ஜீவத்தண்ணீர்
நீலகிரியிலிருந்து கொய் மலர்கள் எனக்குக் கிடைத்தது. நீண்ட சாலைப்பயணத்தில் அவை கசங்கியும், வதங்கியும் இருந்தன. குளிர்ந்த நன்னீரால் அவை புத்துணர்வு பெறுமென அதிலிருந்த குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதற்குமுன் அதின் காம்புகளைக் கத்தரிக்க, நீரை உரியச் சுலபமாயிருக்குமாம். அப்படிச் செய்வது அவைகளுக்குத் தீங்கில்லையா? என்ற கேள்வி எனக்குள் பிறந்தது.
மறுநாள் காலை என் கேள்விக்குப் பதில் கிடைத்தது. நீலகிரியிலிருந்து வந்த அந்த பூச்செண்டு பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது, இதுவரை நான் கண்டிராத கொள்ளை அழகு மலர்களாய் இருந்தன. இதெல்லாம் நன்னீர் செய்த மாயம். இயேசு தண்ணீரைக் குறித்து சொன்னதும், விசுவாசிகளுக்கு அவை எவ்வளவு அவசியம் என்பதை எனக்கு நினைவூட்டியது.
அந்த சமாரியப் பெண்ணிடம் இயேசு குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, கிணற்றிலிருந்து தான் மொண்டதை குடிப்பார் என்றெண்ணினாள். அவரோ, அவள் வாழ்வையே மாற்றினார். அவர் அவளிடம் கேட்டதைக்குறித்து அவள் ஆச்சரியப்பட்டாள். யூதர்கள் சமாரியர்களை அற்பமாகவே எண்ணினர். ஆனால் இயேசுவோ, "நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார் (யோவான் 4:10). பின்னர், தேவாலயத்தில் அவர், "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்." (7:37) என்று சத்தமிட்டுக் கூறினார்.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். (வ.38–39).
வாழ்க்கைப் பயணத்தில் களைத்துப்போன நமக்கும் தேவ ஆவியானவரால் புத்துணர்வு தரமுடியும். அவரே ஜீவத்தண்ணீராய் நமக்குள் வாசமாயிருந்து பரிசுத்தமாம் புத்துணர்வைத் தந்து அவருள் ஆழமாய் வளரச்செய்வாராக.
பொறுப்பற்ற தீர்மானங்கள்
ஒரு கல்லூரியின் கால்பந்து ஆட்டத்திற்குப் பின், அந்த வாலிபன் தன் நண்பனை மோட்டார் சைக்கிளில் வேகமாகத் தொடர்ந்தான். பலமாய் மழை பெய்ததால் தன் நண்பனுக்குச் சமமாய் ஓட்டுவது கடினமாயிருந்தது. திடீரென தனக்குமுன் வந்த சிக்னல் கம்பத்தைப் பார்த்தவன் வேகமாக பிரேக்கை அழுத்தவே, சாலையிலிருந்து சறுக்கிய வண்டி, அருகேயிருந்த பெரிய மரத்தில் மோதியது. வண்டி உருக்குலைந்து, அவன் கண் விழிக்கையில் அருகிலிருந்த மருத்துவமனையின் கோமா பிரிவில் இருந்தான். தேவனின் கிருபையால் அவன் உயிரோடிருந்தாலும், அவனுடைய பொறுப்பற்ற முறை பலத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது.
தனக்கே பெரிய விளைவுகளை உண்டாக்கும் பொறுப்பற்ற தீர்மானத்தை மோசே எடுத்தார். தண்ணீர் பற்றாக்குறை உண்டானபோது, அவர் மதியீனமான முடிவொன்றை எடுத்தார் (என்னைப் பொறுத்தமட்டில் இது பெரிய காரியமில்லை). சீன் வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களுக்கு தண்ணீரில்லை, "அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்." (எண்ணாகமம் 20:2). திகைத்துப்போன தலைவனை நோக்கி, ஒரு கன்மலையிடம் பேசுமாறு தேவன் சொன்னார் "அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (வ.8). ஆனால் மாறாக அவன் , "கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்" (வ.11). அதற்கு தேவன், "நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்." (வ.12).
நாம் பொறுப்பற்ற முடிவுகளை எடுக்கையில் அதின் விளைவுகளை நாமே அனுபவிப்போம். "ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்." (நீதிமொழிகள் 19:2). நாம் ஜெபத்தோடும், கவனத்தோடும் தேவனின் ஞானத்தையும், வழிகாட்டுதலையும் இன்று நமது அனைத்து முடிவுகளிலும் தீர்மானங்களிலும் தேடுவோமாக.
