நிரந்தர முகவரி
எங்கள் பழைய வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த புதிய வீட்டிற்கு சிலநாளைக்கு முன்புதான் வந்தோம். அதிக தூரமில்லை என்றபோதும், எங்கள் சாமான்களையெல்லாம் வண்டியிலேற்றி பண பரிமாற்றம் முடியும்வரை அங்கேயே காத்திருந்தோம். பழைய வீட்டை விற்று, புதிய வீட்டை வாங்கும் இடைப்பட்ட நேரமுழுதும் எங்கள் குடும்பமும், சாமான்களும் தற்காலிக குடியிருப்பாக அந்த வண்டியிலிருந்தோம். நாங்கள் எங்கள் வீட்டிற்குள் இல்லையென்றாலும், நான் அதிகம் நேசிக்கும் குடும்பம் என்னோடு இருந்ததால் என்னை அப்பிரிவு பாதிக்கவில்லை என்பதை அச்சமயத்தில் தான் புரிந்துகொண்டேன்.
தன் வாழ்வில் அநேக நாட்கள் தாவீது வீட்டைவிட்டு பிரிந்திருந்தார். சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடுவதே அவர் வாழ்வின் பெரும்பகுதி. தன் சிங்காசனத்திற்கு தேவனால் நியமிக்கப்பட்ட வாரிசு என்றும், தன் பதவிக்கு தாவீது பெரும் அச்சுறுத்தல் என்றும் சவுல் உணர்ந்ததால், அவரை கொல்லப் பார்த்தான். தாவீது தன் வீட்டை விட்டோடி, அடைக்கலம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் படுத்துறங்கினார். தாவீதின் கூட்டாளிகள் எப்போதும் அவரோடு இருந்தபோதிலும், “கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங்கீதம் 27:4) என்று தாவீது தன்னுடைய வாஞ்சையை தெரிவிக்கிறார்.
“என் வீடு” என்று நாம் எவ்விடத்தில் உணர்ந்தாலும், இயேசுவே நமது நித்திய கூட்டாளி. இக்கால பாடுகளில் அவர் நம்மோடு இருக்கிறார். மேலும், நாம் அவரோடு என்றென்றும் வாழ நமக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 14:3). இப்பூமியின் குடிமக்களாக நாம் நிச்சயமற்றவர்களாக, எத்தகைய மாற்றங்களை அனுபவித்தாலும், நாம் எப்போதும், எங்கேயும், அவருடைய உறவில் நிரந்தரமாக தங்கலாம்.
மெய்யான உபசரிப்பு
“சாப்பிட்டீங்களா?” இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள விருந்தினர்களை உபசரிக்க முதலில் கேட்கப்படும் கேள்வி இது. விருந்தினர்களிடம் அன்பையும், கரிசனையையும் காட்டும் தமிழர்களின் வழக்கம் இது. இதற்கு நீங்கள் என்ன பதில் கூறினாலும், அந்த வீட்டினர் உங்களுக்கு சாப்பிட ஏதாவது சமைத்து விடுவார்கள். குறைந்தபட்சம், குடிக்க தண்ணீராவது தருவார்கள். உண்மையான அன்பு என்பது வெறும் வார்த்தையில் வாழ்த்து சொல்வது மட்டுமல்ல; மாறாக, உபசரிப்பில் காண்பிக்கப்படவேண்டும் என தமிழர்கள் நம்புகின்றனர்.
தயவு காட்டுவதைக் குறித்து ரெபேக்காள் நன்கு அறிந்திருந்தாள். பட்டணத்தின் வெளியேயிருந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதும், கனமான அந்த குடத்தை வீட்டிற்கு கொண்டுசெல்வதுமே அவளின் அன்றாட வாடிக்கை. ஆபிரகாமின் வேலைக்காரன், தன் பிரயாணத்தால் மிகவும் தாகமுற்று, அவளிடத்திலிருந்த தண்ணீரை கொஞ்சம் கேட்க, அவள் சற்றும் தயங்காமல் அதைக் கொடுத்து உதவுகிறாள் (ஆதியாகமம் 24:17–18).
அத்தோடு ரெபேக்காள் நிறுத்தவில்லை. தன் விருந்தாளியின் ஒட்டகங்கள் தாகமாய் இருப்பதைப் பார்த்து, உடனே அவைகளுக்கும் தண்ணீர் வார்க்க திரும்பிச் செல்கிறாள் (வச. 19–20). அந்த கனமான குடத்தைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் நடந்து, உதவி செய்ய அவள் தயங்கவில்லை.
அநேகருக்கு வாழ்க்கையே கடினமாயிருப்பதால், செயலில் காட்டப்படும் சிறிதளவு அன்பு கூட அவர்களை ஊக்கப்படுத்தி, புத்துயிரூட்டும். வல்லமையான பிரசங்கத்தை செய்வதும் திருச்சபையை நாட்டுவதும் மட்டும் தெய்வீக அன்பின் அடையாளமன்று; மாறாக, தேவையில் உள்ளோருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் தெய்வீக அன்பின் அடையாளமே.
