Archives: ஜூலை 2022

தேவையற்ற விருந்தினர்கள்

ஷில்பாவும் அஜய்யும், ஒரு அழகான இடத்தில் அற்புதமான தேனிலவைக் கொண்டாடினர். இருப்பினும் அவர்கள் வீடு திரும்பியபோது, அஜய்யின் பாதங்களில் ஒரு விசித்திரமான அரிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தம்பதியினர் தொற்றுநோய் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிய ஒட்டுண்ணிகளால் ஏற்பட்ட கொப்புளங்கள் மூலம் அவரது கால்களுக்குள் புகுந்துவிட்டதாக அவர் அவர்களிடம் தெரிவித்தார். ஒரு எதிர்பார்ப்புடன் துவங்கிய தேனிலவு, தேவையற்ற விருந்தினர்களுடனான ஒரு சவாலான போரில் முடிவடைந்தது.

பாவத்தை எதிர்த்துப் போராட தேவனிடம் உதவி கேட்காவிட்டால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவரது கனவு, பாவம் மற்றும் முரட்டாட்டம் என்னும் தேவையற்ற விருந்தினர்களுடன் போராக மாறும் என்பதை தாவீது அறிந்திருந்தார். இயற்கை உலகில் தேவன் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார் (சங்கீதம் 19:1-6) என்றும், தேவனுடைய போதனையில் ஞானத்தை அடைந்து (வச. 7-10), காணப்பட்ட அவரது ஞானத்தை அறிவித்த பிறகு, தன்னுடைய கீழ்ப்படியாமை என்னும் ஆணவ எண்ணங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்படி, தாவீது தேவனிடம் உதவி கேட்கிறார். “மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்; துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்” என்று எழுதுகிறார் (வச. 12-13). பாவம் என்ற தொற்று நோய் தன்னைத் தாக்காமல் இருக்க தன்னிடம் மனித வளம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். எனவே, அவர் ஞானமாக தேவனிடம் உதவி கேட்டார்.

தேவனை கனப்படுத்தும் விதத்தில் வாழ நினைக்கும் நம்முடைய வாழ்க்கையானது, பாவத்தினால் தடைசெய்யப்படவில்லை என்பதை நாம் எவ்விதம் உறுதிசெய்துகொள்ள முடியும்? நம் கண்களை அவர் மீது வைத்திருப்போம். நம் பாவத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்புவோம். தேவையற்ற ஆவிக்குரிய ஒட்டுண்ணிகள் நம் வாழ்க்கையை சிதைக்காமல் இருக்க, தெய்வீக உதவியை நாடுவோம்.

பயணிக்கும் கருணை

இந்தியா முழுவதுமான சாலைப் பயணம், சில ஆபத்தான சாலைகளில் உங்களை அழைத்துச் செல்லும். முதலில், ஜம்மு காஷ்மீரில் “கில்லார்- கிஷ்த்வார் சாலை” உள்ளது. வடமேற்கு நோக்கிச் சென்றால், குஜராத்தின் டுமாஸ் கடற்கரைக்கு அருகில் நீங்கள் ஒரு பயங்கரமான அதிர்வை அனுபவிக்கக்கூடும். மத்திய இந்தியாவை நோக்கி மேலும் பயணிக்கும்போது, சத்தீஸ்கரின் பஸ்தாரில் ஓய்வெடுப்பதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது ஒரு  ஆபத்தான இடம். நீங்கள் தெற்கு நோக்கிச் செல்லும்போது, தமிழகத்தின் பயங்கரமான கொல்லிமலைச் சாலையை அடைவீர்கள். நீங்கள் ஒருவேளை பயணம் செய்யாவிட்டாலும், இவைகள் இந்திய தேசத்தின் புவியமைப்பில் இருக்கக்கூடிய அபாய சாலைகள்.  

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் இப்படித்தான் இருக்கும். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் கடினமான வாழ்க்கையை நாம் எளிதாக அடையாளம் காண முடியும் (உபாகமம் 2:7). வாழ்க்கை கடினமாக இருக்கலாம். அதற்கு இணையான மற்ற காரியங்களை நாம் காண்கிறோமா? நாம் நமது சொந்த பயணத்திட்டத்தை உருவாக்குகிறோம். தேவனின் வழியிலிருந்து திசை மாறுகிறோம் (1:42-43). இஸ்ரவேலர்களைப் போலவே, நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பற்றி நாம் அடிக்கடி முணுமுணுக்கிறோம் (எண்ணாகமம் 14:2). நமது அன்றாட கவலையில், நாமும் தேவனின் நோக்கங்களை சந்தேகிக்கிறோம் (வச. 11). இஸ்ரவேலர்களின் கதை நம் சொந்தக் கதையில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நாம் அவருடைய வழியைப் பின்பற்றினால், ஆபத்தான சாலைகள் நம்மை அழைத்துச் செல்லும் இடத்தை விட மிகச் சிறந்த இடத்திற்கு அவர் நம்மை அழைத்துச்செல்வார் என்று தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நம் தேவைகள் ஒன்றும் குறைவுபடாது (உபாகமம் 2:7; பிலிப்பியர் 4:19). இதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தும், அதைச் செய்யத் தவறிவிடுகிறோம். நாம் தேவனின் பாதையை பின்பற்ற வேண்டும்.

