ஞானம் மற்றும் புரிதல்
1373ஆம் ஆண்டில், நார்விச்சின் ஜூலியன் 30 வயதாக இருந்தபோது, அவள் நோய்வாய்ப்பட்டு ஏறத்தாழ மரிக்கும் தருவாயில் இருந்தாள். அவளுடைய போதகர் அவளுக்காக ஜெபித்தபோது, இயேசுவின் சிலுவைப்பாடுகளை உணர்ந்த அவளுக்கு தேவன் பல தரிசனங்களைக் கொடுத்தார். அற்புதவிதமாக உடல் நலம் தேறிய பிறகு, அடுத்த இருபது வருடங்கள் தேவாலயத்தின் ஒரு பக்க அறையில் தனிமையில் வாழ்ந்து, ஜெபித்து, தன்னுடைய அனுபவத்தை நினைத்துப் பார்த்தாள். “அவருடைய அன்பே அர்த்தமுள்ளது” என்று அவள் முடித்தாள். அதாவது, கிறிஸ்துவின் தியாகம் தேவனின் அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு.
ஜூலியனின் வெளிப்பாடுகள் பிரபலமானவை. ஆனால் தேவன் அவளுக்கு வெளிப்படுத்தியதை ஜெபத்துடன் செய்ய அவள் செலவழித்த நேரத்தையும் முயற்சியையும் மக்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அந்த இருபது வருடங்களில் தேவனுடைய தெய்வீக ஞானத்திற்காய் விண்ணப்பித்து, அவருடைய பிரசன்னத்தின் மேன்மையை அவள் அறிய முயன்றாள்.
அவர் ஜூலியனுக்கு செய்ததுபோலவே, வேத வசனங்களின் மூலமாகவும், அவரது மெல்லி சத்தத்தின் மூலமும், ஒரு பாடலின் பல்லவி அல்லது அவரது பிரசன்னத்தைப் பற்றிய விழிப்புணர்வு மூலம்கூட தேவன் தம் மக்களுக்கு கிருபையுடன் தம்மை வெளிப்படுத்துகிறார். இது நிகழும்போது, நாம் அவருடைய ஞானத்தையும் உதவியையும் நாடலாம். இந்த ஞானத்தை தான் சாலொமோன் ராஜா தன் மகனுக்கு, “நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,” (நீதிமொழிகள் 2:1) ஆலோசனை கூறுகிறார். அவ்வாறு செய்தால், “தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்” (வச. 5) என்றும் அறிவுறுத்துகிறார்.
தேவன் நமக்கு பகுத்தறிவையும் புரிதலையும் தருவதாக வாக்களிக்கிறார். அவருடைய குணாதிசயங்கள் மற்றும் வழிகளைப் பற்றிய ஆழமான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, நாம் அவரை அதிகமாக கனப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
இதைவிட பெரிய அன்பு இல்லை
2021 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79ஆம்; ஆண்டு நினைவு ஆண்டு. நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிப்பதற்காக நினைவுகூரப்படுகிறது. ஆகஸ்ட் 8, 1944 அன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆரம்பத்தில், காந்தி, “செய் அல்லது செத்து மடி” என்னும் தனது புகழ்பெற்ற வாக்கியத்தைக் கூறினார். மேலும், “நாம் இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் மரிப்போம்; எங்கள் அடிமைத்தனம் நீடிப்பதைக் காண நாங்கள் இருக்கமாட்டோம்” என்றும் கூறினார்.
தீமையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் தன்னைத்தானே வருத்திக்கொள்ள விழைவது கிறிஸ்துவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை..” (யோவான் 15:13). இந்த வார்த்தைகள் கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் போது சொல்லப்பட்டது. ஆனால் இந்த வகையான அன்பின் விலை மற்றும் ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்: ஒருவர் தனது உயிரை மற்றொரு நபருக்காக விருப்பத்துடன் தியாகம் செய்யும் போது ஒரு அன்பு எடுத்துக்காட்டப்படுகிறது. மற்றவர்களை தியாகமாக நேசிக்க இயேசுவின் அழைப்பு “ஒருவருக்கொருவர் அன்புகூருங்கள்” (வச. 17) என்ற அவருடைய கட்டளையின் அடிப்படையாகும்.
வயதான குடும்ப அங்கத்தினரின் தேவைகளைக் கவனிப்பதற்கு நேரத்தைக் கொடுப்பதன் மூலம் ஒருவேளை நாம் நம்முடைய தியாகமான அன்பை வெளிப்படுத்தலாம். பள்ளியில் மன அழுத்தம் நிறைந்த வாரத்தில் நம்முடைய உடன்பிறந்தவர்களின் வேலைகளுக்கு உதவிசெய்வதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கலாம். வியாதிபட்டிருக்கும் குழந்தையை இரவில் பராமரிப்பதின் மூலம் கணவனோ, மனைவியோ தூங்குவதற்கு அனுமதிக்கும் உதவியை செய்யலாம். நாம் மற்றவர்களை தியாகமாக நேசிப்பதால், அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்டைக் காட்டுகிறோம்.
