Archives: ஏப்ரல் 2022

நம்மைப்போல, நமக்காக

தன் மகள், அவளுடைய புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது தன் தலைமுடியை இழந்ததால் அதை மறைக்க தொப்பி அணிந்திருப்பதையும், வெளியே தன்னோடு பேரங்காடிக்கு வந்திருக்கும்போதும் அதை கழற்ற அவள் சங்கடப்பட்டதையும் ப்ரீத்தி கவனித்தாள். தன் மகளுக்கு உதவ தீர்மானித்த ப்ரீத்தி, தன் நீண்ட, செழுமையான கூந்தலை மழித்து தன் மகளைப்போலவே தானும் மாறி, அவளின் வலியை அனுபவிக்க தெரிந்துகொண்டாள்.

ப்ரீத்தி தன் மகளுக்கு காட்டிய அன்பு, தேவன் தம் பிள்ளைகளுக்கு காட்டும் அன்பை பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவருடைய பிள்ளைகளாகிய நாம், “மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்கள்" (எபிரெயர் 2:14) என்பதினால், இயேசு நம்மைப்போல மனிதனாகி, நம்மை மரணத்தின் வல்லமையிலிருந்து மீட்கும்பொருட்டு, “மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (வச. 14). நம்மை தேவனோடு ஒப்புரவாக்க, அவர் “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது" (வச. 17).

ப்ரீத்தி, தன் மகளின் தாழ்வு மனப்பான்மையை மேற்கொள்ளுவதற்கு அவளுக்கு உதவ விரும்பினாள். எனவே அவளும் தன் மகளைப் “போலவே” மாறினாள். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனையான மரணத்தின் பிடியிலிருந்து நம்மை மீட்க இயேசு நமக்கு உதவினார். அவர் நம்மைப்போலவே மாறி, நம் பாவத்தின் விளைவை தன் மீது ஏற்றுக்கொண்டு, நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் மரித்து, மரணத்தை நமக்காக மேற்கொண்டார்.

நம்மைப் போல் மனிதனாக இயேசு கொண்டிருந்த விருப்பம், தேவனுடனான நம்முடைய உறவை உறுதிபடுத்தியது. அதுமட்டுமின்றி நம்முடைய கடினமான நேரங்களில் அவரை நம்பச்செய்தது. சோதனைகளையும், கஷ்டங்களையும் நாம் எதிர்கொள்கையில், பெலத்திற்கும், ஆதரவிற்கும் அவரை அண்டிக்கொள்ளலாம். ஏனெனில், அவர் “உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (வச. 18). ஒரு அன்பான தகப்பனைப் போல நம்மைப் புரிந்துகொண்டு, நம் மீது அக்கறை கொள்கிறார்.

ஒவ்வொரு நொடியும் முக்கியம்

நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் நூலக காப்பகத்தில் உள்ள ஒரு நின்றுபோன கடிகார முட்கள் திகிலான ஒரு கதையை சொல்கின்றன. அவை சரியாக 8:19 மற்றும் 56 வினாடிகள் நேரத்தைக் காட்டும், அதுவே அக்கடிகாரத்தின் சொந்தக்காரரான எலிசா மிச்சேல் என்பவர், அபலாசியன் மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஜூன் 27, 1857 அன்று காலை சறுக்கிவிழுந்து மரித்த சரியான நேரம்.

தற்பொழுது அவர் பெயரிலேயே மவுண்ட் மிச்சேல் என்றழைக்கப்படும் அந்த சிகரத்தில், அச்சிகரமே மிசிசிபியின் கிழக்கில் உள்ள உயரமான சிகரம் என்ற தன் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களை அப்பொழுது பல்கலைக்கழக பேராசிரியர் மிச்சேல் திரட்டிக்கொண்டிருந்தார் (அவர் கூற்று சரியே). அவர் விழுந்த இடத்தின் அருகேயேயிருந்த மலை உச்சியில் தான் அவர் கல்லறையும் உள்ளது.

சமீபத்தில், நான் அந்த மலையுச்சியில் ஏறினபோது தான் என் அழிவுத்தன்மையையும், மிச்சேலையும் ஒப்பிட்டு, எங்கள் இருவருக்கும் எவ்வளவு குறுகிய காலமே உள்ளது என்றுணர்ந்தேன். மேலும் இயேசு தன் வருகையை குறித்து தன் சீஷர்களிடம் ஒலிவ மலையில் கூறிய வார்த்தைகள் “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44) என்று கூறியதை சிந்தித்தேன்.

அவர் வந்து தம் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நாளையோ அல்லது நம்மை இவ்வுலகிலிருந்து தம்மிடமாய் அழைக்கப்போகும் காலமோ நம்மில் யாருக்கும் தெரியாது என்பதை இயேசு தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் ஆயத்தமாயிருக்கவும், விழித்திருக்கவும் (வச. 42) அவர் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார்.

டிக், டிக் என கடிகார முள்ளைப் போல நம் வாழ்க்கை வேகமாய் ஓடுகிறது. ஆனால் எவ்வளவு காலம்? நம் வாழ்வின் நொடிகளை நம் இரக்கமுள்ள இரட்சகரின் அன்பில் கழித்து, அவருக்காக பணியாற்றிக் காத்திருப்போமாக.