இன்னும் சில மணிநேரம் காரில் பயணம் செய்தால், பயமுறுத்தும் கொல்லி மலையிலிருந்து “கடவுளின் சொந்த நாடு" என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பசுமையான மற்றும் அமைதியான வயநாடுக்கு உங்களை அழைத்துச் செல்லும். தேவன் நம் பாதைகளை வழிநடத்த அனுமதித்தால் (சங்கீதம் 119:35), அவருடன் மகிழ்ச்சியுடன் பயணிப்போம். இது ஆசீர்வாதமான ஒரு பாதை!

அன்பு இல்லாமல் பயனில்லை

எனது ஸ்பெஷல் ஆர்டர் மேஜைக்கான துண்டுகளை பெட்டியிலிருந்து எடுத்து என் முன் வைத்த பிறகு, ஏதோ சரியாக இல்லை என்பதை நான் கவனித்தேன். மேஜை அனைத்து அம்சங்களும் இருந்தது, ஆனால் அதின் கால்களில் ஒன்றைக் காணவில்லை. ஒரு கால் இல்லாமல், என்னால் மேஜையை வடிவமைக்க முடியவில்லை. அது பயனற்றதாகிவிட்டது.

ஒரு முக்கிய பகுதியைக் காணவில்லையெனில் உபயோகமாக இல்லாமல் இருப்பது மேசை மட்டுமல்ல. 1 கொரிந்தியர் புத்தகத்தில், பவுல் தனது வாசகர்களுக்கு ஒரு அத்தியாவசியமான முக்கியப் பகுதி அவர்களிடம் காணவில்லை என்பதை நினைவூட்டினார். விசுவாசிகள் பல ஆவிக்குரிய வரங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களிடத்தில் அன்பு இல்லை. 

தனது கருத்தை வலியுறுத்த மிகைப்படுத்தப்பட்ட மொழியைப் பயன்படுத்தி, பவுல் எழுதினார். அவருடைய விசுவாசிகளுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளையும் கொடுத்தாலும், அவர்கள் விருப்பத்துடன் கஷ்டங்களை அனுபவித்தாலும், அன்பின் அடிப்படையின்றி, அவர்களின் செயல்கள் அனைத்திற்கும் எந்த வித பிரயோஜனமும் இல்லை (1 கொரிந்தியர் 13:1-3). எப்போதும் பாதுகாக்கும், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அன்பின் அழகை விவரிக்கும் வகையில், அவர்களின் செயல்களில் அன்பை எப்போதும் பிரதிபலிக்கவேண்டுமென்று பவுல் அவர்களை ஊக்குவித்தார் (வச. 4-7).

நாம் நம்முடைய ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது, ஒருவேளை நம்முடைய விசுவாச சமூகங்களில் கற்பிக்க, ஊக்குவிக்க அல்லது சேவை செய்ய, அன்பு பிரதானமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், இது ஒரு கால் இல்லாத மேஜை போன்றது. அது வடிவமைக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை அடைய முடியாது.

வீடு முழுவதும்

ஜேம்ஸ், தனது மேல் அங்கியை அணிந்துகொண்டு, சிறைச்சாலையின் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மின் அருகில் நடந்து, தற்காலிகமாய் ஏற்படுத்தப்பட்டிருந்த குளத்தில் இறங்கினார். அங்கு அவன் சிறைச்சாலை போதகரால் ஞானஸ்நானம் பெற்றார். அவரோடு சிறைச்சாலையில் இருக்கும் அவரது மகளான பிரிட்டனியும் அதே நாளில், அதே தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றாள் என்பதைக் கேள்விப்பட்டபோது, ஜேம்ஸ் மகிழ்ச்சியடைந்தார். என்ன நடந்தது என்பதை உணர்ந்ததும், அங்கேயிருந்த சிறை ஊழியர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். “அங்கே ஒரு கண் கூட கலங்காமல் இல்லை,” என்று போதகர் கூறினார். பல ஆண்டுகளாக சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயுமாக இருந்த, பிரிட்டானி மற்றும் அவரது அப்பா இருவரும் தேவனின் மன்னிப்பை விரும்பினர். தேவன் அவர்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார்.

மற்றொரு சிறைச்சாலை சந்திப்பை வேதம் விவரிக்கிறது. இந்த முறை இயேசுவின் அன்பு, சிறை அதிகாரியின் முழு குடும்பத்தையும் மாற்றியது. ஒரு பயங்கரமான நிலநடுக்கம் சிறைச்சாலையை உலுக்கிய பிறகு, “கதவுகளெல்லாம் திறவுண்டது.” பவுலும் சீலாவும் ஓடவில்லை, ஆனால் அவர்களது அறையிலேயே இருந்தனர் (அப்போஸ்தலர் 16:26-28). சிறைச்சாலைக்காரன், அவர்கள் தப்பியோடவில்லை என்ற நன்றியுணர்வுடன், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, இறுதியில் அவனுடைய வாழ்க்கையை மாற்றும் அந்த கேள்வியைக் கேட்டான்: “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” (வச. 30). 

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (வச. 31) என்று அவர்கள் பதிலளித்தார்கள். “நீயும் உன் வீட்டாரும்” என்ற பதிலானது, தனிநபர்கள் மீது மட்டுமல்ல, முழு குடும்பத்தின் மீதும் இரக்கத்தைப் பொழிவதற்கு தேவனின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. தேவனின் அன்பை எதிர்கொண்டு, “தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்” (வச. 34). நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்புக்காக நாம் அடிக்கடி ஆர்வமாக இருந்தாலும், தேவன் நம்மை விட அதிகமாக அவர்களை நேசிக்கிறார் என்று நம்பலாம். அவர் நம் அனைவரையும், நம் முழு வீட்டையும் புதுப்பிக்க விரும்புகிறார்.