அவர் என் இதயத்தை அறிவார்
ஒரு மளிகைக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பரிவர்த்தனையை முடித்த பிறகு, நான் பில்லிங் கவுண்டருக்குச் சென்று எனது பொருட்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கினேன். எதிர்பாராத விதமாக, ஒரு கோபமான நபர் என்னை எதிர்கொண்டார். வரிசையில் அவள் எனக்கு பின்பாக இருந்ததை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். என் தவறை உணர்ந்து, “மன்னிக்கவும்” என்று மனப்பூர்வமாகச் சொன்னேன். அவளோ, “இல்லை” என்று கோபமாக பதிலளித்தாள்.
நீங்கள் எப்போதாவது இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தவறுசெய்து, அதை ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முயற்சித்து, மன்னிப்பு கேட்டு, அந்த மன்னிப்பு நிராகரிக்கப்பட்டதுண்டா? தவறாகப் புரிந்துகொள்வது அல்லது தவறாக மதிப்பிடப்படுவது நல்லதல்ல. மேலும் நாம் புண்படுத்துபவர்கள் அல்லது நம்மை புண்படுத்துபவர்களுடன் நாம் எவ்வளவு நெருக்கமாயிருக்கிறோமோ, அவ்வளவு காயப்படவேண்டியிருக்கிறது. அவர்கள் நம் இதயங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்!
ஏசாயா 11:1-5இல், பரிபூரண தீர்ப்புக்கான ஞானத்துடன் தேவனால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரை பற்றிய செய்தியை ஏசாயா துரிதமாய் பதிவிடுகிறார். “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்(கிறார்)" (வச. 3-4) என்று குறிப்பிடுகிறார். இது இயேசுவின் வாழ்விலும் ஊழியத்திலும் நிறைவேறியது. நம்முடைய பாவத்திலும் பலவீனத்திலும் நாம் அதை எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அனைத்தையும் பார்க்கும், அனைத்தையும் அறிந்த பரலோகத்தின் தேவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். நம்மை சரியாக நியாயந்தீர்க்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
பிழைத்து வளர்கிறது
ஒரு ஆங்கில அனிமேஷன் திரைப்படம் ஒன்றில், ஒரு குகை மனிதன் குடும்பம், “ஒன்றாக இருந்தால் மட்டுமே உயிர்வாழ்வதற்கான ஒரே வழி” என்று நம்புகிறது. அவர்கள் உலகத்தைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் வாழ பாதுகாப்பான இடத்தைத் தேடும்போது அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே ஒரு விசித்திரமான குடும்பத்தைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் தங்கள் புதிய உறவினரின் வேறுபாடுகளைத் தழுவிக்கொள்ளவும், அவர்களிடமிருந்து வலிமையைப் பெறவும், ஒன்றாக வாழவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த உறவில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதும், வாழ்க்கையை முழுமையாய் வாழுவதற்கு மற்றவர்களும் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
நல்ல உறவில் இருப்பது ஆபத்தானது. மக்கள் நம்மை அவ்வப்போது காயப்படுத்தலாம். ஆயினும்கூட, நல்ல நோக்கத்திற்காய், தேவன் தம் மக்களை திருச்சபை என்னும் ஒரே சரீரமாய் ஏற்படுத்துகிறார். மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்வதில், நாம் முதிர்ச்சி அடைகிறோம் (எபேசியர் 4:13). தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமை (வச. 2) ஆகிய நற்குணங்களுக்காய் அவரை சார்ந்திருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் “அன்பில்” கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுகிறோம் (வச. 16). நாம் ஒன்று கூடும்போது, நம்முடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறோம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இது தேவனுடன் நடக்கவும், அவருக்காக சேவை செய்யவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
அவர் உங்களை நடத்துகையில், தேவ ஜனத்தின் மத்தியில் உங்களுடைய இடத்தை இன்னும் நீங்கள் கண்டுபிடியாதிருப்பீர்கள் என்றால், அதை கண்டுபிடியுங்கள். சாதாரணமாய் வாழ்வதை விடுத்து, பகிரப்பட்ட அன்பில் நீங்கள் தேவனுக்கு கனத்தை கொடுப்பீர்கள். மேலும் இயேசுவைப் போல மாறுவீர்கள். இயேசுவுடனும் மற்றவர்களுடனும் வளர்ந்து வரும் உறவின் மூலம் நாம் அனைவரும் அவரைச் சார்ந்து ஜீவிப்போம்.