கற்பனையுள்ள விசுவாசம்
"தாத்தா அங்கே பாருங்கள், மரங்கள் தேவனை நோக்கிக் கையசைக்கின்றன" என என் பேரன் கவனித்துச் சொன்னது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. புயலுக்கு முன் வீசும் காற்றில் வளைந்த மரக்கிளைகளைப் பார்த்து அவன் அப்படிச் சொன்னான். இதுபோன்ற கற்பனைத்திறன் கொண்ட விசுவாசம் என்னிடம் உள்ளதா? என்று என்னை நானே கேட்கவும் தூண்டப்பட்டேன்.
‘மோசேயும், எரியும் முட்புதரும்’ வேதாகம சம்பவத்தை எலிசபெத் பாரெட் பிரவுனிங் எனும் கவிஞர் இவ்வாறு கூறுகிறார்: "மண்ணை விண் நெருக்குகையில், தேவனுக்குமுன் எல்லா முட்புதருமே ஜுவாலிக்கும், ஆனால் அதை நோக்குகிறவன் மட்டுமே பாதரட்சைகளைக் கழற்றுவான்". நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலுமே தேவனின் கைவண்ணம் ஒளிருகிறது. தேவன் இந்தப் பூமியை ஒரு நாள் புதுப்பிக்கையில், இதுவரைக் கண்டிராததை நாம் காண்போம்.
தேவன், ஏசாயாவின் மூலம், இந்த நாளைக் குறித்துத்தான் அறிவிக்கிறார் "நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்." (ஏசாயா 55:12). பாடும் பர்வதங்கள்? கைகொட்டும் மரங்கள்? ஏன் இது சாத்தியமில்லை? பவுலும், "அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்" (ரோமர் 8:21) எனக் குறிப்பிடுகிறார்.
கூப்பிடுகிற கற்களைக் குறித்து இயேசு ஒருமுறை பேசினார் (லூக்கா 19:40). இயேசுவின் இந்த வார்த்தைகள், தன்னிடம் இரட்சிப்பிற்காக வருபவர்கள் அடையப்போகும் எதிர்காலத்தைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை எதிரொலிக்கிறது. தேவன் மாத்திரம் செய்யக்கூடிய காரியங்களை கற்பனை செய்யும் விசுவாசத்துடன், அவரையே நோக்கிப்பார்க்கையில், அவருடைய முடிவில்லா ஆச்சரியங்களைக் காண்போம்.
கற்றலும், நேசித்தலும்
ஸ்காட்லாந்தின் க்ரீநோக் பகுதியிலுள்ள ஒரு ஆரம்பநிலைப் பள்ளியில் பிரசவத்திற்காக விடுப்பிலிருந்த மூன்று ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அந்த பள்ளிக்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அழைத்துவந்து மற்ற குழந்தைகளுடன் பழக வைத்தனர். குழந்தைகளுடன் பிள்ளைகள் பழகும்போது, அவர்களுக்கு அனுதாபம், அக்கறை, பிறர்மீது கரிசனை போன்றவை வளருகிறது. அதிகம் பேசாத குழந்தைகளைக் கையாளுவது சற்று சவாலானதே என ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார். பள்ளி செல்லும் மாணவர்களே அதிகம் மற்றவர்களுடன் உரையாடுகின்றனர். ஒரு குழந்தையை பராமரிப்பதற்கான கடின உழைப்பையும், மற்றவர்களின் உணர்வுகளையும் அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
பிறரிடம் கரிசனை கொள்வதைப்பபற்றிச் சிறுபிள்ளைகளிடம் கற்பதென்பது விசுவாசிகளுக்குப் புதிதானல்ல. இயேசுவின் பிறப்பைக் குறித்து முதலில் அறிந்தவர்கள் சாதாரண மேய்ப்பர்களே. பிள்ளைகளை இயேசுவிடம் ஜனங்கள் கொண்டுவருகையில், பிள்ளைகளைத் தகுதியற்றவர்களாய் எண்ணிய சீஷர்களை அவர் திருத்தினார். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" (மாற்கு 10:14) என்றார்.
இயேசு, "அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்" (வ.16). நம் வாழ்விலும், சிலசமயம் நாம் "சவால்களை" சந்திக்கக்கூடும், மதிப்பற்றவர்களாய் எண்ணப்படக்கூடும், ஆனால், குழந்தையாய்ப் பிறந்த இயேசு நம்மை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இதன் மூலம் அன்பின் வல்லமையை நமக்குப் போதிக்கிறார்.