அற்புதமான இரட்சிப்பு
வலைப்பதிவு எழுத்தாளர் கெவின் லின்னின் வாழ்வில் பெரும் வீழ்ச்சி உண்டானது. சமீபத்திய கட்டுரையொன்றில் "நான் என் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து அழுத்தப்போனேன், ஆனால் இயற்கைக்கப்பாற்பட்ட விதமாக தேவன் அந்த அறைக்குள் வந்தார். என் வாழ்விலும் வந்தார். அந்த நொடியில் தேவன் என்றால் யாரென்று அறிந்துகொண்டேன்" என்றெழுதினார். லின் தற்கொலை செய்வதைத் தேவன் தடுத்தார். தேவன் உண்டென்ற நம்பிக்கையை அவருக்குள் ஆழமாய் வேரூன்றச் செய்து, தம் அன்பின் பிரசன்னத்தை அவருக்கு நினைப்பூட்டினார். இந்த வியத்தகு சந்திப்பை தனக்குள் மறைத்துவைப்பதற்குப் பதிலாக தன் அனுபவத்தை உலகத்தோடு லின் பகிர்ந்துகொண்டார். யூட்யூப் சேனல் மூலம் ஊழியம் ஓன்றைத் துவங்கி, தன் மனமாற்ற அனுபவத்தையும், அதுபோன்ற மற்றவர்களின் அனுபவத்தையும் உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்.
இயேசுவின் நண்பனும் சீஷனுமான லாசரு மரித்தபோது, அநேகர் இயேசு தாமதமாக வந்ததாக எண்ணினர் (யோவான் 11:32). கிறிஸ்து வருமுன் லாசரு நான்கு நாட்களாகக் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவர் அவனை உயிரோடெழுப்பி, அந்தத் துயரமான நேரத்தை ஒரு அற்புதமான நேரமாக மாற்றினார் (வ. 38). "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா" (வ.40) என்றார்.
தம் ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்த் தந்து, நமது பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு, லாசருவை மரணத்திலிருந்து எழுப்பியதுபோலவே, நமக்கும் இயேசு புதுவாழ்வளிக்கிறார். நாம் நமது பாவக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய நித்திய அன்பினால் புதிதாக்கப்பட்டுள்ளோம். மேலும் நமது வாழ்வின் போக்கை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளோம்.
ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணிக்கும் குழுவின் தலைவரும் விண்வெளி வீரருமான, கிறிஸ் பெர்குசன், ஒரு கடினமான முடிவெடுத்தார். அந்த முடிவு அவர்களுடைய விண்கலத்தைக் குறித்தோ அல்லது சகவிண்வெளி வீரர்களின் பாதுகாப்புக் குறித்தோ அல்ல. மாறாக, அவர் மிகமுக்கியமானதாய்க் கருதிய அவர் குடும்பத்தைப் பற்றியதே. தன் மகளின் திருமணத்திற்காக பயணத்தை ரத்துசெய்து, பூமியிலேயே இருக்க அவர் முடிவெடுத்தார்.
கடினமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைகளை நாம் அனைவருமே எதிர்கொள்வோம். நமது வாழ்வில் எது மிக முக்கியமென்று நாமே முடிவுசெய்யும் காரியங்கள் அவை. ஏனெனில், ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். தன்னைச் சுற்றி இருந்த ஜனக்கூட்டத்திற்கும், தன்னை விசுவாசிப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான காரியத்தை இயேசு கூறினார். ஒருவன் அவரைப் பின்பற்ற விரும்பினால் "தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." (மாற்கு 8:34) என்றார். கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் செய்யப்படவேண்டிய தியாகங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளாமல், மிக முக்கியமென்று தெரிவு செய்வதற்கு விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டுமென்று அவர்களுக்கு நினைப்பூட்டினார்.
நமக்கு விலையேறப்பெற்றதாய்த் தோன்றும் அநேக காரியங்களைப் பின்தொடர அடிக்கடி நாம் தூண்டப்படுகிறோம். அவை நாம் இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து நம்மை திசைதிருப்புபவையே. எனவே நமது அனுதின தெரிவுகளில் தேவனின் நடத்துதலைக் கேட்டு, ஞானமாய் தெரிவு செய்து அவரை கனப்படுத்துவோம்.
