கடற்குடுவை என்பது விசித்திரமான ஒரு கடல்வாழ் உயிரினம். பாறைகள் மற்றும் கடற் சிப்பிகள் மேல் ஒட்டியிருக்கும் இது, அசைவது போன்ற மென்மையான பிளாஸ்டிக் குழாய் போல் தெரிகிறது. பாய்ந்து செல்லும் நீரிலிருந்து அதன் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு, அது முன் இருந்த இளமை துடிப்பை விட்டுவிட்டு, ஒரு செயலற்ற வாழ்க்கையை வாழ்கிறது.

இந்த கடற்குடுவை உயிரினம், ஒரு பழமையான முதுகுத் தண்டு மற்றும் மூளையுடன் ஒரு தலைப்பிரட்டைப் போல் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தன் உணவைக் கண்டுபிடிக்கிறது. தன் இளம்பிரயாத்தில், அது கடலை ஆராய்வதில் தனது நாட்களைக் கழிக்கிறது. ஆனால் முதிர்ச்சியடையும் போது ஏதோ நடக்கிறது. அது ஒரு பாறையில் குடியேறி, அது ஆராய்வதையும் வளர்வதையும் நிறுத்திக்கொள்கிறது. ஒரு பயங்கரமான திருப்பத்தில், அது அதன் சொந்த மூளையை உண்டு, ஜீரணிக்கின்றது.

முதுகெலும்பில்லாத, சிந்திக்கமுடியாத, ஒளிர்கிற மின்னோட்டத்துடன் செயலற்ற முறையில் நிற்கிறது. இந்த கடற்குடுவை விதியைப் பின்பற்ற வேண்டாம் என்று அப்போஸ்தலர் பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார். தேவனுடைய சுபாவங்களை தரித்துக்கொள்வதே நமக்கான முதிர்ச்சி (2 பேதுரு 1:4). நீங்களும் நானும் வளர அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவைப் பற்றிய நமது அறிவில் மனரீதியாக வளருதல் (3:18); ஆவிக்குரிய ரீதியில் நன்மை, விடாமுயற்சி மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்ற பண்புகளில் வளருதல் (1:5-7); மற்றும் நடைமுறையில் புதிய வழிகளை ஆராய்வதன் மூலம் நேசித்தல், விருந்தோம்பல் வழங்குதல் மற்றும் நமது பரிசுகள் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்தல் (1 பேதுரு 4:7-11) ஆகியவற்றில் வளர அழைக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சி, வீணரும் கனியற்றதுமான வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் என்று பேதுரு கூறுகிறார் (2 பேதுரு 1:8).

வளர்வதற்கான இந்த அழைப்பு, எழுபது வயது முதியவருக்கு எவ்வளவு இன்றியமையாததோ அதேபோன்று இளம் வயதினருக்கும் அவசியம். தேவனின் தன்மை கடல் போல் பரந்தது. நாம் சில அடிகள் கூட நீந்தவில்லை. அவரது முடிவில்லாத தன்மையை ஆராயுங்கள். புதிய ஆவிக்குரிய சாகசங்களை மேற்கொள்ளுங்கள். படியுங்கள், சேவை செய்யுங்கள், துணிந்து முயற்சி செய்யுங்கள், வளருங்கள்.