1854ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஒரு இளைய பீரங்கி அலுவலர், தன் பீரங்கியிருந்த மலை உச்சியிலிருந்து கீழே நடைபெறும் போர் படுகொலைகளைப் பார்த்தார். “ஜனங்கள், ஜனங்களைக் கொல்லுவதைப் பார்ப்பது ஒரு வேடிக்கையான இன்பம், எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மணிக்கணக்காய் நான் அதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன்” என்று லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார். 

டால்ஸ்டாயின் பார்வை சீக்கிரத்தில் மாறியது. செவாஸ்டோபோல் நகரத்தில் ஏற்பட்ட அழிவையும் பாடுகளையும் நேரில் பார்த்த பின்பு, “நீங்கள் முன்பு பார்த்த பார்வையை விட, அந்த பட்டணத்தில் ஒலித்த துப்பாக்கி குண்டுகளின் சத்தங்கள் உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றிவிடும்” என்று எழுதுகிறார். 

யோனா தீர்க்கதரிசி, நினிவேயின் அழிவை பார்க்க மலையுச்சி ஏறினார் (யோனா 4:5). தேவனின் வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து அக்கொடிய நகரத்தை எச்சரித்திருந்தார். ஆனால் நினிவே மனந்திரும்பியது. யோனா ஏமாற்றமடைந்தார். சில நூற்றாண்டுகள் கழித்து நினிவே மீண்டும் பாவத்திற்கு திரும்பியது. இப்போது நாகூம் தீர்க்கதரிசி அதின் அழிவை முன்னறிவிக்கிறார். “அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்… அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்” (நாகூம் 2:3) என்று எழுதினார். 

நினிவேயின் தொடர்ச்சியான பாவத்தினால் தேவன் அதை தண்டித்தார். ஆனால் யோனாவிடமோ, நினிவேயில் ஆவிக்குரிய இருளில் 120000 பேருக்கு அதிகமான மனுஷர் இருக்கிற “மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?” (யோனா 4:11) என்கிறார்.

தேவனுடைய நீதியும், அன்பும் ஒன்றாகவே பயணிக்கிறது. தீமையின் விளைவை நாகூம் காண்பிக்கிறார். நம்மைக் காட்டிலும் மோசமான சந்ததியினருக்கான தேவனுடைய இரக்கத்தை யோனா காண்பிக்கிறார். நாம் மனந்திரும்பி, அவ்விரக்கத்தை மற்றவர்களுக்கும்காண்பிக்கவேண்டும் என்பதே தேவனுடைய மனவிருப்பம்.