பெயரின் வல்லமை
மும்பையின் தெருக்களில் இருந்த சிறு பிள்ளைகளை உற்சாகமூட்ட, அவர்கள் பெயர்களை வைத்தே ஒரு பாடலை ரஞ்சித் இயற்றினான். ஒவ்வொரு பெயருக்கென ஒரு இசையமைத்து, அதின் ராகத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான். அவர்களுடைய பெயரை அவர்கள் நினைக்கையில், ஒரு உத்வேகம் அவர்களுக்கு உண்டாகுமென்று, இப்படிச் செய்தான். தங்கள் பெயரைச் சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியாமல் இருந்த அவர்களுக்கு, இது ஒரு கௌரவமாகவே இருந்தது.
வேதத்தில் பெயர்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், பொதுவாக அவை அவர்களின் பண்புகளையோ அல்லது செய்த செயல்களையோ பிரதிபலிக்கும். உதாரணமாக தமது அன்பின் உடன்படிக்கையை ஆபிராமோடும், சாராயோடும் தேவன் ஏற்படுத்துகையில், அவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டன. "மேன்மைமிகு தந்தை" என்ற அர்த்தமுடைய ஆபிராம், "அநேகருக்குத் தந்தை" என்ற அர்த்தமுடைய ஆபிரகாமாக மாற்றப்பட்டான். மேலும் "இளவரசி" எனும் பொருள்கொண்ட சாராய், "அநேகருக்கு இளவரசி" எனும் சாராளாக மாற்றப்பட்டாள். (பார்க்கவும்.ஆதியாகமம் 17:5, 15).
தேவன் அவர்களுக்கு இட்ட புதுப் பெயர்கள், இனி அவர்கள் பிள்ளையில்லாமலிருப்பதில்லை என்றக் கிருபையின் வாக்குத்தத்தத்தோடு இருந்தன. சாராள் பிள்ளை பெற்றபின், அவர்களுடைய மட்டற்ற மகிழ்ச்சியினால் அவனுக்கு "ஈசாக்கு" என்று பெயரிட்டனர். அதின் அர்த்தம், "அவன் நகைக்கிறான்" என்பதாகும். சாராள், "தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள். (ஆதியாகமம் 21:6) என்றாள்.
ஜனங்களை அவர்களுடைய பெயரால் அழைக்கையில், அவர்களுக்கு கனத்தையும் மரியாதையையும் நாம் தருகிறோம். மேலும், தேவன் அவர்களை யாராக இருக்கவேண்டுமென்று படைத்ததையும் உறுதிப்படுத்துகிறோம். அவர்கள் தேவனுடைய சாயலை பிரதிபலிப்பதால், அவர்களுடைய தனித் தன்மையை உணர்த்தும் புனைப் பெயர்களும் உண்டு.
கதை முடிவடையவில்லை
லைன் ஆப் டூட்டி என்ற ஆங்கில நாடகம் நிறைவுபெறுகையில், ஒரு பெருங்கூட்டம், அந்த நாடகத்தில், குற்றங்களுக்கு எதிரான போராட்டம் எப்படி முடிவுபெறுமென்று காண ஆவலாய் கூடியிருந்தனர். இறுதியில் தீமையே வெல்லுமென்ற முடிவில் நிறைவடைந்த நாடகத்தால், அநேகர் ஏமாற்றமடைந்தனர். "குற்றவாளிகள் நியாயத்திற்குமுன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு நன்மை வெல்லுகிற முடிவு வேண்டும்" என்று ஒரு ரசிகர் கூறினார்.
"நாம் நீதிக்கும் நியாயத்திற்கும் ஏங்குகிறோம், ஒருநாள் தீமையானது முற்றிலும் மேற்கொள்ளப்பட்டு, தீயவர்கள் தங்கள் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். தீயவர்கள் ஜெயிப்பார்கள் என்பது உலகவழக்கத்திற்கு எதிரானது" என்று சமூகவியலாளர் பீட்டர் பெர்கர் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த நாடகத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இந்த உலகம் மீண்டும் சீர்பெற வேண்டுமென்ற மானுட ஏக்கத்தை தங்களையறியாமலேயே வெளிக்காட்டினர்.