வாகன நிறுத்துமிடத்தில் சண்டை
சங்கடத்தைத் தவிர்த்து, வாகனம் நிறுத்துமிடத்தில் அந்த காட்சி நகைச்சுவையாக இருந்திருக்கும். இரு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் ஒன்றையொன்று வழிமறித்துக் கொண்டிருப்பதை குறித்து சத்தமாக வாதிட்டனர், கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன.
இங்கே வேடிக்கையென்னவென்றால், இந்த சண்டை ஒரு சபையின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்தது. அந்த இருவரும் இப்போதுதான் அன்பு, பொறுமை, மன்னித்தல் குறித்த பிரசங்கத்தைக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் கோபத்தில் அனைத்தும் மறக்கப்பட்டன.
இதைப் பார்த்தமாத்திரத்தில் நான் சற்று சலிப்படைந்தேன். ஆனால் நானும் உத்தமன் இல்லை என்பதை உடனே உணர்ந்துகொண்டேன். பலமுறை நான் வேதத்தை வாசித்தப் பின்பும், சில நிமிடங்களிலேயே பாவமான சிந்தனைகளில் வீழ்ந்தேன்? “கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” (யாக்கோபு 1:23–24) அப்படிப்பட்ட நபரைப்போல் நான் எத்தனை முறை நடந்துகொண்டேன்?
யாக்கோபு தன் வாசகர்களை, திருவசனத்தை கேட்டு தியானிக்க மட்டுமல்லாமல் அதின்படி செய்ய அழைக்கிறார் (வச. 22). வசனத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்துவதே முழுமையான விசுவாசம் எனக் குறிப்பிடுகிறார்.
வேதவசனம் வெளிப்படுத்துவதை செயல்படுத்த வாழ்வின் சூழல் தடைபண்ணலாம். ஆனால், நாம் நம் தகப்பனிடம் கேட்டுக்கொள்கையில், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியவும், அவருக்கு பிரியமாய் நாம் நடக்கவும், நமக்கு நிச்சயம் உதவுவார்.
நற்கிரியை
சார்லஸ் ஸ்பர்ஜன் தன் பதின் பருவத்தில் தேவனோடு போராடினார். சபையிலேயே வளர்ந்தபோதும், பிரசங்கங்கள் அவருக்கு பயனற்றதும், அர்த்தமற்றதுமாய் தோன்றின. தேவனை நம்புவதென்பது பெரும்பாடாகவே இருந்தது. “தேவனை எதிர்த்து கலகம் செய்தேன்” என்று அவரே கூறுகிறார். ஒரு இரவின் கடும்பனிக்காற்று, தொடர்ந்து நடக்க பயணிக்க முடியாத பதினாறு வயது ஸ்பர்ஜன், அங்கிருந்த சிறிய மெத்தடிஸ்ட் ஆலயம் ஒன்றிற்குள் அடைக்கலம் புகுந்தார். அந்த போதகரின் பிரசங்கம் இவரையே குறிவைத்தது போலிந்தது. அத்தருவாயில், தேவன் அந்த போராட்டத்தில் வெற்றிபெற, சார்லஸ் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார்.
ஸ்பர்ஜன் பின்னர், “நான் கிறிஸ்துவோடு வாழ ஆரம்பிக்கும் முன்னரே, அவர் என்னோடு வாழ ஆரம்பித்துவிட்டார்" என்றெழுதுகிறார். மெய்யாகவே நாம் தேவனோடு வாழும் வாழ்க்கை என்பது நாம் இரட்சிக்கப்பட்ட நொடிலியிலிருந்து துவங்குவதில்லை. சங்கீதக்காரன், “தேவன் நம் உள்ளார்ந்த மனிதனை படைத்து, தாயின் கருவில் வைத்து உருவாக்குகிறார்” (சங்கீதம் 139:13) என குறிப்பிடுகிறார். அப்போஸ்தலன் பவுல், “நான் பிறவாததற்கு முன்னரே, தேவன் என்னை தெரிந்துகொண்டு, தம்முடைய ஆச்சரியமான கிருபையால் அழைத்தார்” (கலாத்தியர் 1:15) என்கிறார். நாம் இரட்சிக்கப்பட்ட உடனே தேவன் நம்மில் தம் கிரியையை நிறுத்திக்கொள்வதில்லை. “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:6)
நாம் அனைவருமே ஒரு அன்பான தேவனின் கரங்களில் முடிவடையா கிரியைகளாய் இருக்கிறோம். நம் முரட்டாட்டத்திலிருந்து, தம்முடைய இதமான அரவணைப்புக்குள் அவர் நம்மை நடத்துகிறார். ஆனால் நம்மேல் அவர் கொண்டிருக்கும் நோக்கம் வெறும் ஆரம்பமே. “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). நாம் எந்த பருவத்தினராய் இருந்தாலும், வாழ்வில் எந்த நிலையிலிருந்தாலும், நாம் அவருடைய நல்ல கிரியையாய் இருக்கிறோம் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.