Archives: ஆகஸ்ட் 2022

தாழ்மையே சத்தியம்

தேவன் தாழ்மையை ஏன் கனப்படுத்துகிறார் என்னும் கேள்விக்கு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுவாசி ஆவிலாவின் தெரசா உடனே பதில் கண்டுபிடித்தார்: ஏனென்றால், தேவன் என்பது உயர்வான உண்மை, அதேபோல் தாழ்மையும் உண்மை... நமக்குள் இருக்கும் நல்லவைகள் எதுவுமே நம்மிடமிருந்து வருவதில்லை. மாறாக, தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல, கிருபையின் தண்ணீரண்டையிலிருந்தும், நம்முடைய படைப்புகளுக்கு உயிர்கொடுக்கும் சூரியனிலிருந்தும் தான் நம் உழைப்பிற்கு பலன் கிடைக்கிறது. தெரசா, “தாழ்மையே ஜெபத்தின் அஸ்திபாரம்; ஜெபத்தில் எந்த அளவிற்கு நம்மை தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்கு தேவன் நம்மை உயர்த்துவார்” என்று ஜெபமே அந்தத் மனத்தாழ்மையை நமக்கு கொடுக்கும் என அறிவுறுத்துகிறார். 

தாழ்மையைக் குறித்த தெரசாவின் வார்த்தைகள் யாக்கோபு 4ஆம் அதிகாரத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது. அதில் யாக்கோபு, தேவ கிருபையை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு விரோதமான பெருமையைக் குறித்து எச்சரிக்கிறார் (வச. 1-6). பேராசை, மனச்சோர்வு, தொடர் பிரச்சனைகள் ஆகியவைகளால் சூழப்பட்ட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபெறுவதற்கு ஒரே வழி, நம்முடைய பெருமையை அகற்றி, மனத்தாழ்மையினால் நம்முடைய இருதயத்தை நிறைப்பதே என்று யாக்கோபு வலியுறுத்துகிறார். இன்னும் தெளிவாய் சொன்னால், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 10). 

கிருபையின் தண்ணீரண்டையில் நாம் நாட்டப்படுவோமாகில், பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் நாம் போஷிக்கப்படுவது நிச்சயம் (3:17). அவரில் நிலைத்திருந்தால் மாத்திரமே நாம் சத்தியத்தில் பலப்பட முடியும்.

சரியான பாதையைக் கண்டறிதல்

பதினாறு வயது நிரம்பிய பிரேசில் தேசத்தின் ஸ்கேட்போர்ட் விளையாட்டு வீரர் பெலிப் கஸ்டாவோ, “உலகத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கேட்போர்ட் வீரர்களில் ஒருவராக” மாறுவார் என யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அவனுடைய தந்தை, தன்னுடைய மகன் சறுக்குப் பலகை விளையாட்டை முறையாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான பணம் இல்லை, ஆகையால் அவர் தன்னுடைய காரை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துச் சென்றார். கஸ்டாவோ வெற்றிபெறும் வரை யாருக்கும் அவனைப்பற்றித் தெரியாது. அவன் பெற்ற வெற்றி அவனுக்கு ஒரு பிரமாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 

கஸ்டாவோவின் தகப்பனுக்கு அவர் மகனுடைய இருதயத்தையும் ஆர்வத்தையும் கண்டுபிடிக்கும் திறன் இருந்தது. கஸ்டாவோ சொல்லும்போது, “நான் தகப்பனாய் மாறும்போது, என் தகப்பன் எனக்கு செய்ததில் 5 சதவிகிதமாவது செய்ய விரும்புகிறேன்” என்று சொன்னான். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், ஆற்றல் மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டுபிடித்து, தேவன் அவர்களை எதற்காய் ஏற்படுத்தியிருக்கிறார் எனும் பாதைக்கு நேராய் அவர்களை வழிநடத்தும்படி நீதிமொழிகள் ஆலோசனை கூறுகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நமக்குத் தெளிவான அல்லது தீர்க்கமான அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவ ஞானத்தோடும் (17–21) நம்முடைய கரிசனையோடும், நம் பிள்ளைகளுக்கு பெரிய பரிசை நம்மால் கொடுக்கமுடியும். அவர்கள் தேவனை நம்புவதற்கான பாதையையும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாய் நடக்கக்கூடிய எதிர்காலத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உதவலாம் (3:5-6). 

விட்டு விடுவதற்கான பலம்

ஒரு காலத்தில் உலகின் வலிமையான மனிதராக அறியப்பட்ட அமெரிக்க பளுதூக்கும் வீரர் பால் ஆண்டர்சன், 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய கடுமையான காதுவலி மற்றும் 103 டிகிரி காய்ச்சலின் மத்தியிலும் உலக சாதனை படைத்தார். இவருடைய முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. முன்னணி வீரர்களுக்கு பின்தங்கிய நிலையில் இருந்த இவர், தங்கப் பதக்கத்தை வென்று புதிய ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தினார். 