பரமண்டல ஜெபத்தில், இயேசுவும் தீமையைக் குறித்து எதார்த்தமுள்ளவராய் சொல்கிறார். தீமைக்கு மன்னிப்பு மட்டும் போதுமானதல்ல (மத்தேயு 6:12) மாறாகத் தீமையிலிருந்து ஒரு பெரிய விடுதலையும் தேவை (வ.13). இந்த எதார்த்தத்திற்கு ஒரு நம்பிக்கையும் உண்டு. தீமையேயில்லாத இடமொன்று உண்டு, அதுதான் பரலோகம். அந்த பரலோக ராஜ்யம் இந்த பூமிக்கு வரப்போகிறது (வ.10). ஒரு நாள் தேவனின் நியாயம் முழுமையாய் வெளிப்படும், "நன்மை ஜெயிக்கும்" என்ற முடிவு வரும், நன்மைக்கேதுவாக தீமை முற்றிலும் வேரறுக்கப்படும் (வெளிப்படுத்தல் 21:4).
ஆகவே நம் வாழ்விலும் தீயவர்கள் மேற்கொள்ளும்போது, ஏமாற்றமே நமக்கு மிஞ்சுகையில், " தேவனின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படட்டும்" என்பதை நினைவில் கொள்வோம். நமக்கு நம்பிக்கை உண்டு,ஏனென்றால் கதை இன்னும் முடிவடையவில்லை.
ஜனத்தேவையிலுள்ள ஜனங்கள்
மிகவும் பிரசித்திபெற்ற விளையாட்டு செய்திப் பத்திரிக்கையாளர் டேவ் கிண்ட்ரேட், பல முக்கியமான போட்டிகளையும், சாதனைகளையும், முகமது அலியின் சுயசரித்திரத்தையும் தொகுத்து எழுதியுள்ளார். பணிஓய்வுபெற்றபின் சலித்துப்போன அவர், அருகேயிருந்த பள்ளியில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளைக் காணச் செல்வார். விரைவில் அந்த ஒவ்வொரு போட்டியைக் குறித்தும் எழுதி இணையத்தில் வெளியிடத் துவங்கினார். டேவின் தாயாரும், பேரனும் அடுத்தடுத்து இறந்துபோக, அவருடைய மனைவியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவர் எழுதிவந்த அந்தக் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவினரால் சமூகப்பொறுப்பும் வாழ்வின் நோக்கமும்பெற்று ஊக்கமடைந்தார். இவருக்கு அவர்கள் தேவைப்பட்டனர், அவர்களுக்கும் இவர் தேவைப்பட்டார். “என் வாழ்வே இருளடைந்திருந்தபோது, இந்தக் கூடைப்பந்து அணியினர் தான் எனக்கு வெளிச்சமாயிருந்தார்கள்” என்று டேவ் கூறினார்.
இவ்வளவு பிரசித்திபெற்ற ஒரு நிருபர் எப்படி ஒரு கூடைப்பந்து விளையாட்டுக் குழுவைச் சார்ந்துகொள்ளும்படி மாறினார்? அப்படியே அப்போஸ்தலனாகிய பவுல், மிஷனரி பயணத்தில் தான் சந்தித்தவர்களின் ஐக்கியத்தைச் சார்ந்துகொண்டார். தன்னுடைய நிருபத்தின் முடிவுரையில் பவுல் குறிப்பிட்டு வாழ்த்திய நபர்களைக் கவனித்தீர்களா? (ரோமர் 16:3–15). "என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்."(வ.7) என்று எழுதினார். "கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்." (வ.8) என்றார். அவர் சுமார் இருபத்தைந்து நபர்களுக்கும் மேலானவர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களில் அநேகரைக் குறித்து வேதத்தில் ஒன்றுமேயில்லை. ஆனால் பவுலுக்கு இவர்கள் தேவைப்பட்டனர்.
நீங்கள் யாரைச் சாருகிறீர்கள்? உங்கள் சபையிலிருந்து இதைத் துவங்குங்கள். அங்கே யாருடைய வாழ்வாவது இருண்டுள்ளதா? இயேசுவிடம் அவர்களை நடத்தும் வெளிச்சமாக தேவன் உங்களை நடத்துவாராக. அவர்கள் ஒருநாள் உங்களுக்கும் பயன்படுவார்கள்.