கழுதையின்மேல் ஒரு ராஜா

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாம் வழக்கமாக குருத்தோலை ஞாயிறு என்றழைக்கும் நாள். சந்தேகமேயில்லை, இயேசு எருசலேமுக்கு வருவது இது முதல்முறை அல்ல. ஒரு பக்தியுள்ள யூதனாக எல்லா வருடமும் மூன்று பெரிய பண்டிகைகளுக்கு தவறாமல் அங்கே சென்றிருப்பார் (லூக்கா 2:41–42; யோவான் 2:13; 5:1). கடந்த மூன்று வருடங்களாக கிறிஸ்து எருசலேமில் போதித்து, ஊழியமும் செய்தார். ஆனால் இந்த ஞாயிறு அப்பட்டணத்தில் அவர் வருகை முற்றிலும் வித்தியாசமாயிருந்தது.

ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் பட்டணத்திற்குள் வந்துகொண்டிருக்கும் வேளையில், கழுதையின்மேல் ஏறி எருசலேமுக்கு வந்த இயேசுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் (மத்தேயு 21:9–11). கடந்த மூன்று வருடங்களாக வேண்டுமென்றே தன்னை தாழ்த்திக்கொண்டவர், இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் முன்பில் பிரதான இடத்தை ஏன் எடுத்துக்கொண்டார்? தான் மரிக்கப்போகும் வெறும் ஐந்து நாட்களுக்கு முன்பு, அவரை ராஜா என்று அறிவித்த ஜனங்களின் கூற்றை ஏன் அங்கீகரித்துக்கொண்டார்?

ஐநூறு ஆண்டுகள் வயதான தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவே இச்சம்பவம் நடந்ததாக மத்தேயு கூறுகிறார் (மத்தேயு 21:4–5). அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ராஜா எருசலேமுக்குள் “நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” (சகரியா 9:9; மேலும் ஆதியாகமம் 49:10–11) என்பதே அத்தீர்க்கதரிசனம்.
வெற்றிகொண்ட ராஜா ஒரு நகரத்தினுள் பிரவேசிக்க இது முற்றிலும் வித்தியாசமான வழி. வெற்றிபெறும் அரசர்கள் பொதுவாக பராக்கிரமமான குதிரைகளில் தான் பவனி வருவார்கள். அனால் இயேசு யுத்த குதிரையில் ஏறி வரவில்லை. இதுவே இயேசு எப்படிப்பட்ட ராஜா என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் தாழ்மையாகவும், சாந்தமாகவும் வந்தார். இயேசு யுத்தத்திற்கு வரவில்லை; மாறாக, சமாதானத்திற்கு வந்தார். நமக்கும் தேவனுக்குமிடையே சமாதானம் உண்டாக்க வந்தார் (அப்போஸ்தலர் 10:36; கொலோசெயர் 1:20).

அரட்டைப் பேருந்து

2019ல் ஆக்ஸ்போர்ட் பேருந்து நிறுவனம், “அரட்டைப் பேருந்து” என்றொரு திட்டத்தை துவங்கினர். உடனே அது பிரபலமானது. இப்பேருந்தில், குறிப்பிட்ட நபர்கள் விருப்பமுள்ள பிரயாணிகளோடு பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 30 சதவிகித பிரிட்டன் மக்கள், ஒரு வாரத்தில் ஒரு நாளிலாகிலும் அர்த்தமில்லா அரட்டை அடிக்காமலிருப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கணக்கெடுப்பிற்கேற்ப இவ்வழிமுறை அமுலாக்கப்பட்டது.

நம்மில் அநேகர், ஏற்ற சமயத்தில் பேசுவதற்கு துணை இல்லா தனிமையை அனுபவித்திருப்போம். என் வாழ்வின் மிக முக்கியமான உரையாடல்களின் மதிப்பை குறிப்பிடுகையில், கிருபை பொருந்திய உரையாடல்களே எனக்கு ஞாபகம் வருகின்றன. அத்தருணங்கள் எனக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் அளித்து, ஆழமான உறவுகள் வளர உதவின.

கொலோசெய திருச்சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தின் முடிவில், தம் வாசகர்களை இயேசுவின் விசுவாசிகளுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை சொல்லி ஊக்கப்படுத்துகிறார். அதில் நாம் சந்திக்கும் அனைவரிடமும் நம்முடைய பேச்சின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் முறைகளைக் குறிப்பிடுகிறார். “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்” (4:6) என எழுதுகிறார். தங்கள் உரையாடல்களில் வெறும் வார்த்தைகள் மட்டும் இடம்பெறாமல், அவ்வார்த்தைகள் கிருபை பொருந்தினவைகளாய் இருக்கவேண்டுமெனவும், அதுதான் பிறருக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கும் எனவும் நினைப்பூட்டுகிறார்.

அடுத்தமுறை உங்கள் நண்பரிடமோ, சக பணியாளரிடமோ, அல்லது பேருந்திலோ, காத்திருக்கும் அறையிலோ நீங்கள் சந்திக்கும் அறிமுகமில்லாதவரிடம் ஆழமாக உரையாட வாய்ப்பு கிடைத்தால், உங்கள் இருவருக்கும் ஆசீர்வாதம் உண்டாகும்படி பேசுங்கள்.