இந்த பருத்த விளையாட்டு வீரர் நம்மில் பலவீனமானவர்கள் செய்யக்கூடிய ஒன்றையே செய்தார். தன்னுடைய பெலத்தை விட்டுவிட்டு, தேவனுடைய புதிய பெலத்திற்காய் ஜெபித்தார். “இது பேரம்பேசுவது அல்ல. எனக்கு உதவி தேவைப்பட்டது” என பின்பாக அவர் தெரிவித்தார். தன்னுடைய கடைசி முயற்சியில், அவர் 413.5 பவுண்டு (187.5 கிலோ) எடையுள்ள பளுவை தன் தலைமட்டும் தூக்கினார். கிறிஸ்துவின் அப்போஸ்தலரான பவுல், “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று எழுதுகிறார். பலவீனத்திலே தேவனுடைய பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9) என்பதை பவுல் அறிந்து, ஆவிக்குரிய பெலனைக் குறித்து இவ்வாறு பேசுகிறார். 

ஏசாயா தீர்க்கதரிசி, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29) என்று வலியுறுத்துகிறார். அந்த பலத்தை பெற்றுக்கொள்ளும் வழி எது? இயேசுவுக்குள் அடைக்கலம் புகுதலாகும். யோவான் 15:5இல், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு சொல்லுகிறார். விளையாட்டு வீரர் ஆண்டர்சன், “உலகத்தின் மிக வலிமையான நபர் கூட கிறிஸ்துவின் வல்லமையில்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அதனால் நம்முடைய மாயையான பலத்தின் மீதான நம்பிக்கையை விட்டு விட்டு, நிலையான தெய்வீகத் துணையை சார்ந்துகொள்வது அவசியம்.

தேவனை நேசித்து சார்ந்து கொள்ளுதல்

சுனில், வேடிக்கையான, புத்திசாலித்தனமான, எல்லோராலும் விரும்பப்படத்தக்கவன். ஆனால் அவன் மனவிரக்தியில் இருந்தது யாருக்கும் தெரியாமற்போயிற்று. அவன் தன்னுடைய 15ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவனுடைய தாயாராகிய பிரதீபா, “நாம் அதிகம் விரும்பும் ஒருவர் இப்படிச் செய்ததை கிரகிப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. சுனில்... அந்தத் தவறான முடிவிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார். பிரதீபா, பல நாட்கள் தனிமையில் தன்னுடைய வேதனையை தேவனிடத்தில் ஊற்றியிருக்கிறாள். தன்னுடைய மகனுடைய தற்கொலைக்குப் பின்னர், “ஒரு வித்தியாசமான துயரத்தை நான் அனுபவித்தேன்” என்று சொல்லுகிறாள். ஆனால், அவளும் அவள் குடும்பத்தினரும், அந்த மீளா துயரத்தின் மத்தியிலும், தேவனை சார்ந்து கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டனர். தற்போது, மனச்சோர்வுக்குள்ளாகும் நபர்களைத் தேடி அவர்களை நேசிக்கவும், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உதவுகின்றனர். 

“நேசித்து சார்ந்து கொள்” என்பதே பிரதீபாவின் இலட்சியமாகும். இதே கருத்தை, பழைய ஏற்பாட்டில், ரூத்தின் சரித்திரம் எடுத்துரைக்கிறது. நகோமி தன்னுடைய கணவனையும் இரண்டு குமாரர்களையும் இழந்து நிற்கதியாய் நின்றாள். அவள் குமாரனில் ஒருவனைத்தான் ரூத் மணந்திருந்தாள் (ரூத் 1:3-5). கசப்பானவளாய் விரக்தியிலிருந்த நகோமி, ரூத்தை அவளுடைய இனத்தாரிடத்திற்கு திரும்பிப் போய் சுகமாயிருக்கும்படி. கேட்டுக்கொண்டாள். தன் கணவனை இழந்த விரக்தியிலிருந்த ரூத்தோ, தன் மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டு, அவளைப் பராமரித்தாள் (வச. 14-17). இருவரும் நகோமியின் சொந்த ஊரான பெத்லெகேமுக்கு வந்தனர். ரூத்துக்கு அது அந்நிய தேசமாயிருந்தது. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாயிருந்து, தேவனை சார்ந்திருந்தனர், தேவன் அவர்களின் தேவையை சந்தித்தார் (2:11-12). 

நம்முடைய துயரங்களில், தேவனுடைய அன்பு நமக்கு நிலையானதாக இருக்கிறது. நாம் எப்போதும் தேவனை சார்ந்து கொள்ள அவர் நம்மோடிருக்கிறார். தேவன்  மற்றவர்களை தேற்றவும் நம்மை பெலப்படுத்துவார்.