சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.