற்றமடையச் செய்துள்ளது? அதை வாசிக்கும்போது உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்னென்ன?
பரலோகப் பிதாவே, வேதாகமத்தை எனக்கு அருளியதற்காய் உமக்கு நன்றி. அதை என்னுடைய வாழ்க்கையில் ஜீவனுள்ளதாய் மாற்றும்.